அரசியலமைப்பு மீறப்படும் போது, அதனைத் தடுத்து நிறுத்தும் தேவை தமிழ் மக்களுக்கு உண்டு: எம்.ஏ.சுமந்திரன்

நாட்டில் அரசியலமைப்பு மீறப்படும் போது, அதிகமாகப் பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் என்ற ரீதியில், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான உரிமை தமிழ் மக்களுக்கு உரியது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “நவம்பர் 07ஆம் திகதி வரவிருந்த அரசியலமைப்பு வரைபைத் தடுப்பதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

19வது திருத்தத்தில் இருந்த தமது அதிகாரங்கள் பறிக்கப்பட்டதை அறியாதவர் போன்று இந்த நடவடிக்கைகளை செய்திருந்தார். 19வது திருத்தத்தில் அகற்றப்பட்ட நிறைவேற்று அதிகாரங்களை இன்னும் தன்னுடன் இருப்பது போன்று ஜனாதிபதி செயற்பட்டு இந்த தீர்மானங்களை எடுத்துள்ளார்.

இந்த செயற்பாட்டின் போது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்நின்று செயற்பட்டது. இந்த செயற்பாட்டில் தான் நாட்டில் பெரும் வரவேற்பு இருக்கின்றது. ஆனால், இதில் சில விமர்சனங்களும் இருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்க நீதிமன்றம் சென்றதாக ஒரு விமர்சனமும் உள்ளது.

நாட்டில் ஜனநாயகம் வீழ்ச்சி அடைகின்றதாக அல்லது சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைகின்றதாக இருந்தால், மிகவும் பாதிக்கப்படுவது தமிழ் மக்கள். ஆகையினால், சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைவதை ஏற்க முடியாது. அதை தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழர்களாக சுயநலத்துடன் சிந்தித்திருந்தால் கூட நாங்கள் அதைச் செய்திருக்க வேண்டும். அரசியலமைப்பு மீறப்படுகின்ற போது, அதை மீறப்படாத தடுக்கின்ற உரிமை தமிழ் மக்களுக்குத் தான் உள்ளது. ஏனெனில், ஒரு அரசியல் தீர்வை நாம் எதிர்நோக்குவது, அரசியலமைப்பின் மூலமான ஒரு தீர்வு. புதிய அரசியலமைப்பு மூலமாக அல்லது அரசியலமைப்பு மறுசீரமைப்பு மூலமாக எழுதப்படும் தீர்வையே நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்.

அவ்வாறு எழுதப்பட்ட பின்னர் அரசியலமைப்பு மீறப்படுமாக இருந்தால், அந்த தீர்வில் ஒரு பிரியோசனமும் இல்லாமல் போய்விடும். தற்போதுள்ள சூழ்நிலையில், ஜனாதிபதி கலைக்க முடியாதென இருக்கின்ற போது, அவர் பாராளுமன்றத்தைக் கலைத்தார், பிரதமரை மாற்ற முடியாதென எழுதப்பட்ட போது, பிரதமரை மாற்றினார். அது நேரடியாகவே அரசியலமைப்பை பிரியோசனமற்றதாக ஆக்கும் செயற்பாடுகள். அரசியலமைப்பை பேணி அதன்படி, அனைவரும் ஒழுக வேண்டுமென்பதை இன்று தடுக்காவிடின், தீர்வு வந்தபின்னரும் அவர்கள் அதை மீறுவார்கள். அப்போது நாங்கள் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்படும். இந்த நிலையில் தான் அரசியலமைப்பை மீறிச் செய்யும் செயற்பாட்டை, தட்டிக் கேட்டோம். அதில் வெற்றியும் கண்டோம். இதனால் ஏற்பட்ட விளைவுகள் மிக மிக முக்கியமானவை.

நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. மஹிந்த ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டில் அடக்குமுறை ஒடுக்குமுறைகள் காணப்பட்டன. தற்போது மக்கள் நிம்மதியாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

மூன்று வருடகாலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது என சொல்லிக் கொண்டிருந்த பலருக்கு மஹிந்த பிரதமர் ஆசனத்திற்கு வந்தவுடனேயே தெளிவு வந்துவிட்டது. இந்த தீங்கு மீண்டும் எம் மத்தியில் வராதாவாறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம் என தமிழ் மக்களுக்கு நன்றாக தெரிந்திருக்கின்றது.

தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில், நாட்டில் ஜனநாயகத்தைப் பேணுவதற்காக, கூட்டமைப்பு செயற்பட்டுள்ளதென்ற நல்ல எண்ணம் உதித்துள்ளது. இது புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் மிகப்பெரிய பங்கை வகிக்கும். நாட்டைப் பிரிக்க முயலவில்லை. நாட்டிற்கு கேடு விளைவிக்க விரும்பவில்லை. அதை தடுத்து நிறுத்தியிருக்கின்றோம்.

சிறிய எண்ணிக்கையிலானவர்களாக நாங்கள் இருந்தாலும் கூட, நாட்டிற்காக பாரிய பங்களிப்பை தமிழ் மக்கள் செய்திருக்கின்றார்கள். புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளிலே சிங்கள மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் விலகுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். ஆகையினால், மிகத் துரிதமாக புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகளில் நாங்கள் ஈடுபடுகின்றோம்.

எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதிக்கு முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்த ஒரு வரைவு வெளிவரும். புதிய அரசியலமைப்பு உருவாக்கும் முயற்சி மக்கள் மத்தியில் கொண்டு வரப்படும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை நிரூபிக்க முழு மூச்சுடன் செயற்பட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு சர்வசன வாக்கெடுப்பிற்கு போகும் போது, ஏற்கனவே, குறிப்பிட்ட நல்லெண்ணம், மிகப்பாரிய பங்கு வகிக்கும். எதிர்வரும் வருடத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும்; மிகப் பாரிய சந்தர்ப்பம் எழுந்துள்ளது. தற்போது எழுந்த குழப்பத்தில் புத்துயிர் பெற்றுள்ளது.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: