“விடுதலைப்புலிகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டவர்கள் அல்ல. தமிழரசுக்கட்சியில் உள்ள அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இங்கு இருந்தவர்கள் அல்ல. அதனால் அவர்கள் விடுதலைப்புலிகளை பற்றி முழுமையாக தெரியாதவர்கள்“
வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இப்படி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் வீட்டில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, இவ்வாறு தெரிவித்தார்.
“தமிழரசுக்கட்சியிலுள்ள அனைவரும் விடுதலைப்புலிகளிற்கு ஆதரவானர்கள் அல்ல“ என்றும் குறிப்பிட்டார்.
“விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னுடைய காலத்தில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தவர். அதேபோன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது காலத்திற்குள் தீர்வு கிடைக்க வேண்டுமென்று முயற்சி செய்கின்றார். அதை மதிக்க வேண்டும்.
பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவரல்ல.விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் ஜனநாயக தன்மையை எப்போதும் கைக்கொண்டவர்கள். அதனால் தான் கிராம அமைப்புக்கள், மக்கள் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. ஜனநாயகத்திற்கு விரோதமாக விடுதலைப் புலிகள் எந்தக் காலத்திலும் செயற்படவில்லை. தமிழரசுக்கட்சியில் இருக்கும் சிலர் அந்தக் காலங்களில் இருந்தவர்கள் அல்ல. அதனால் அவர்கள் சில விசயங்களை அறிந்து கொள்ளாமல் இருக்கலாம்“ என்றும் தெரிவித்துள்ளார்.
-eelamnews.co.uk