ஒக்டோபர் 26, ஆட்சிக்கவிழ்ப்புச் சதியை உயர்நீதிமன்றம் மைத்திரியினதும், அவரது சட்ட ஆலோசகர்களினதும் முகத்தில் அறைந்து, முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ரணில் மீண்டும் பிரதமராகி இருக்கிறார். 52 நாள்களாக நீடித்த அரசியல் குழப்பம், அரசியல்வாதிகளை மாத்திரமல்ல, ஊடகவியலாளர்களை, நோக்கர்களை, எல்லாவற்றையும் தாண்டி நாட்டு மக்களைப் பெரும் அழுத்தத்துக்குள் தள்ளியிருந்தது. அதனால், உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் ரணிலின் பதவியேற்பையும் நாடு பெருமளவுக்குக் கொண்டாடியது.
இலங்கையின் ஜனநாயகமும் நீதித்துறையின் சுயாதீனமும் காப்பாற்றப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்களும் இராஜதந்திரத் தளங்களும் வர்ணித்தன. பாராளுமன்றத்துக்கு உள்ளும் நீதிமன்றத்துக்குள்ளும் ஆட்சிக்கவிழ்ப்புச் சதிக்கு எதிராகப் போராடியவர்கள் ‘கதாநாயகர்’கள் ஆனார்கள். இந்த ஆட்சிக்கவிழ்ப்புச் சதிக்குப் பெரும் முட்டுக்கட்டை போட்டவர்கள் என்கிற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தென் இலங்கையின் மத்தியதர வர்க்கமும் லிபரல் தளமும் பெருவாரியாக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.
மஹிந்த தரப்பும் ‘கறுப்பு’ ஊடகங்களும் கூட்டமைப்பைப் புலிகளின் புதிய வடிவம் என்று, பூச்சாண்டிப் புரளியைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன. வடக்குக் கிழக்கில், கூட்டமைப்பின் மீதான அதிருப்தியின் அளவு, பகுதியளவில் குறைந்திருக்கின்றது. ஒருதரப்பு, கூட்டமைப்பின் செயற்பாடுகளை, மனந்திறந்து பாராட்டவும் செய்தது. கூட்டமைப்புக்கு எதிரான மாற்று, தாங்களே என்று சொல்லிக் கொண்டிருந்த தரப்பினர், தங்களது வழக்கமான புலம்பல்களைப் புலம்பிக் கொண்டிருந்தார்கள். பேரங்கள் மூலமும், ஒப்பந்தங்கள் மூலமும் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய முக்கிய சந்தர்ப்பமொன்றைக் கூட்டமைப்பு கோட்டை விட்டு, ரணிலையும் அமெரிக்காவையும் காப்பாற்றி இருப்பதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
“….இலங்கையில் அசாதாரண சூழ்நிலைகள் நீடிக்கும் போதெல்லாம், அதிகமாகப் பாதிக்கப்படுவது, தமிழ் – முஸ்லிம் மக்களே. ஆகவே, அசாதாரண சூழ்நிலையை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளுக்கு, ஒத்துழைக்க வேண்டிய தேவை எமக்கு உண்டு. அதை நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம்…” எனும் தொனிப்பட உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர், எம்.ஏ.சுமந்திரன் ஊடகமொன்றிடம் தெரிவித்திருந்தார்.
ராஜபக்ஷக்களுக்கு எதிரான போராட்டத்தின் போதும், கூட்டமைப்பும் தமிழ் மக்களும் இதேநிலைப்பாட்டில் இருந்தே, 2015 ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்டார்கள். இருப்பதில் ஆகக்குறைந்த ஆபத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தெரிவே இந்நிலைப்பாடாகும். அதைவிடுத்து, பௌத்த சிங்களப் பேரினவாத இயந்திரத்தையோ, அதன் போக்கையோ ஒரு நீதிமன்றத் தீர்ப்போ, ஆட்சி மாற்றமோ இல்லாமற் செய்துவிடும் என்கிற எண்ணப்பாட்டின் பக்கத்தில், தமிழ் மக்கள் என்றைக்கும் இல்லை. எழுபது ஆண்டுகால அரசியல், தமிழ் மக்களுக்கு நிறையவே கற்றுக் கொடுத்திருக்கின்றது. தென் இலங்கையின் மனநிலையைத் தெளிவாக உணர்ந்தும் வைத்திருக்கிறார்கள். அதுசார்ந்த வகுப்பெடுப்புகளை, மக்கள் இப்போதெல்லாம் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.
அப்படியான அரசியல் வகுப்புகள், புதிதாக வருபவர்களுக்கே அவசியமானவை. அப்படியான சூழலில், ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிரான கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும் செயற்பாட்டையும் தமிழ் மக்கள் அவர்களுக்கு உரிய அளவில், அதன் உண்மைத் தன்மைகளோடு புரிந்து வைத்திருக்கிறார்கள். ஒப்பந்தங்களைச் செய்து கொண்டு, ரணிலுக்கோ மஹிந்தவுக்கோ, கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருக்கலாம் என்கிற வாதத்துக்கு, கடந்த நாள்களில் இருந்தே பதிலை வழங்கலாம்.
மஹிந்த, பிரதமராக நியமிக்கப்பட்டதும், கோடிகளில் பேரங்களை ஆரம்பித்து, ஆட்களைப் பிடிக்க நினைத்த ராஜபக்ஷக்கள், கூட்டமைப்பினரை மூளைச்சலவை செய்வதற்காக, சில சிரேஷ்ட ஊடகவியலாளர்களையும் சமூகத்தில் பிரபலமாக இருக்கும் நபர்களையும் நாடினார்கள். அதற்கு உடன்பட்ட சிலர், கூட்டமைப்பின் தலைமையோடும் பாராளுமன்ற உறுப்பினர்களோடும் பேரங்களைப் பேசினார்கள்; வானளவுக்கு வாக்குறுதிகளை, வாரி வழங்கினார்கள். அது, ஒரு கட்டத்தில் வேலைக்கு ஆகவில்லை என்றதும், தமிழ்ச் சூழலில் கருத்துருவாக்கிகளாக இருக்கும் இளைஞர்களைக் குறிவைக்க ஆரம்பித்தார்கள். அவர்களிடமும் மில்லியன்களில் பேரம் பேசி, கூட்டமைப்புக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டை முடுக்கிவிட நினைத்தார்கள்.
அதுபோல, தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலையை முக்கிய விடயமாக முன்னிறுத்தி, பேச்சுகளை நடத்துவதற்குத் தயார் என்று, நாமல் ராஜபக்ஷ பெரும் நாடகமாடினார். அரசியல் கைதிகளின் பெயர்கள், அவர்கள் மீதான குற்றச்சாட்டு விவரங்களை எடுத்து வைத்துக் கொண்டு, சட்டமா அதிபர் தான்தான் என்கிற தோரணையில் விடயங்களைக் கையாள்வதாகக் காட்டிக் கொண்டு, ஊடகங்களில் காட்சி தந்தார். அதனை, ஒவ்வொரு பேரம் பேசலின்போதும், பிரதான விடயமாக முன்வைத்தார். ஆனால், எந்தவொரு விடயமும் கூட்டமைப்பிடம் எடுபடவில்லை. அதிகபட்சம், அவர்களால் வியாழேந்திரனை மாத்திரமே பிடிக்க முடிந்தது.
பேரம் பேசல்களின் போது, அரசியல் கைதிகளின் விடுதலையைப் பிரதான விடயமாக முன்வைத்துப் பேசிய ராஜபக்ஷக்கள், ஆட்சிச்சதி முயற்சிகள் முறியடிக்கப்பட்டதும் பயங்கரவாதக் குற்றங்களோடு தொடர்ப்புபட்ட புலிகளை விடுதலை செய்ய முடியாது என்கின்றனர். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக இருந்தால், போர்க்குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினரையும் விடுவிக்க வேண்டும் என்று மைத்திரி பேசுகிறார். இவ்வாறான அரசியல் நிலைப்பாடு உள்ள தரப்போடு, பேரம் பேசுவதற்குச் செல்வது, தமிழ் மக்களை நடு வீதியில் விட்டுவிடாதாகத் தான் இருக்கும்.
கூட்டமைப்பின் அரசியல் மீதும், அதன் அடிப்படை அறத்தின் மீதும், ஆயிரம் கேள்விகள் தமிழ் மக்களுக்கு உண்டு. அந்தக் கேள்விகளைத் தமிழ்த் தேசிய அரசியல் தளம் எழுப்புவது அவசியமானது. குறிப்பாக, சம்பந்தன், சுமந்திரன் போன்ற ஏகநிலை ஆட்டக்காரர்களுக்கு எதிராக நின்று, கேள்விகளை எழுப்புவது தவிர்க்க முடியாதது. ஆனால், அசாதாரணமானதொரு நிலை ஏற்படும் போது, அதன் சாதக பாதகத் தன்மைகளை ஆராய்ந்து, அதில் எது சிறந்தது என்கிற நிலைப்பாட்டைப் பேசுவதும் அறமாகும்.
இந்த உலகம், இன்றைக்கு அரசாங்கங்களின் கூட்டாக இயங்குகின்றது. அதனை மீறியதோர் அரசியலோ, இயங்கு நிலையோ அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியான நிலையில், அரசாங்கங்களை ஒட்டுமொத்தமாகப் பகைத்துக் கொண்டு, எந்தவித காரியங்களையும் எந்தவொரு தரப்பாலும், ஆற்ற முடியாது. தமிழ் மக்கள் மத்தியில், பூகோள அரசியல் வகுப்பெடுக்கும் தரப்புகள், இதைத் தொடர்ச்சியாகச் சொல்லி வருகின்றன. அப்படியான நிலையில், ராஜபக்ஷக்களோடு பேரம்பேசலுக்குச் சென்றிருக்கலாம் என்கிற வாதம் எவ்வகையானது? அது, ஒட்டுமொத்தமாகத் தேர்தல் அரசியல் நிகழ்ச்சி நிரலின் போக்கில், கூட்டமைப்பைப் படுகுழிக்குள் தள்ளிவிடுவதற்கான முயற்சிகளின் போக்கிலானது இல்லையா?
தமிழ் மக்களின் மனநிலை என்பது, இருக்கின்ற இடைவெளியை, இனி எந்தவொரு காரணத்துக்காகவும் இழக்கக்கூடாது என்பதுவும் அதிலிருந்து அடுத்த கட்டங்களை அடைவது சார்ந்ததாகவுமே இருக்கின்றது. அப்படியான நிலையில், ராஜபக்ஷக்களின் கொடூரங்களை, முள்ளிவாய்க்கால் வரை சென்று அனுபவித்துவிட்டு, அவர்களை மீளவும் கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பார்கள் என்பது, அபத்தமான வாதம். ஏற்கெனவே, ஒருதடவை தீக்குள் விரலை வைத்து, அதன் காயங்களைத் தாங்கியிருக்கின்ற தரப்பை, குறுகிய அரசியலுக்காக, மீண்டும் தீக்குள் விரலை வைக்கக் கோருபவர்கள் குறித்துச் சிந்திக்க வேண்டும்.
எதிர்வரும் மார்ச் மாதமளவில், ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்லும் நிலைப்பாட்டுக்கு மைத்திரி – ராஜபக்ஷ கூட்டு வந்திருப்பதாகத் தெரிகின்றது. அப்படித் தேர்தலொன்று வருமாக இருந்தால், அந்தத் தேர்தலை நோக்கி, தமிழ் மக்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பதுவும், தெளிந்த முடிவாகவே இருக்கின்றது. அப்படியான தருணமொன்றை, எவ்வாறு எதிர்கொண்டு, அரசியல் போதனைகளைச் செய்வது என்பது குறித்துச் சிந்திப்பதுதான், தற்போதைக்குக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் முன்னுள்ள முக்கிய விடயமாகும்.
ஏனெனில், கூட்டமைப்பும் தமிழ் மக்களும், மைத்திரி – ராஜபக்ஷ கூட்டுக்கு எதிரான நபரையே, ஆதரிப்பார்கள். அப்படியான நிலையில், அதன் பின்னர் வரப்போகின்ற மாகாண சபை, பாராளுமன்றத் தேர்தல்களின் போதும், அந்த மனநிலையை மக்கள் பிரதிபலிப்பார்கள். அந்தநிலை, கூட்டமைப்பின் மீதான அதிருப்தி வாக்குகளை மீளவும், கூட்டமைப்பிடமே கொண்டுவந்து சேர்த்துவிடும்.
ஏற்கெனவே, மைத்திரியின் ஆட்டமே, கூட்டமைப்பின் அதிருப்திகளைக் குறைத்துவிட்டிருக்கின்றது. அப்படியான நிலையில், புதிதாகக் களம் காணுபவர்களும் மாற்றுத் தலைமைக் கோசத்தோடு ஏற்கெனவே களம் கண்டவர்களும் பெரும் பின்னடவைச் சந்திக்க வேண்டி ஏற்படும். அதன்போக்கில் நின்று, தமது தேர்தல் அரசியல் நலன் சார்ந்து யோசித்து, கூட்டமைப்பைக் கவிழ்ப்பதற்காகப் பேரம் பேசும் அரசியலுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கடந்த நாள்களில் சில தமிழ்த் தேசியத் தரப்புகளும் பேசினவா, என்கிற கேள்வியையும் எழுப்ப வேண்டியிருக்கின்றது.
(புருஜோத்தமன் தங்கமயில்)
(தமிழ்மிரர் பத்திரிகையில் (டிசம்பர் 26, 2018) வெளியான கட்டுரை. நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)