விஜயகலா மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சுப் பதவியை பறிக்க வேண்டும் என்ற இனவாத கோசங்கள் தென்னிலங்கையில் மீள்எழத்தொடங்கியுள்ளது.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசிய விஜயகலா மகேஸ்வரனுக்கு மீண்டும் இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. நியாயமா? இதனை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கை மீண்டும் ஓங்கவேண்டும் என யாழில் பகிரங்க இடத்தில் இவ்வருட நடுப்பகுதியில் விஜயகலா மகேஸ்வரன் பேசியிருந்தார். இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நாம் குரல் கொடுத்தோம்.
அதையடுத்து, தான் வகித்த சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சுப் பதவியை விஜயகலா இராஜிநாமா செய்திருந்தார்.
புலிகளை ஆதரித்தமைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையிலும் விடுவிக்கப்பட்டிருந்தார்.
எனினும், அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், ரணில் அரசின் தீர்மானத்துக்கமைய மீண்டும் அவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளார். இதனை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது. அவருக்கு வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சுப் பதவி ஜனாதிபதியால் மீளப்பெறப்பட வேண்டும். இல்லையேல் மீண்டும் அவர் இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜிநாமாச் செய்யும் நிலைமையை நாம் ஏற்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.
-athirvu.in