தமிழ் – முஸ்லிம் உறவு: பிட்டும் தேங்காய்ப்பூவும்

பல்லினங்களும் வாழ்கின்ற ஓர் ஆட்புலத்தில், எவ்வாறு சகிப்புத்தன்மையுடனும் பொறுமையுடனும் பரஸ்பரம் புரிந்துணர்வுடனும் நடந்து கொள்வது என்ற பாடத்தை, இலங்கையில் இனவாதிகள் மட்டுமன்றி, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களில் சிலரும், இன்னும் பட்டறிந்து கொள்ளவில்லையோ என்ற வலுவான சந்தேகத்தை, அண்மைக்கால சம்பவங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இரண்டு இனங்களைச் சேர்ந்த நபர்களுக்கு இடையில் நடக்கின்ற எல்லா விடயங்களும், இரு இனங்களுக்கும் இடையிலான முரண்பாடுகளாக உருவேற்றப்படுவதையும் சிறிய சம்பவங்கள் ஊதிப் பெருப்பிக்கப்படுவதையும் வெளிப்படையாகவே காணமுடிகின்றது.

தேசிய ரீதியாக முஸ்லிம்கள், சிங்கள இனவாதத்தின் நெருக்குவாரங்களை எதிர்கொண்டு வருகின்ற சூழலில், தமிழ் கடும்போக்குச் சக்திகளும் முளைக்கத் தொடங்கி இருக்கின்றன.

முஸ்லிம்கள் பாரபட்சம் காட்டுகின்றனர்; நிலத்தைப் பறிக்கின்றனர்; வியாபாரத்தைக் கைப்பற்றுகின்றனர்; மதம் மாற்றுகின்றனர்; எங்களுடைய கலாசாரத்தைக் கெடுக்கின்றனர்; அரசியல் அதிகாரத்தை விட்டுத் தருகின்றார்கள் இல்லை; முஸ்லிம்களுக்குள் அடிப்படைவாதம் ஊடுருவி இருக்கின்றது என்ற பிரசாரங்களோடு, இச்சக்திகள் உயிர்த்தெழுவதாகச் சொல்ல முடியும்.
பதிலுக்கு முஸ்லிம்கள் தரப்பிலிருந்தும், பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்ளும் சிலரின் ​நடத்தைகள், நிலைமைகளை இன்னும் சிக்கலாக்கி விடுவதாகத் தோன்றுகின்றது.

இனவாதமும் அவரவர்களுக்கு அவரவரின் மதமும் இனமும் முதன்மையானது என்ற எண்ணம், எல்லாக் காலங்களிலும் இருந்தே வந்திருக்கின்றது. ஆனால், மற்றைய மதங்கள், இனங்கள் பற்றிய புரிதல் இருந்தது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரை, தமிழர், முஸ்லிம்களின் உறவுக்குப் ‘பிட்டும் தேங்காய்ப்பூவும்’, ‘நகமும் சதையும்’ ஆகியவை உதாரணங்களாக எடுத்துக் காட்டப்படுவதுண்டு. அந்தளவுக்கு புவியியல், கலாசார, பண்பாட்டு அடிப்படையில் பின்னிப் பிணைந்த சமூகமாக, முஸ்லிம்களும் தமிழர்களும் வாழ்ந்தார்கள் என்பதைப் பாட்டி கதைகளில் கேள்விப்பட்டுள்ளதோடு, அனுபவங்களின் ஊடாகவும் கண்டிருக்கின்றோம்.

முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள், அபிலாஷைகள், தனித்துவம் என்பவற்றைத் தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழ்த் தலைமைகள், 40 வருடங்களுக்கு முன்பிருந்தே அங்கிகரித்து வந்தனர்.

தமிழர்களின் விடுதலை வேட்கைத் தீயில் முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். தமிழ் ஆயுதக் குழுக்களின் அப்பாவிக் குடும்பத்தினருக்கு, எத்தனையோ முஸ்லிம் குடும்பங்கள் தமது உயிரைப் பணயம் வைத்து, அடைக்கலம் கொடுத்த வரலாறுகள் இருக்கின்றன.

ஆனால், எந்த இடத்தில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவில் கீறல் விழத் தொடங்கியது என்பதைச் சுருக்கமாகவேனும் சொல்ல வேண்டியிருக்கின்றது.

அதாவது, வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு, இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களை நோக்கி எப்போது ஆயுதங்கள் திருப்பப்பட்டனவோ அந்தச் சந்தர்ப்பத்தில்தான், தமிழ், முஸ்லிம் உறவில் கீறல் விழுந்தது.

பிற்காலத் தமிழ் அரசியல்வாதிகள் இதுவிடயத்தில் மௌனிகளாக இருக்க, முஸ்லிம் அரசியல் தலைமைகள் தம்பாட்டில் செயற்பட்டுக் கொண்டிருந்தமை நம்பிக்கையீனங்களுக்கு இட்டுச் சென்றன என்பதை நினைவுபடுத்த வேண்டும்.

யுத்தம் முடிவடைந்த பிறகு, பழங்கதை பேசி, இன நல்லிணக்கம் என்று சொல்லிக் கொண்டு…. இனங்களுக்கு இடையிலான உறவைப் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சி செய்கின்றது.
சமகாலத்தில் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் பல விடயங்களில் ஒருமித்த நிலைப்பாடுகளையே எடுக்கின்றனர். வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு விருப்பமில்லை என்று தெரிந்திருந்தும் கூட, முஸ்லிம்களின் ஆதரவைத் தமிழ்த் தரப்புக் கோருகின்றது. அதேபோன்று, இனப்பிரச்சினைத் தீர்வு முஸ்லிம்களுடன் சம்பந்தப்பட்டதல்ல என்று கணிசமான தமிழர்கள் கருதுகின்ற போதும், முஸ்லிம்கள் அவ்வாறான ஒன்றுக்காக அவாவி நிற்கின்றனர்.

ஆனால், இரா. சம்பந்தனும் ரவூப் ஹக்கீமும் அல்லது ரிஷாட் பதியுதீனும் வடக்கின் தமிழ் அரசியல்வாதிகளும் கூடிக் குலாவிக் கொண்டிருக்கின்ற சமகாலத்தில், வடக்கில் ஆங்காங்கேயும் கிழக்கில் பரவலாகவும் ‘இராசதுரையும் இஸ்மாயிலும்’ முரண்பட்டுக் கொள்கின்றார்கள் என்பதே மன வருத்தத்துக்கு உரியதாக இருக்கின்றது.

அதாவது, இன நல்லிணக்கம் என்பது எங்கிருந்து உருவாக வேண்டுமோ அங்கு, இன உறவு ‘சாண் ஏற முழம் சறுக்கும்’ கதையாக இருக்கக் காண்கின்றோம்.

பௌத்த கடும்போக்கு சக்திகளோடு, வேறு இரு இனவாத அமைப்புகளும் இணைந்து இந்தியா, மியான்மாரில், முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்டு வருகின்ற சூழலில், தற்போது இலங்கையிலும் அச்சக்திகள், தமது திட்டங்களை அமுல்படுத்தத் தொடங்கி இருப்பதாக, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக, சிங்களக் கடும்போக்கு அமைப்புகள் சிலவற்றுடன், ஒரு சில தமிழ் அடிப்படைவாதச் செயற்பாட்டாளர்கள் சந்திப்புகளை மேற்கொண்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன.

மறுபுறத்தில், முஸ்லிம்களுக்குள் அடிப்படைவாதம் இருப்பதாகவும், அண்மைக்காலங்களில் வெளிநாட்டு முஸ்லிம் பெயர்தாங்கிய இயக்கங்களின் ஊடுருவல் உருவாகியுள்ளதாக, சிங்கள மக்களைப் போல, தமிழ் மக்களில் ஒரு பகுதியினரும் எண்ணுகின்றார்கள் அல்லது, அந்த எண்ணத்தை யாரோ ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

நிலைமை இப்படியே தொடருமானால், அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்கு, “ஒரு காலத்தில் முஸ்லிம்கள் என்றும் தமிழர்கள் என்றும் இரு இனக் குழுமங்கள் வாழ்ந்தனர். அவர்கள், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல, ஒரு காலத்தில் இருந்தனர் …….. என்ற தொனியிலேயே சரித்திரத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கும்.

அந்தளவுக்கு அதிகமான, மிக மோசமான இனவெறுப்பு நடவடிக்கைகள், அண்மைக்காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

உதாரணமாக. சில காலத்துக்கு முன்னர் இந்து சமய விவகார பிரதியமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்ட வேளையில், தமிழர்கள் தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன.

முஸ்லிம்களின் இறைச்சிக் கடைகளுக்கு எதிராக, வடக்கில் சில குரல்கள் கேட்டன. ஒரு மோசடிக்காரன் என, தற்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ள நாமல் குமார, முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கொலை செய்து விட்டு, தமிழர்களையும் முஸ்லிம்களையும் மூட்டிவிடும் கதை ஒன்றை கூறியிருந்தார்.

இதேநேரம், இன்பராசா என்ற முன்னாள் புலி உறுப்பினர், முஸ்லிம்களிடம் ஆயுதம் இருக்கின்றது என்ற குண்டைத் தூக்கிப் போட்டு, தமிழ் மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கியதுடன் முஸ்லிம்களுக்கும் தேவையற்ற சிக்கல்கள் ஏற்பட வித்திட்டார்.

அந்த நிலையில், முஸ்லிம் ஆசிரியைகள் ‘அபாயா’ ஆடை அணிந்து, பாடசாலைக்குச் செல்வதை ஒரு பாடசாலைச் சமூகம் எதிர்த்தது. அதில் ஆசிரியைகளுக்குச் சார்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்ப்பு வழங்கியுள்ள போதிலும், அவர்களுக்குப் பாடசாலையில் நேரசூசி வழங்கப்படவில்லை என்ற தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இதற்கிடையில், வரலாற்றில் முதற் தடவையாக, கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதை, தமிழ் தரப்பில் ஒரு பகுதியினர் அதிலும் குறிப்பாக ‘பேஸ்புக் போராளிகள்’ கடும் மோசமாக விமர்சிப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

வடக்கில், தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டதை அங்கு வாழும் முஸ்லிம்கள் விமர்சிக்காத அளவுக்கு, மிதமிஞ்சிய விமர்சனங்கள் ஹிஸ்புல்லா மீது முன்வைக்கப்படுகின்றமையானது, கிழக்கில் இனஉறவு நல்ல நிலையில் இல்லை என்பதற்கு ஒரு பதச்சோறாக அமைந்திருக்கின்றது.

இணைந்த வடக்கு, கிழக்கில் வரதராஜப் பெருமாள் முதலமைச்சராக இருந்தார். தனித்த கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக, முன்னாள் விடுதலைப் புலிப் போராளியான பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன் பதவி வகித்தார்.

ஆனால், முஸ்லிம்கள் அதற்காகவெல்லாம் போர்க்கொடி தூக்கியவர்களல்லர். ஆயினும், இன்று வடக்கையும் கிழக்கையும் இணைத்து, அதிகாரம் கேட்கின்ற ஒரு சமூகம், முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் ஆளுநர் அதிகாரத்தில் அமர்வதைக் கூட விரும்பவில்லை என்பதை, அது பற்றிய நியாயங்களுக்கு அப்பால் நின்று, முஸ்லிம் சமூகம் மிகவும் கவலையுடனேயே நோக்குகின்றது.

இவ்வாறான இரு காலகட்டத்தில், சாதாரண தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில், முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் ஒரு சில சம்பவங்கள் கிழக்கில் கடந்த சில நாள்களுக்குள் இடம்பெற்றுள்ளமை கவனிப்புக்குரியது.

ஏறாவூர், ஐயங்கேணியைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர், சவுக்கடியில் வைத்துத் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

அதேநேரம், மட்டக்களப்பு மாவட்டம், கொம்மாதுறை பிரதேசத்தில் வைத்து, முஸ்லிம் குடும்பஸ்தர் ஒருவரைத் தமிழ் இளைஞர்கள் சிலர் மிக மோசமாக தாக்குவதையும் அவரை நிர்வாணமாக்குவதையும் வெளிப்படுத்தும் ஒளிப்படக் காட்சிகள், கடந்த ஒருசில நாள்களாகப் பரவலாக, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதைப் பார்க்கின்ற முஸ்லிம்களுக்கு, மனக்கிலேசத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி தமிழர்கள் கூட, ‘என்னடா இது’ என்று முகம் சுழிக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றது. இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

முஸ்லிம் குடும்பஸ்தரைத் தாக்கியதற்கான காரண காரியம் எதுவாக இருப்பினும், தாக்கப்பட்ட விதம் நாகரிக, சமூக விழுமியங்களுக்கு அப்பாற்பட்டதாக நோக்கப்படுகின்றது.

இதே மாதிரியான பாணியில், தமிழர் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு, தாக்கப்பட்டிருந்தால் தமிழ்ச் சமூகம் அதற்கு எவ்விதம் எதிர்வினையாற்றி இருக்கும் என்ற கேள்வியை, முஸ்லிம்கள் எழுப்புகின்றனர்?

அத்துடன், ரணில் விக்கிரமசிங்க சார்பு ஆட்சியை நிறுவுவதற்காக, ஜனநாயகத்துக்காகப் போராடிய முஸ்லிம் அரசியல்வாதிகள், இதுவிடயத்தில் என்ன செய்யப் போகின்றனர் என்ற வினாவும் எழுப்பப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

மறுபுறுத்தில், களுவன்கேணியில் தமிழ் மாணவி ஒருவரை, முஸ்லிம் ஆசிரியர் ஒருவர் மதமாற்ற முயற்சித்ததாக, தமிழர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டிருக்கின்றது.

கிழக்கில், மட்டக்களப்பை மய்யமாகக் கொண்டு இரு இனங்களுக்கு இடையிலும் ஏற்பட்டிருக்கின்ற முரண்நிலையை, மேலும் அபாயத்துக்குள் தள்ளுவதாக இவ்வாறான சம்பவங்கள் அமைந்து விடுகின்றன.

பிரித்தாளும் கொள்கையில் எப்போதும் நம்பிக்கை வைத்துள்ள அதிகார வர்க்கம் தமிழ், முஸ்லிம்களிடையே முரண்பாடு இருப்பதையே விரும்பும். தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் எதிலும் ‘அரசியல்’ செய்யவே விரும்பக் கூடும்.

இதுதவிர, பிராந்தியத்தில் இயங்குகின்ற குறிப்பிடத்தக்க இனவாத அமைப்பொன்று, கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுவதுடன், கட்சி ஒன்றை ஆரம்பிக்கவும் முயற்சிக்கின்றது. முஸ்லிம்களையும் வழிகெடுக்க சில வெளிச் சக்திகள் முனையலாம் என்பதை மறுக்க முடியாது.

கள்வர்களும் கொள்ளையர்களும் பயங்கரவாதிகளும் அடிப்படைவாதிகளும் ஆயுததாரிகளும் கொலைகாரர்களும் மட்டுமே குற்றவாளிகள் அல்லர் என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இலங்கை அரசமைப்பின் பிரகாரமும் ‘ஐ.சி.சி.பி.ஆர்’ எனப்படும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச் சட்டம் உள்ளிட்ட, நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களின் பிரகாரமும் வாழ்வதற்கான உரிமை சிங்களவர்களைப் போலவே தமிழர்களுக்கும் தமிழர்களைப் போலவே முஸ்லிம்களுக்கும் இருக்கின்றது என்பதை எல்லோரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இனமுரண்பாடுகளுக்கு வித்திடும் இவ்வாறான செயற்பாடுகளில், ஈடுபடுவதெல்லாம் ஒரு சிறு குழுவினரே. எல்லா சமூகங்களிலும் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகின்றவர்கள் இருக்கின்றார்கள்; புல்லுருவிகளும் ‘உச்சாப்பு’ பேர்வழிகளும் இருக்கின்றார்கள்; பாரதூரம் தெரியாதவர்களும் படுமுட்டாள்களும் இருக்கின்றார்கள்.

ஆனால், இவர்களின் சிறுபிள்ளைத்தனமான காரியங்களுக்கு, தமிழ், முஸ்லிம் மக்கள் பலிக்கடாவாகி விடக் கூடாது. நமது வரலாற்றில் ஏற்பட்ட, முரண்பாடுகளின் அனுபவம் தந்த காயங்களை, ஒரு தரம் தடவிப் பார்க்க வேண்டும்.

அந்தவகையில், வடக்கிலும் கிழக்கிலும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையில் சிறியதும் பெரியதுமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற சம்பவங்கள், பெரும் ஆபத்தான முரண்பாடுகளை நோக்கி, இனஉறவை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.

இவை பொதுவாகவே, தற்செயல் அசம்பாவிதங்களாக இருந்தாலும் கூட, தமிழர்களையும் முஸ்லிம்களையும் மூட்டிவிட்டுக் கூத்துப் பார்ப்பதற்கு அசரீதியாக யாரோ முயல்கின்றார்கள் என்பதை, சாதாரண தமிழ், முஸ்லிம் மக்கள் புரிந்து கொண்டு, ஆறாம் அறிவைப் பயன்படுத்தினால் நிலைமைகளைத் தணிவடையச் செய்யலாம்.

-tamilmirror.lk

TAGS: