2015இல் தீர்வு வரும், பின்னர், 2017இல் தீர்வு வரும், பின்னர் 2018இல் தீர்வு வரும் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக சிங்களத் தலைவர்களுடன் சேர்ந்து தமிழ் தலைவர்களும் ஏமாற்றியுள்ளனர். சிங்கள அரசின் ஏமாற்றுதல் என்பது இன்று நேற்றல்ல. அது எழுபது வருடங்களுக்கு மேலாக தொடரும் அநீதி. எழுபது வருட ஏமாற்ற வரலாறு. ஆனால் தமிழ் தலைவர்கள் ஈழ ஆயுதப் போராட்டத்திற்கு முன்னர் மக்களை ஏமாற்றியது போல இன்றும் ஏமாற்றுகின்றனர்.
புதிய அரசியலமைப்புக்காக இப்போது ஈழ மக்களும் அவர்களின் போராட்டமும் பலியிடப்படுகின்றது. புதிய அரசியல் அமைப்பு ஊடாக ஈழத் தமிழ் மக்களுக்கு தீர்வினை முன்வைக்கப் போவதாக இலங்கை அரசு உலகத்திற்கு வாக்குறுதி அளித்தது. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் அமைப்பில் தீர்வு முன் வைக்கப்படும் என்றும் உலகிற்கு வாக்களித்தது. ஆனால் தற்போதைய சூழலில் சிறிலங்கா அரசு கூறிவரும் கருத்துக்கள் எதிர்காலம் குறித்து பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈழத் தமிழ் மக்கள் இலங்கைத்தீவிற்குள் குறைந்த பட்சம் சமஸ்டித் தீர்வை கோரி வருகின்றனர். அதாவது சுயாட்சித் தீர்வாகும்.
காணி, பொலிஸ் அதிகாரத்துடன் அமைந்த இந்த சுயாட்சியை முன்வைத்தால் ஆவது சிங்கள ஆதிக்கம் மற்றும் ஆக்கிரமிப்பிலிருந்து தப்பிக் கொள்ள இயலும். ஆனால் அதற்கு சிங்கள அரசு இணங்குவதுபோல தெரியவில்லை. சமஷ்டி என்ற பெயர் இல்லாமலும் அத்தகைய தீர்வு வரலாம் என்று தமிழ் தலைவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் சிங்கள அரசின் செயற்பாட்டை பார்த்தால், புதிய அரசியலமைப்பு என்ற பெயரிலும் பழைய அரசியலமைப்பை கொண்டுவரலாம் என்பதுபோல காணப்படுகின்றன. அண்மையில் கண்டியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பௌத்த பிக்குகளுக்கு வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். பௌத்திற்கு முன்னுரிமை மற்றும் ஒற்றையாட்சி என்ற விடயங்கள் புதிய அரசியல் அமைப்பில் மாறாது, அவை ஏற்கனவே இருந்தவாறே பேணப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதைப்போல நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர், பாராளுமன்ற சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியல்லவும் இந்த விடயத்தை கூறியுள்ளார். ஏக்கிய இராட்சிய என்ற சொல்லே மூன்று மொழிகளிலும் இருக்கும் என்றும் ஒருமித்த நாடு என மாற்றப்படாது என்றும் ஏக்கிய இராட்சிய என்பது ஒற்றையாட்சியே என்றும் அவரும் கூறியுள்ளார். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருமித்த நாடு என்பது நிராகரிக்கப்பட்ட விடயம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழர்கள் போராடியது தமிழ் ஈழத்திற்காக. அதற்காவே இத்தனை ஆயிரம் போராளிகளும் பல லட்சம் மக்களும் மாண்டனர். இன்னமும் சிங்களம் ஈழத் தமிழர்களிடம் பலி கேட்கிறது.
இப்போதைய அரசும் மைத்திரியும் தமிழ் மக்களின் தயவாலும், தமிழ் தலைவர்களின் வாக்குறுதி மற்றும் ஒத்துழைப்பினாலும் ஆட்சிக்கு வந்தவர்கள். தமிழ் மக்களை மறவேன். அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்வேன் என்றும் ரணிலும் மைத்திரியும் மாறி மாறி கூறியிருந்தனர்.
இப்போது, இருவரும் மோதிக் கொண்டாலும் எதிரி நிலைகளில் நின்றாலும் தமிழழ்களை ஒற்றுமையாக எதிர்கின்றனர். புதிய அரசியலமைப்பு, புதிய அரசியலமைப்பு என்று மைத்திரியும் ரணிலும் கூவினார்கள். ஆனால் பழைய மந்தையில் புதிய கள்ளு என்பபதை இப்போது மீண்டும் சொல்கிறார்கள். இன்று கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றுக்கு கொடுத்துள்ள பேட்டியிலும் சம்பந்தர் அய்யா தீர்வுக்காக மற்றுமொரு திகதியை அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு புதிய அரசியலமைப்பு வருமாம். ஒருமித்த நாடு என்று வருமாம். பெப்ரவரி 4இல் இடைக்கால வரைபு முன்வைக்கப்படுமாம். ஒருமித்த நாடு என்ற சொல்லுக்கே இந்த அக்கப் போரா?
தமிழ் தலைவர்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் ஒற்றையாட்சிக்காக போராடுவார்கள் போல இருக்கிறது இன்றைய நிலமை. இதனை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தனி ஈழக் கோரிக்கையிலிருந்து சற்று இறங்கி சமஷ்டிக்கு வர இயலும். அதற்கு மறுத்தால் மீண்டும் தனி ஈழக் கோரிக்கைதான் தீர்வு. இதில் தலைவர்கள் உறுதியில்லை.
ஆனால் ஈழத் தமிழ் மக்கள் தமது தாகத்தை எடுத்துரைக்கும் தாயகத்தை எடுத்துரைக்கும் ஆண்டாக 2019ஐ மாற்ற வேண்டும்.
சிங்கள அரசின் உரிமை மறுப்பை, ஆக்கிரமிப்பு திட்டத்தை, ஏமாற்று வேலையை இந்த ஆண்டில் நினைவுபடுத்த வேண்டும். நாம் சோர்ந்துபோக இயலாது. எமது கொள்கைகளையும் உரிமையையும் விட்டுக் கொடுக்க முடியாது. தமிழ் மக்களின் சார்பில், மக்களின் வெளிப்பாடாக, மக்களின் ஊடாக எமது இலட்சியத்தை வலியுறுத்தும் ஊடகப் போராட்டத்தை ஈழம்நியூஸ் இந்த ஆண்டில் இன்னமும் வலிமையாக தொடரும். வாசகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து.
-eelamnews.co.uk