‘சிம்மாசனத்தை கைவிட்டு’, முழு நேர அரசியல்வாதியாக மாறுங்கள், திஎம்ஜே-வுக்கு கைருட்டின் பரிந்துரை

முன்னாள் அம்னோ தலைவர், கைருட்டின் அபு ஹசான், ஜொகூர் பட்டத்து இளவரசரை (திஎம்ஜே), முழு நேர அரசியலில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளார்.

அம்னோ மூத்தத் தலைவரான தெங்கு ரசாலி ஹம்ஸா மற்றும் முன்னாள் போக்குவரத்து துணை அமைச்சர் தெங்கு அஸ்லான் இப்னி சுல்தான் அபு பக்கார் (பஹாங் சுல்தான் அஹமத் ஷாவின் தம்பி) ஆகியோரை ‘உதாரணமாக’க் கொண்டு, தெங்கு இஸ்மாயில் இதனைச் செய்ய வேண்டுமென கைருட்டின் கூறியுள்ளார்.

அது தெங்கு இஸ்மாயில் – பெரும்பாலும் அரசியல் அறிக்கைகள் மற்றும் விமர்சனங்களை வெளியிடும் – மீது, மக்களுக்குக் கண்ணியமும் மரியாதையும் பெருக வழிவகுக்கும் என கைருட்டின் தெரிவித்தார்.

“நாம் முடியாட்சி அரசியலமைப்பு முறையைப் பின்பற்றுகிறோம் என்பதற்காக, மக்கள் செவிமடுக்க விரும்பாத அறிக்கைகளை இளவரசர் தொடர்ந்து வெளியிட்டு வருவது நல்லதல்ல.

“ஆனால், அரசியலில் நீங்கள் திறமைசாலி என நினைத்தால், மரியாதைக்குரிய சிம்மாசனத்தில் இருந்து இறங்கிவிடுங்கள், இதன்வழி அரசாங்கத் தலைவர்களை விமர்சிப்பதை நீங்கள் தொடரலாம், அதுமட்டுமின்றி, மக்களும் பகிரங்கமாக உங்களை விமர்சிப்பார்கள்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசியல் விமர்சனங்களில், தெங்கு இஸ்மாயிலின் குரல், சமூக ஊடகங்களில் உயர்ந்து நிற்பது அறியப்பட்ட ஒன்று.

14-வது பொதுத் தேர்தலுக்கு முன்னர், ‘93 வயதுகாரர் பிரதமராக வர ஆசை’ என மகாதிரை விமர்சித்தது முதல், அண்மையில் இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சிட்டிக்கை அறிக்கையின் வழி தாக்கியது வரை தெங்கு இஸ்மாயில் அனைவருக்கும் பிரபலமான ஒருவர்.

தன்னை விமர்சனங்களில் இருந்து பாதுகாக்கின்ற ‘அரசியலமைப்புக்குப் பின்னால்’ தெங்கு இஸ்மாயில் மறைந்துகொள்ளக் கூடாது என்று, தற்போது அமானாவில் இணைந்திருக்கும் அவர் சொன்னார்.

“இது மிகவும் மோசமானது, தெங்கு மக்களை விமர்சிக்க முடியும், ஆனால் மக்கள் அவரை விமர்சிக்க முடியாது, காரணம் நாட்டின் அரசியலமைப்பு அவரைப் பாதுகாக்கின்றது.

“துவான்கு தொடர்ந்து இதுபோன்ற அரசியல் அறிக்கைகளை வெளியிட்டு வந்தால், மக்கள் இனி அரண்மனையை மதிக்க மாட்டார்கள் என்று நான் கவலைப்படுகிறேன்,” என்று கைருட்டின் மேலும் சொன்னார்.