மார்ச் 20இல் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படுகிறது சிறிலங்கா குறித்த அறிக்கை

சிறிலங்கா தொடர்பான, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை,  வரும் மார்ச் 20ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்  சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது.

ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர், இந்த ஆண்டு பெப்ரவரி 25ஆம் நாள் ஆரம்பமாகி, மார்ச் 22ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

பேரவையின் நிகழ்ச்சி நிரல் வரைவு கடந்தவாரம் தயாரிக்கப்பட்ட போது, மார்ச் 20ஆம் நாள் சிறிலங்கா தொடர்பான விவாதம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில், சிறிலங்கா தொடர்பான அறிக்கையை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட், அல்லது பிரதி ஆணையாளர் பேரவையில் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் சிறிலங்கா தொடர்பான அறிக்கை  அடுத்தமாதம் பகிரங்கமாக வெளியிடப்படும். அதிகாரபூர்வமாக அந்த அறிக்கை மார்ச் 20ஆம் நாள் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதம் நடத்தப்படும் என்றும், பணியகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதியை மெதுவாகவே நிறைவேற்றும் நிலையில், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் புதிய தீர்மானம் ஒன்றை கொண்டு வரும் முயற்சிகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

TAGS: