இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பது ஏன்?

இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டமை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கையின் கிழக்கு உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.

இவர்களில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்து வந்த, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாணத்துக்குரிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஹிஸ்புல்லா, அவரின் சொந்த மாகாணத்துக்குரிய ஆளுநராக நியமிக்கப்பட்டமை தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதிருப்திகளைத் தெரிவித்து வருகின்றனர்.

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா

“கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டமையானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பழிவாங்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளது” என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் கூறியுள்ளார்.

மேலும், கிழக்கு மாகாண தமிழ் மக்களின் மனங்களைப் புரிந்து கொள்ளாமல், ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமித்தமை, ஜனாதிபதியின் சுயநல அரசியல் செயல்பாடு எனவும் அரியநேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

வியாழேந்திரன்
வியாழேந்திரன்

இதேவேளை, தமிழ் தலைமைகள் ஜனாதிபதிக்கு எதிராக எடுத்த தொடர்ச்சியான முடிவுகள்தான், கிழக்கு ஆளுநர் நியமனத்துக்கு காரணமாகும் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் உள்ளுர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அரசியல் நெருக்கடி நிலவிய போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்துக்கு மாறாக, அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்த வியாழேந்திரன், பிரதியமைச்சுப் பதவியினையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்; “ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையிலேயே கிழக்கு மாகாணத்துக்குரிய ஆளுநரை நியமித்துள்ளார்” என்றும், “அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது குற்றம் சுமத்துவது பிழை” எனவும், அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. சிறிநேசன் கூறியுள்ளார்.

ஜி. சிறிநேசன்
ஜி. சிறிநேசன்

“கிழக்கில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர், ஒரு சமூகம் சார்ந்து செயற்படுவாராக இருந்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காத்துக் கொண்டு இருக்காது” எனவும் சிறிநேசன் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், “ஹிஸ்புல்லாவின் ஆளுநர் நியமனத்தினால் கிழக்குத் தமிழரசியல் குலுங்கத் தேவையில்லை” என்று, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகு தாவூத் குறிப்பிட்டுள்ளார். இவர், ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.

இவ்வாறான விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இன்று திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதேவேளை, இன்றைய தினம் மேலும் மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்களை, ஜனாதிபதி நியமித்துள்ளார். -BBC_Tamil

TAGS: