‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்பது, தமிழ் பழமொழி. இவ்வாறான ஆழமான கருத்துகள், கால ஓட்டத்தில் எம் கண்முன் அதன் அர்த்தத்தைப் பறைசாற்றி நிற்கும் என்பது, அண்மைய அரசியல் களம் உணர்த்தி நிற்கின்றது.
அரசியல் என்ற தத்துவார்த்தத்தின் தன்மையைப் புரியாது, அரசியல் அரங்கில் தடம் வைப்பது என்பது கடினமாக இருந்தாலும் கூட, தமது ஆளுமையின் வெளிப்பாட்டினால், அதனை தமக்குச் சாதகமாக்கி அரசியல் செய்வதென்பது ஒரு கலையே.
இவ்வாறான ஓர் அரசியல் கலையை, முறையாக இலங்கை செயற்படுத்தியுள்ளதா என்ற கேள்வியே, தற்போது எழுந்துள்ளது. அண்மைய நாள்களில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலைமையானது, இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்திலிருந்து மீள்வதற்கு, நீண்ட காலத்தை ஈடுசெய்ய வேண்டியுள்ள நிலையில், இதனால் ஏற்படப்போகும் சுமைகளை, இலங்கையர்கள் ஏற்றாக வேண்டிய கட்டாயத்துக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அரசியலில் ஏற்படும் விருப்பு, வெறுப்பு என்ற நிலைமை, மூன்றாம் உலக நாடுகளில் சர்வ சாதாரணம் என்ற போதிலும், ஜனநாயத்தை நிலை நிறுத்துவதற்கான போராட்டமாக, சுதந்திரக்கட்சிக்கு எதிராக ஏனைய பலக் கட்சிகள் ஒன்றுதிரண்டு நடத்திய மக்கள் போராட்டம் என்பது, வெற்றி கண்டுள்ளது.
எனினும் குறித்த அரசியல் குழப்பம் நீடித்திருக்கும் பட்சத்திலோ அல்லது அசம்பாவிதங்களுக்கு வழிசமைத்திருக்மேயானால், இதன் உச்ச அழிவை சிறிய நாடுகள் தாங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை என்பதனை, அதிகார மேடையில் இருப்பவர்கள் உணரத்தலைப்படாதது சிந்திக்கப்படவேண்டிய விடயமே.
இந்தத் தருணத்தில் தமிழ் தலைமைகளின் செயற்பாடுகள் எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பிலான பாரிய கருத்தாடல்கள், வடக்கு கிழக்கில் பாரவலாகவே இடம்பெற்றிருந்தன. இதற்குக் காரணமாக, தமிழர்களின் நீண்ட காலப் பிரச்சனைகளுக்கான தீர்வை, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பெற முனையலாமா என்பதானதாகவே இருந்து வந்தது.
அதற்கும் அப்பால், நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நகர்வுகள் நிரந்தரமானதும் தமிழர்களது அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடியதுமான தீர்வைப் பெறுவதற்கு இடையூறாக அமைந்துவிடுமா என்பதான அச்சமும் காரணமாக அமைந்திருந்தது.
எனினும் ஜனநாயகத்துக்கான போராட்டம் என்ற செயற்பாட்டில்,
ஐ.தே.கவின் வெற்றி என்பதற்கு அப்பால், சிறுபான்மைச் சமூகத்தின் தலை தப்பியது என்பது மேலானதாக இருக்கும். ஏனெனில் இறுதிவரை சிறுபான்மைச் சமூகம், நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பது தொடர்பிலான மயக்கத்தில் இருந்தபோதிலும் கூட, தீர்ப்புகள் மறுதலிக்கும் பட்சத்தில் அது பாரிய பின்விளைவுகளுக்கானக் காரணியான அமைந்திருக்கும் என்பது உண்மையே.
இந்நிலையில், தற்போதைய அரசியல் சூழலைத் தமிழர் தரப்பு எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்போகின்றது என்பது தொடர்பிலான அவதானம் தேவையான ஒன்றாகவே உள்ளது.
வெறுமனே எதிர்ப்பு அரசியல் என்ற தளத்திலிருந்து மாறி, சாத்தியமான செயற்பாடுகளுக்கு அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கும் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சென்றுள்ளது. இந்த நிலைப்பாட்டை, கடந்து வரப்போகும் நாள்களே தெளிவுபடுத்தும் என்பதே உண்மை.
எனவே, தமிழர் தாயகப்பிரதேசத்தில் தேவையாகவுள்ள பல்வேறுபட்ட விடயங்களை நிவர்த்திக்கக் கூடியதும் அபிவிருத்தியுடன் கூடிய உரிமையை வென்றெடுத்தல் என்ற தளத்தை ஏற்படுத்த முனைப்பு காட்டவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
வெறுமனே உணர்ச்சிப்பேச்சுக்கும் அரசியலுக்கும் எதிரான விமர்சனங்களுமே, தமிழர்களின் அரசியல் தலைமைகளுக்கு இருக்குமேயானால், இறுதிவரை அதுவாகவே இருக்க வேண்டியேற்படும் என்பதை, தமிழர் அரசியல் தரப்பு உணரத்தலைப்பட்டுள்ளது.
ஏனெனில், கடந்த மூன்றரை வருடங்களாக, நல்லாட்சி என்ற அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் பிரதேசங்களில், எதையும் சாதிக்காத நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகித்த கட்சிகளின் அமைச்சர்களும் அவர்கள் சார்ந்தவர்களும் நிறைவான அபிவிருத்திப் பயணம் ஒன்றை வடக்கு, கிழக்கில் மேற்கொள்ள தலைப்பட்டிருந்தனர்.
இது, எதிர்கால அரசியலுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, பாரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்லதாகவே இருந்தது. இதன் காரணமாகவே, அண்மையில் குழுக்களின் பிரதித்தலைவராக உள்ள செல்வம் அடைக்கலநாதன், தனது கருத்தொன்றில், வடமாகாணத்தில் பல்வேறு கட்சிகள் காணப்படுவதால், எதிர்காலத்தில் சுதந்திரக்கட்சியோ வேறு சிங்கள கட்சியோ வடமாகாண சபையில் ஆட்சி அமைக்க கூடிய ஆபத்தான நிலை ஏற்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே, வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் வாழும் மக்களின் மனங்களில் அபிவிருத்தி ஏற்படாத வரையில், எந்த அபிவிருத்திகளும் மீள்குடியேறிய மக்களுக்கு திருப்பதிகரமாக இருக்கப்போவதில்லை என்பது உண்மையான விடயமாக, தமிழ் அரசியல் தலைமைகளால் உணரப்படுகின்றது என்பதான எண்ணப்பாடு, அண்மைய நாள்களில் வெளிப்படையாகத் தெரியவருகின்றது.
அது மாத்திராமின்றி, தமிழர் தரப்பு, சுயநல அரசியல் பயணத்தில் செல்வதால் ஏற்படும் பிரிவுகளும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் அறியத் தொடங்கியுள்ளனர்.
இச்சூழலில், காலத்துக்குக் காலம் பிரதேச செயலகங்களிலும் மாவட்ட செயலகங்களிலும் அபிவிருத்திக் குழு கூட்டங்களை நடத்துவதும் இதன்போது, காரசாரமான விவாதங்களை நடத்திவிட்டுப் பின்னர், மத்திய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலைச் செயற்படுத்துவதுமான நிலையில், இனிவரும் காலங்களில் தமிழ்த் தலைமைகள் அதை நிறுத்துவதற்கு முயற்சிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
ஏனெனில், வெறுமனே அபிவிருத்தியும் மக்களின் தேவைகள் தொடர்பாகவும் வாய்ப்பேச்சில் இருப்பதை விடுத்து, அரசாங்கமொன்றை அமைப்பதற்கு வழிசமைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களின் மனங்களை வெல்லக்கூடிய வேலைத்திட்டங்களையும் முனைப்புடன் செய்யவேண்டும் என்பதே, தமிழ் மக்களின் விருப்பமாகத் தற்போது காணப்படுகின்றது.
மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள், மீள்குடியேறிய மக்களுக்குப் போதுமானதாக இல்லை என்றும் அவர்களின் மனம் அறிந்த அபிவிருத்திகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நிலையில், 5 ஆண்டுகளை வட மாகாணசபையும் தமது நிலையுணர்ந்து செயற்படாது, காலம் கடத்திச்சென்றுவிட்டதான விசனமும் உள்ளது.
எனவே, மத்திய அரசாங்கத்தால் மறுக்கப்பட்ட சில சலுகைகள், மாகாண அமைச்சுகளின் ஊடாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த மக்களுக்கு, விழாக்களும் அறிக்கைகளுமே கடந்த காலங்களில் மிஞ்சியுள்ளது என்பது யதார்த்தம்.
அத்துடன், இன்றுவரை வடக்கில் பலரும் வீட்டுத்திட்டங்கள் இன்றியுள்ள நிலையில், அதனை பெற்றுக்கொடுக்க வேண்டியதும் அதன் மூலமாக வதிவிடப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கும் வழியேற்படுத்த வேண்டிய தேவைகள் உள்ள நிலையில், ஜனாதிபதியால் தெரிவிக்கப்பட்டிருந்ததன் பிரகாரம், இந்தியாவால் வழங்கப்பட்ட 50 ஆயிரம் வீடுகள், அமைச்சுகளின் இழுபறியால், நிதி மீளத் திரும்பி சென்றிருக்கம் நிலையில், அதை, மீளப் பெறுவதற்கோ, அது தொடர்பான ஏதுவான வழிவகைகளை ஏற்படுத்தவோ தமிழ் தலைமைகள் முனைப்பு காட்டவேண்டும்.
இவை மாத்திரமின்றி பல்வேறு மக்கள் சார்ந்த பிரச்சினைகள் அபிவிருத்தி குழு கூட்டங்களில் முன்வைக்கப்பட்டபோதிலும், அவை எவையும் நடைமுறைச்சாத்தியமற்ற சில விடயங்களாகவே உள்ளன என்றக் குற்றச்சாட்டு, மக்கள் மத்தியில் காணப்படுவது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய விடயமாகவே உள்ளது. இதன் காரணமாகவே, இன்று வரை மக்களின் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாதுள்ளது என்பது யதார்த்தம்.
அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா, என்பது தொடர்பிலும் அவை செவ்வனே செய்யப்படாவிட்டால், அவை தொடர்பில் அடுத்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் கூட்டிக்காட்டவும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலைப்படுதல் வேண்டும்.
எனினும், அவ்வாறான நிலைமைகள் பல அபிவிருத்திகுழு கூட்டங்களில் இடம்பெறுவதில்லை என்பதே உண்மை.
-tamilmirror.lk