ஈழத்தில் இராணுவத்திடம் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்!

மட்டக்களப்பில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் தொடர்ந்தும் காணப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்திவருகின்றனர்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் பாஸ் நடைமுறையைக் கொண்டுவருவதற்கு இலங்கை இராணுவம் முயற்சி மேற்கொள்வதாக பால் பண்ணை உரிமையாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கோறளைப்பற்று தெற்கு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மைலத்தமடு மற்றும் பெரிய மாதவணை ஆகிய மேய்ச்சல்தரை பகுதிகளில் வாழ்வாதார தொழிலாக கால்நடைகளை வளர்க்கும் பண்ணையாளர்களின் பெயர் விபரங்களை தரவை பகுதியில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினரிடம் சமர்ப்பிக்குமாறு பண்ணை உரிமையாளர்களிடம் மழைமண்டி இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினர் தெரிவித்துவருவதாக பாற்பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேய்ச்சல்தரை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத மரம் கடத்தல் மற்றும் கால்நடைகள் களவாடப்படுதல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு செல்லப்படுவதாகவும் இதனைத் தடுப்பதற்காகவே தாங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக இராணுவத்தினர் தம்மிடம் தெரிவித்ததாக பண்ணையாளர்கள் குறிப்பிட்டனர்.

இது தொடர்பாக மாவட்டச் செயலக அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோது தற்போது மாவட்டத்தில் பாஸ் நடைமுறை இல்லை எனவும் இராணுவத்தினருக்கு அவ்வாறான ஏதும் நடவடிக்கை தேவையாக இருந்தால் அவர்கள் தம்முடன் தொடர்புகளை ஏற்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

எனவே பால் பண்ணையாளர்கள் எவரும் தமது பெயர் விபரங்களை இராணுவத்திடம் கொடுக்க வேண்டாம் என அதிகாரிகளினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் மட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் இரு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு முறையில் இராணுவம் கெடுபிடிகளை ஆரம்பித்துள்ள நிலையில் அதில் ஒரு கட்டமாக பண்ணையாளர்களின் பெயர் விபரங்களைக் கோரியுள்ளதாக பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையின் முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முதல் மைத்திரி – ரணில் கூட்டரசாங்கம் வரை அனைவரும் மேச்சல் தரைப்பகுதிக்கென ஒதுக்கப்பட்ட சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இருந்து பண்ணையாளர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக தமக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்திவரும் நிலையில் இராணுவம் பாஸ் முறையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக பண்ணையாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

-athirvu.in

TAGS: