இஸ்லாமை துறந்த சௌதி பெண்ணுக்கு தஞ்சம் அளிக்கும் கனடா

தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி சென்று தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கின் பிரதான விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட சௌதி பெண்ணுக்கு கனடா தஞ்சம் அளித்துள்ளது.

18 வயதான ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் என்ற சௌதி பெண் பாங்காக் வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயன்றார்.

அவரது குடும்பத்தினர் அவரின் வருகைக்காக காத்துக்கொண்டிருப்பதால் குவைத்துக்கு திரும்ப வேண்டுமென தொடக்கத்தில் அவரிடம் கூறப்பட்டது.

அதற்கு மறுத்துவிட்ட அவர், விமான நிலையத்தின் ஹோட்டல் அறையை விட்டு வெளியே வராமல் தன்னைதானே அடைத்து கொண்டது சர்வதேச கவனத்தை பெற்றது,

இஸ்லாம் மதத்தை தான் துறந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். இவ்வாறு இஸ்லாமை துறப்பது சௌதி அரேபியாவில் மரண தண்டனை பெறுகின்ற குற்றமாகும்.

அதிகாரிகளுடன் 18 வயதான ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன்

அகதியாக ஏற்றுக்கொள்ள தகுதியுடையவர் என இவரை ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகள் முகமை தெரிவித்தது.

அகதிகள் தகுதிநிலை வழக்கமாக அரசுகளால் வழங்கப்படுகின்றன. ஆனால், நாடுகளால் இதனை வழங்க முடியாத பட்சத்தில் அல்லது அகதி அந்தஸ்து கொடுக்க விரும்பாத பட்சத்தில் ஐநாவே அதனை வழங்கலாம் என்று ஐநாவின் இணையதளம் தெரிவிக்கிறது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களிடம் பேசுகையில், “உலக அளவில் மனித உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக நிலைப்பாடு எடுப்பதில் கனடா உறுதியாக உள்ளது. ரஹாஃப் மொஹம்மத் அல்-குனனுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் எங்களிடம் கேட்டுக்கொண்டபோது, நாங்கள் ஏற்றுக்கொண்டோம்” என்று தெரிவித்தார்.

இலங்கை
இலங்கை

முன்னதாக, கைது செய்யப்பட்ட பெண்களின் உரிமைகளுக்காக போராடும் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய வேண்டுமென கனடா சௌதி அரேபியாவை கேட்டுக்கொண்டது.

சௌதி அரேபியாவை கோபமூட்டிய இந்த நடவடிக்கையால், சௌதி அரேபியாவிலுள்ள கனடா தூதர் வெளியேற்றப்பட்டார். எல்லா புதிய வர்த்தகங்களும் முடக்கப்பட்டன.

ரஹாஃப் மொஹம்மத் அல்-குனனுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்க கனடா சம்மதித்துள்ளதை ஐநா அகதிகள் முகமை வரவேற்றுள்ளது.

விமான நிலையம்

“ரஹாஃப் மொஹம்மத் அல்-குன்னின் விவகாரம் உலக நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது. உலக அளவிலுள்ள மில்லியன்கணக்கான அகதிகளின் ஆபத்தான சூழ்நிலை பற்றிய சிறிதொரு பார்வையை இது வழங்கியுள்ளது” என்று ஐநா அகதிகள் முகமையின் உயர் ஆணையர் ஃபிலிப்போ கிரான்டி கூறியுள்ளார்.

“அகதிகளின் பாதுகாப்பு அச்சுறுத்தலில் உள்ளது. எல்லா நேரத்திலும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய முடியவதில்லை. இந்த சம்பவத்தில், சர்வதேச அகதிகள் சட்டமும், மனிதகுலத்தின் மேலான மதிப்பீடுகளும் வெற்றி பெற்றிருக்கின்றன” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை
இலங்கை

முன்னதாக, ரஹாஃப் மொஹம்மத் அல்-குன்னின் விவகாரத்தை அதாவது இவருக்கு மீள்குடியுரிமை அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு ஆஸ்திரேலிய அரசை ஐநா அகதிகள் முகமை கேட்டுக்கொண்டது.

“இந்த விவகாரத்தை எல்லா வழக்குகள் போலவே இதனையும் கருணையுடன் கருத்தில் எடுத்துக் கொள்வோம்” என ஆஸ்திரேலிய உள்துறை அறிக்கை வெளியிட்டது.

மேலும், தனது பாஸ்போர்ட் தாய்லாந்து விமான நிலையத்தில் சௌதி அதிகாரியால் பிடிங்கி வைக்கப்பட்டுள்ளதாக குனன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு பாஸ்போர்ட் திரும்ப கிடைத்துவிட்டதாக கூறியுள்ளார்.

இஸ்லாமை துறந்த சௌதி பெண்ணுக்கு தஞ்சம் அளிக்கும் கனடா

பிபிசியிடம் பேசிய அல்-குனன் தற்போது நலமாக இருப்பதாகத் தெரிவித்தார். அந்நிய நாட்டில் தனக்கு தஞ்சம் கிடைக்கும் என நம்புவதாகவும் கூறியிருந்தார்

இதுவரை நடந்தது என்ன?

முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று பதினெட்டு வயதான ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் தனது குடும்பத்தினருடன் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது குடும்பத்தில் இருந்து தப்பிக்க முயற்சித்ததாகவும் ஆனால் தாய்லாந்தில் தரையிறங்கியதும் சௌதி அதிகாரிகள் தனது பாஸ்போர்ட்டை பிடித்துவைத்துக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் தன்னிடம் ஆஸ்திரேலிய விசா இருப்பதாகவும், தாய்லாந்தில் தங்குவதற்கு தான் விரும்பவில்லை என்றும் ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் தெரிவித்தார்.

சௌதியை விட்டு தப்பிய பெண்ணுக்கு உதவிய முகம் தெரியாதவர்கள்

சட்டத்தை மீறியதற்காக இந்த இளம் பெண்ணை தாய்லாந்து தடுத்து நிறுத்தியதாக செளதி அரேபியா தெரிவித்தது.

பாங்காக்கில் உள்ள சௌதி தூதரகம், அப்பெண்ணிடம் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான பயணச் சீட்டு இல்லை என்ற காரணத்திற்காகவே பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். மேலும் பாஸ்போர்ட் அப்பெண்ணிடம்தான் இருக்கிறது என அறிக்கையில் தெரிவித்தது.

இஸ்லாமை துறந்து

பிபிசியிடம் பேசிய இப்பெண், தாம் இஸ்லாம் மதத்தைத் துறந்ததாக கூறினார். ”சௌதி அரேபியாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டால் எனது குடும்பத்தால் கொல்லப்படுவேன்” என்றும் அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.

இதன்பிறகு ‘இனி இழப்பதற்கு எதுவும் இல்லை’ என்று கூறிய அவர் தனது பெயர் மற்றும் அடிப்படை தகவல்களை ட்விட்டரில் பகிர்ந்தார்.

மேலும் புகலிடம் கோரி உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். -BBC_Tamil