தமிழர் தாயகப் பிரதேசங்களில் ஒன்றான வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் பெய்த அடை மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் வட மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் வட மாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்பு மேலும் சிக்கலை உருவாக்கும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழர் தாயகமான வட மாகாணத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த 21 ஆம் திகதி இரவு தொடக்கம் மறுநாள் அதிகாலை வரை அடை மழை பெய்திருந்த நிலையில், பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் மக்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
மழை வெள்ளம் காரணமாக குளங்கள் நிரம்பியுள்ள நிலையில், அதன் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்தவர்கள் சிறிலங்கா இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் தன்னார்வ குழுக்களினால் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக இடர்முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் அத்துல கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இடர்முகாமைத்துவ நிலையம் இன்று மதியம் வெளியிட்ட அறிக்கையின் படி, வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 851 ஆக தாண்டியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 118 குடும்பங்களை சேர்ந்த 39 ஆயிரத்து 932 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கண்டாவளை பிரதேசத்தில் 7ஆயிரத்து 520 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 512 பேரும், கரைச்சி பிரதேசத்தில் 2ஆயிரத்து 778 குடும்பங்களை சேர்ந்த 9262 பேரும், பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் ஆயிரத்து 819 குடும்பங்களைச் சேர்ந்த 6ஆயிரத்து 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 6ஆயிரத்து 520 குடும்பங்களைச் சேர்ந்த 20ஆயிரத்து 737 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் ஆயிரத்து 466 குடும்பங்களைச் சேர்ந்த 4ஆயிரத்து 724 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 3ஆயிரத்து 688 குடும்பங்களைச் சேர்ந்த 11ஆயிரத்து 468 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
துணுக்காய் பிரதேசத்தில் 331 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 4 பேரும்,கரைதுறைப்பற்று பிரதேசத்தில் ஆயிரத்து 3 குடும்பங்களைச் 3ஆயிரத்து 460 பேரம் மாந்தை கிழக்கு 32 குடும்பங்களைச் சேர்ந்த 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மருதங்கேணி பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக 4257 குடும்பங்களைச் சேர்ந்த 12642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேரும் மன்னார் மாவட்டத்தில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வெள்ளம் குறைந்து வருவதாகவும், வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா இராணுவம் சுமார் 1000 படையினரையும், சிறிலங்கா கடற்படை 9 டிங்கி படகுகளுடன் ஆறு நிவாரணக் குழுக்களை, முல்லைத்தீவு, கிளிநொச்சியில் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தியுள்ளன.
சிறிலங்கா விமானப்படை பெல்- உலங்குவானூர்தி ஒன்றையும், வை-12 விமானம் ஒன்றையும், இரணைமடு மற்றும் முல்லைத்தீவு பகுதிகளின் வெள்ளநிலைமைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
இதற்கிடையே, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தில் நிவாரணப் பணிகளுக்காக சிறிலங்கா அரசாங்கம் 5 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இந்த நிலையில் வடக்கில் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் குறிப்பிட்டுள்ளார்.
-athirvu.in