வளர்த்த கிடாயே மார்பில் பாயுதே; புலம்பெயர் தமிழர்களுக்கு கோபத்தை ஏற்படுத்திய சுமந்திரன்!

புலம்பெயர் தமிழ் மக்களிடையே தீவிரவாத போக்குடைய மிக சிறிய எண்ணிக்கையிலானோர் இருப்பதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, அவர்களால் இலங்கையில் நியாயமான அதிகார பகிர்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கொழும்புக்கு விஜயம்செய்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜெப்ரி வேர்ன் ஓர்டனுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே தமிழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறியிருக்கின்றார்.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் உடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு சென்றுள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய பாராளுமன்றின் இலங்கை நட்புறவுக் குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை நேற்று கொழும்பில் சந்தித்தார்.

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருக்கு தெளிவுபடுத்திய சம்பந்தன், அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தின் முக்கியத்துவத்தினை சுட்டிக் காட்டியுள்ளார்.

அதேவேளை இந்த அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தினால் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை பேணப்பட்டுள்ளமையானது கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் மூலம் நிரூபணமாகியதையும் எடுத்துரைத்தார்.

பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்தினை மீளக் கொண்டுவருவதற்கு தாம் வழங்கிய ஆதரவு கொள்கை அடிப்படையிலானதாகும் என்றும் நாடானது ஒரு பிரதமரோ அரசாங்கமோ இல்லாத ஒரு இக்கட்டான நிலைமையில் இருந்தபோது நாட்டு பொருளாதாரத்திற்கும் அரச கட்டமைப்புக்களின் சுமுகமான செயற்பாடுகளுக்கும் ஏற்படவிருந்த பாதக விளைவுகளை தடுக்கும் முகமாகவே அரசாங்கத்தினை மீள கொண்டுவருவதற்கான ஆதரவினை கொடுத்ததாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்.

இதன்போது புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன், கடந்த டிசம்பர் 7ம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்ட வரைபு யாப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதிக்கு முன்பதாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள சம்பந்தன், புதிய அரசியல் யாப்பானது நாடு ஒருமித்ததாகவும் பிரிக்கப்படமுடியாததாகவும் இருப்பதனை உறுதி செய்யும் ஒன்றாக அமையும் என்று கூறியுள்ளார்.

அதேவேளை மக்களும் பிராந்திய, மாகாண அரசாங்கங்களும் தமது வாழ்வில் தொடர்புடைய அன்றாட விடயங்கள் தொடர்பில் அதிகாரங்களை பயன்படுத்தும் வகையிலான நேர்மையான ஒரு அதிகாரப் பகிர்வினையும் கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஒரு புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்படுகின்ற போது அது நியாயமானதொன்றாக இருக்கும் பட்சத்தில் அதற்கு தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவினை கொடுப்பார்கள் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

13வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதிலிருந்து பதவிக்கு வந்த ஒவ்வொரு தலைவர்களும் அரசியல் யாப்பில் முன்னேற்றத்தினை கொண்டுவருவதற்கு பல்வேறு கருமங்களை மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்த சம்பந்தன், ஜனாதிபதி பிரேமதாசாவின் காலத்தில் மங்கள முனசிங்க அறிக்கை, ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் 2000ம் ஆண்டு அறிக்கை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் அனைத்து கட்சி தெரிவுக்குழு மற்றும்பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் அறிக்கை போன்றன அரசியல் யாப்பிற்கு அதிகளவு முன்னேற்றங்களை பரிந்துரைந்திருந்தன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த முப்பது வருடங்களாக பல்வேறு கருமங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை நாட்டினதும், மக்களினதும் நன்மை கருதி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தீவிரவாத போக்குடைய புலம்பெயர் சமூகம் மிக சிறிய எண்ணிக்கையிலேயே உள்ளனர் என கூறியுள்ளார்.

எனினும் இலங்கையில் நியாயமான அதிகார பகிர்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அத்தகைய நடவடிக்கைகளுக்கு பெரும்பான்மையான புலம்பெயர் சமூகம் தமது ஆதரவினை வழங்கும் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

கடும் போக்குடைய புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் தாம் எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது என தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இலங்கையில் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் அத்தகைய கடும்போக்காளர்களை மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

-athirvu.in

TAGS: