போர் இன்னும் ஓயவில்லை – பொங்கும் தமிழீழ மனங்கள்!

போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் ஆகப் போகின்றன. இன்னமும் போரின் அக வடுக்கள் தீரவில்லை. இன அழிப்புப் போரின் எல்லா தடங்களையும் சிங்கள அரசு அழித்துவிட்டது. இன்னமும் எஞ்சியுள்ள ஈழ மனிதர்களையும் அழித்துவிட்டால் எந்தச் சிக்கலும் இல்லை என்ற யோசனையில்தான் நகர்வுகளை இன அழிப்பு அரசு முன்னெடுக்கின்றது. உண்மையில் போர் இன்னும் ஓயவில்லை. கத்தியின்றி, யுத்தமின்றி போர் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தமிழீழ மக்கள் அழிக்கப்படுவது நிறுத்தப்படவில்லை.

இன்று பொங்கல் ஆகும். பொங்கல் தமிழர்களின் தலைசிறந்த பண்பாட்டுப் பண்டிகை. தமிழ் மக்கள் இயற்கையை எந்தளவுக்கு மதித்தார்கள், உழைப்பை மதித்தார்கள் என்பதற்கு இப் பண்டிகை எடுத்துக்காட்டு. இயற்கையை தமிழர்கள் தெய்வதாக மதித்தார்கள். உலகில் இயற்கையை தெய்வமாக மதித்தவர்கள்தான் மூத்த குடியினம். அவர்கள் இப் பூமியையும் இயற்கையும் நேசித்தவர்கள், மதித்தவர்கள். எனவே தைப்பொங்கலை ஒரு இந்துப் பண்டிகையாக சுருக்கிப் பார்க்கக்கூடாது. தைப்பொங்கல் தமிழ்ப் பண்டிகை.

தமிழீழ நிழலரசில் தைப் பொங்கல் தமிழர் புத்தாண்டாக கொண்டாப்பட்டது. உண்மையில் தை முதல் என்பது தைப்பொங்கல் அன்றுதான். தமிழர்களின் புதிய வருடம் அன்றுதான் துவங்குகின்றது. போர் முடிவடைந்ததும், சிங்கள அரசு எல்லாவற்றையும் புதுப்பித்தது. தெருக்கள், கட்டங்கள் எல்லாம் செப்பனிடப்பட்டு, பளபளக்கச் செய்யப்பட்டாகிற்று. ஆனால் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களோ இன்னமும் குண்டும் குழியுமா, காயங்களும் சிதிலங்களுமாக காணப்படுகின்றன.

இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு திருடர்கூடட்டத்தின் வாழ்த்துச் செய்திகள் பலவும் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் இன்னல்கள் நீங்க வேண்டும் என்றும் அரசியல் தீர்வு தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ச, வாழ்த்து வெளியிட்டுள்ளார். ரணிலும் மைத்திரியும் தமிழர்களின் எதிர்காலம் சிறக்கட்டும் என்று வாழ்த்து வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்தால், வாழ்த்தாக தெரியவில்லை. நக்கலாகவும் சாபமாகவும் இருப்பதாக தென்படுகின்றன.

அடுத்த பொங்கலுக்குத் தீர்வு, அடுத்த பொங்கலுக்கு தீர்வு என்று வருடங்களை கடத்திய சம்பந்தன் அய்யாவும், இந்த ஆண்டில் தீர்வு கிடைக்கும் என்று மீண்டும் சொல்கிறார். தமிழ் மக்கள் ஒற்றுமையில்லை, தலைவர்களிடம் ஒற்றுமையில்லை என்று கசப்பான உண்மைகளை சொல்லியுள்ளார் முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் அய்யா. தமிழ் மக்கள் ஒற்றுமை அடைவது முக்கியமானது. நீ பெரிது, நான் பெரிது என்று பாராமல், நாடு பெரிது என்று இருங்கள் என்று தமிழீழ தேசியத் தலைவர் கூறிதை எம் சிரம் மேல் கொண்டு நம் பணிகளை நாம் ஆற்ற வேண்டும்.

உண்மையில் இந்தப் பொங்கல் தருணத்திலும் எங்கள் மனங்கள் பொங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தீர்வில்லை. காணிகள் விடுவிப்புக்கள் இல்லை. மக்கள் தெருவில் போராடுகிறார்கள். இன அழிப்புப் போரிற்கு நீதி இல்லை. அரசியல் தீர்வில்லை. சமஸ்டி, ஒற்றையாட்சி. அதைக் குடுக்க விடமாட்டோம், இதைக் குடுக்க மாட்டோம் என்று அடம்பிடிப்புக்கள் வேறு. இவைகளால் தமிழீழ மனங்கள் பொங்கி பொங்கி அழிந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், இவைகளை இப்படியே விடவும் முடியாது. நாமும் அப்படி அழிய முடியாது. இந்த நாள் எமக்கு உயிர்பூட்டும் நாளாக அமைய வேண்டும். எமது இலட்சியங்களையும் கனவுகளையும் வெல்லுகிற வகையில் நம்மை உயிர்பிக்கவும் பூத்துக்கொள்ளவும் செய்கிற நாளாக வேண்டும். நமது இனத்தின் உயிர்ப்பே இந்த தேசத்தின் விடுதலைப் போராட்டத்தை எழுச்சி கொள்ளச் செய்யும். நாம் எமது தேசத்தை இழந்து வாழ முடியாது. நசிந்து அழிய முடியாது. தமிழீழம் என்றும் தமிழர்களின் தணியாத தாகம்.

ஈழம்நியூஸ் வாசகர்களுக்கு தமிழர் திருநாள் தைத்திருநாள் – தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.!

-eelamnews.co.uk

TAGS: