சிறப்புக்கட்டுரை: ஹிஸ்புல்லா கிழக்குஆளுனரான மர்மம் என்ன? மைத்திரி-மகிந்தவின் புதிய கணக்கு

பாக்குநீரிணையிலும் அக்கரையிலும் இக்கரையிலும் ஈழத்தமிழ் பெயர்களை மையப்படுத்திய பேசுபொருட்கள் இன்றைய காலைப்பொழுதை பரபரப்பாக்கின.

நீரிணையின் அக்கரையில் ஏற்கனவே கொதித்துக்கொண்டிருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலை மையப்படுத்தி சசிகலா என்ற 46 வயதான இலங்கைப்பெண்ணும் புதியஅதிர்வுகளை ஏற்படுத்தினார்.

இவர் ஆலயத்தின் 18 படிவழியாக ஏறி ஐயப்பனைத்தரிசனம் செய்து திரும்பியதாகவும் தாம் அவருக்கு பாதுகாப்பு வழங்கியதாகவும் கேரள காவற்துறை அறிக்கையிட்டது. ஆனால் இவ்வாறாக கேரள காவற்துறை பறைஞ்ச விடயத்தை உடனேயே மறுத்தஅந்தப்பெண் சாமிதரிசனம் செய்ய முயன்றபோது தன்னைகாவற்துறை தடுத்துநிறுத்தியதால் தரிசனம் செய்ய முடியவில்லை என்றார்.

அக்கரையில் இலங்கைப்பெண்ணை மையப்படுத்திய இவ்வாறான அதிர்வுகள் இருக்க இலங்கையில் இந்த ஆண்டு கடும்அரசியல் அதிர்வுகள் வெளிப்படும் என்பதை அடுத்தடுத்துவரும் புதிய புதிய செய்திகள் அடையாளமிட்டுள்ளன.

முதலில் புதியஆளுனர்களின் நியமனங்கள் இடம்பெற்றன. அதில் உற்றுநோக்கலுக்குரியவகையில் மேல்மாகாணத்துக்கு அசாத்சாலியும் கிழக்கு மாகாணத்துக்கு ஹிஸ்புல்லாவும் ஆளுனர்களாக நியமிக்கப்பட்டனர். கிழக்;கின் ஆளுனரான ரோகிதபோகொல்லாகம கடாசப்பட்டு ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டமை தமிழ்மக்களை பொறுத்தவரை இக்கட்டான நிலையாகவேயுள்ளது.

ஆனால் எதிர்கால் தேர்தல் களங்களை மனதிலிருத்தி மைத்திரி மகிந்த தரப்பு இதனை நகர்த்தியுள்ளது. ஹிஸ்புல்லாவின் செய்த சில குயுக்தி நகர்வுகள் தொடர்பாக தமிழ்மக்கள் கடுமையான ஐயங்களை கொண்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது

இதற்கிடையே ஆளுனர் பதவிபெற்ற ஹிஸ்புல்லா தன்னுடைய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்துவிலக அவரது இடத்துக்கு, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் குருநாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார நியமிக்கப்படக்கூடுமென கூறப்படுகிறது.

இன்று 5 மாகாணங்களுக்குரிய ஆளுனர்கள் நியமிக்கப்பட்டாலும் வடமாகாணம் இந்தப்பட்டியலில் இடம்பெறவில்லை. எனினும் தென் மாகாணத்தின் முன்னாள் ஆளுனராக மார்ஷல் பெரேரா, வடக்கின் ஆளுநராக நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. ஆகையால் மலிந்தால் சந்தைக்கு வரக்கூடும்

இவ்வாறான ஆளுனர் செய்திகளுக்கு அப்பால் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரசதலைவர் தேர்தல்வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவே களம் இறக்கப்படுவாரென்ற செய்தி முதல் எதிர்க்கட்சித்தலைவரின் பணியகத்தை மீள வழங்கப்போவதில்லையென கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதான செய்திகள் வரை பலசெய்திகள் வந்தன.

சிறிலங்காவின் சட்டபூர்வ பிரதமர் மகிந்தவா? ரணிலா? என்ற 51 நாள் இழுபறிக்கு 2018இன் இறுதியில் தீர்வுகிட்டினாலும் மகிந்ததான் எதிர்க்கட்சித்தலைவர் என சயாநாயகர் கடந்த 18 ஆந்திகதி அறிவித்தார்.2019 பிறந்து 4 நாட்களாகியும் சிறிலங்காவின் உண்மையான எதிர்க்கட்சித்தலைவர் யார் என்பதில் துல்லிய விடைகாணப்படவில்லை.

மொட்டுக்கட்சியின்உறுப்புரிமையை பெற்றகொண்ட மஹிந்தராஜபக்ஷவிற்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவிவகிக்கும் தகுதி இல்லையென யானைகளின் சிலமுகங்களும் கூட்டமைப்பும் வியாக்கியானம் செய்கிறது. யானே எதிர்க்கட்சித்தலைவர் என இரா. சம்பந்தன் ஒருபுறமாகவும் மறுபுறத்தே விபக்ஷ நாயக்கயோ மம தமாய் என மகிந்தவும் எதிர்க் கட்சித்தலைவராக இழுபறிப்படுகின்றனர்.

இந்தநிலையில் எதிர்க்கட்சித்தலைவர் பணியகத்தையும் அவரது அதிகாரபூர்வ வதிவிடத்தையும் விட்டுக்கொடுப்பதில்லை என கூட்டமைப்பு இப்போது முடிவுசெய்திருக்கிறது. ஆயினும் இன்று காலை இடம்பெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்திலும் மஹிந்தவே எதிர்க்கட்சித்தலைவராக கடவுக என சபாநாயகர் கரு ஜயசுரியா மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதையும் அவதானிக்கவேண்டும்.

இதற்கிடையே எதிர்க்கட்சித்தலைவரான தனக்கு அதிகாரபூர்வப்பணியகம் இருந்தாலென்ன இல்லாமல்விட்டாலென்ன என் பணி அரசாங்கத்தை எதிர்த்துக்கிடப்பதேயென்கிறார் மஹிந்த.

இந்தஇடத்தில் ஒருவிடயத்தை அவதானித்துக்கொள்ளலாம். ஒருவேளை சட்டரீதியாக மகிந்தவுக்கு இந்தஉரித்துஇல்லாமல்விட்டாலும் சிறிலங்காவின் அரசியல்சூழலில் வெஸ்ற்மினிஸ்டர் நாடாளுமன்ற நடைமுறை தார்மீகத்தின் படி அது ஐக்கிய மக்கள்சுதந்திரகூட்டமைப்புக்குரிய பதவியாகவே நோக்கப்படுகிறது.

ஆகையால் எதிர்க்கட்சித்தலைமைத்துவத்தை தக்கவைக்க கூட்டமைப்புக்கு உரித்தில்லாமல் போனாலும் அதற்காக அது ஏன் தீவிரமாக போராடுகிறது?

அதில் காரணம் இல்லாமல் இல்லை. புதிய அரசியலமைப்பை நகர்த்தும் நகர்வில் முக்கிய இடத்தை எடுக்கும் அரசியலமைப்புச்சபையில் தமது இடத்தை தக்கவைப்பதற்காக இந்த நகர்வை இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஜோடிகள் எடுக்கக்கூடும்.

ஏனெனில் அரசியலமைப்புச்சபையில் ஜனாதிபதியின் பிரதிநிதி, எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சித்தலைவர் தனது பரிந்துரையுடன் நியமிக்கும் சிறுபான்மை பிரதிநிதிகளுக்கு இடமிருக்கிறது.

தற்போதைய நிலையில் அரசதலைவர் மைத்திரியின் பிரதிநிதி, எதிர்க்கட்சித் தலைவரென்றவகையில் மகிந்தவும் அவரது பரிந்துரையுடன் நியமிக்கும் பிரிதிநிதி ஆகியோர் 3 இடங்களை எடுத்தால் அரசியலமைப்புச் சபையின் ஆடுகளம் மாற்றமடையும். அரசியலமைப்புச் சபையில் ரணில் அணியின் பலம் உரசப்படும். இதனால்தான் தமிழ்தேசியக்கூட்டமைப்பு இப்போது இந்தவிடயத்தில் இறுதிவரை போராடுகிறது.

இதற்கிடையே சிறிலங்காவின் சுதந்திரதினமான பெப்ரவரி 4 க்கு முன்னர் அரசியலமைப்பு வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு வழிநடத்தல் குழுவில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. சுமந்திரன் பொய்கூறுவதாக அதே வழிநடத்தல்குழுவில் உறுப்பினராக இருக்கும் டிலான் பெரேரா போன்ற மகிந்தாவாதிகள் கொடிபிடிக்கின்றனர்.

இதேபோல புதியஅரசியலமைப்பை நேரடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க சுமந்திரன் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தமிழ்மக்களின் அதிகாரப் பகிர்வுக்கு பாதகமாக அமையுமென சிறிலங்காசுதந்திரக்கட்சியின் புதிய பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகரவும் எச்சரிக்கிறார்.

சுமந்திரன் கூறுவது போல பெப்ரவரி 04 க்கு முன்னர் புதியஅரசியலமைப்பு நாடாமன்றத்துக்கு கொண்டுவரப்படுமாயின் அதனை சுதந்திரக்கட்சி தோற்கடிப்பது உறுதியென்றும் தயாசிறி ஜயசேகர கச்சைகட்டியுள்ளார்.

இவ்வாறாக சுதந்திரக்கட்சிகச்சைகட்டல்கள் இடம்பெற ஐக்கியதேசியகட்சியின் சார்பாக எதிர்வரும் அரசதலைவர் தேர்தல்கள வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவே களம் இறக்கப்படுவாரென்ற புதிய செய்தியும்வெளிவந்தவிட்டது.

அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கூறிய இந்தச்செய்தியானது ரணிலின் இடத்தின் மீது விருப்புகொண்ட யானைகளின் அடுத்த நிலைத்தலைவர்களை நிச்சயம் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கும் என்பதால் யானைகள் முகாமிலும் இது தொடர்பான அதிர்வுகளை எதிர்வரும் காலத்தில் அவதானிக்காலம்.

ஆனால் ஒப்பீட்டுரீதியில் தற்போது யானைகள் முகாமில் ரணில் எதிர்நோக்கும் தலையிடியைவிட தனது கையில் உள்ள கையால் அதிக தலையிடியை எதிர்நோக்கும் ஒருநபராகமைத்திரியே மாறியுள்ளார். இந்த தலையிடியை நீக்கிக்கொள்ள அவர்கட்சியில் உள்ள தலையணைகளை அப்படியும் இப்படியும்மாற்றமுயல்கிறார்.

கட்சிக்குள் உள்ள தனது அதிருப்தியாளர்கள் கட்சித்தலைமையகத்தைக்கைப்பற்றக் கூடும் என்றபயத்தினால் தாய்லாந்துக்குப் பறக்கமுன்னர் முதலில் கட்சித் தலைமையகத்துக்கு பூட்டுபோட்டார்.

பின்னர் புத்தாண்டுடன் பணியகத்தை திறந்தவர் அதற்குள் சந்திரிகா ஆதரவாளர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முயன்றவர் நேற்று கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவையும் பதவிவிலகச்செய்தார்.

இதனையடுத்து மத்திய செயற்குழுக்கூட்டத்தின் உதவியுடன் அந்தபதவிக்கு மகிந்த ஒவ்வாமைகொண்ட தயாசிறி ஜயசேகரவையும் நியமித்தார். ஆக மொத்தம்;கட்சியை எவ்வாறு வழிநடத்துவதெனத் தெரியாமலும் சந்திரிகாவை எவ்வாறு எதிர்ப்பது எனப்புரியாமலும் மைத்திரி முட்டுச்சந்தில் முட்டிக்கொண்டு குழம்புவது பகிரங்கமாவே தெரிகிறது.

-eelamnews.co.uk

TAGS: