ஈழத்தில் நேர்மையாக உண்மையாக எழுதுவது தற்கொலைக்கு சமமானது!தீபச்செல்வன் பேட்டி

ஈழத்தில் போராளிகளின் குழந்தைகள், முன்னாள் போராளிகள், இளந்தலைமுறையினர் எனப் பலரும் எழுதத் துவங்கியுள்ளனர். நாங்கள் எழுத்தால் போராட வேண்டிய காலம் இது. போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைப்பதிலும் ஏற்றுக்கொள்வதில் மாத்திரமே எங்களுடைய இருப்பு தங்கியுள்ளது என்று ஈழ எழுத்தாளரும் கவிஞருமான தீபச்செல்வன் தெரிவித்தார்.

நடுகல் என்னும் நாவல் சென்னைப் புத்தகத் திருவிழாவில் வெளியாகி விற்பனையில் சாதனை படைத்துவருகின்றது. இதுவரைக்கும் 600 பிரதிகள் விற்று தீர்ந்துவிட்டதாக அதன் பதிப்பாளர் வேடியப்பன் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், நடுகல் குறித்து அதன் ஆசிரியர் தீபச்செல்வனுடன் பேசினோம்.

ஈழ இலக்கியப் பரப்பின் தற்கால நிலைமை எப்படி இருக்கிறது?

90களிலிருந்து 2009 வரையான காலத்தில் ஈழ இலக்கியம், நிலத்திலும் புலத்திலும் பெரு வளர்ச்சி கண்டது. 2009 முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு ஒரு தேக்க நிலைமை இருந்தது. குறிப்பாக கவிதைகள் மாத்திரம்தான் வெளிவந்திருக்கின்றன. இப்போது ஈழ இலக்கியத்தில் பல முக்கிய நூல்கள் வெளிவருகின்றன. போரையும் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தையும் பேசும் இலக்கியங்கள் இக்காலத்தில் எழுகின்றன. இந்த வீச்சு இன்னமும் அதிகரிக்கும். இந்த நூற்றாண்டின் தலை சிறந்த தமிழ் இலக்கியங்களை ஈழ எழுத்தாளர்கள்தான் படைப்பார்கள்.

நடுகல் பேசும் அரசியல் என்ன? அல்லது நடுகல் எந்த உணர்வைக் கொண்டு பயணிக்கிறது?

நடுகல் அரசியல் பேசவில்லை. எங்களுடைய வாழ்வை பேசுகின்றது. குழந்தைகளின் பார்வையில் போரையும் விடுதலைப் போராட்டத்தையும் பேசுகின்றது. விடுதலைப் போராளிகளின் மகத்துவத்தை குழந்தைகளின் பார்வையில் இயல்பாக பேசுகின்ற நாவல். வளர்ந்த கதாபாத்திரங்கள் அரசியல் பேசலாம். ஆனால் குழந்தைகள் அரசியல் பேசுவதில்லை. அவர்கள் யாருடனும் பகைமை கொள்வதில்லை. இங்கே குழந்தைகளுடன்தான் யுத்தம் நடந்தது. அதன் விசாரணைதான் நடுகல் என்று சொல்லலாம்.

நடுகல்லை எழுதுவதற்கு தூண்டுகோளாய் எது அமைந்தது?
நீங்கள் இந்தக் கேள்வியை கேட்கும்போதுதான் நானும் நடுகல்லின் தூண்டுதல் பற்றி யோசிக்கிறேன். நடுகல்லில் என் கதையும் இருக்கிறது. என்னுடன் வாழ்ந்த மனிதர்களின் கதையும் இருக்கிறது. என் பள்ளித் தோழர்களுக்கும் பல்கலைக்கழகத் தோழர்களுக்கும் நெடுநாளாக சொல்லி வந்த கதைதான் நடுகல். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு முன்னர் பள்ளிக்கூடத்தில் படித்த நாட்களில், நடுகல் கதையை ஒரு சிறுகதையாக எழுதி ஒரு சிற்றிதழுக்கு அனுப்ப முயன்றேன். இது எனக்குள் சிறுவயதிலிருந்தே நெஞ்சிற்குள் குடைந்த கதை. போருக்குள்ளும் வறுமைக்குள்ளும் வாழ்ந்த வாழ்க்கையும் கடந்து வந்த பாதைகளும்தான் நடுகல்லின் தூண்டுகோல்.

நடுகல் ஊடாக, மக்களுக்கு எதைக் கொண்டு சேர்க்க விரும்புகிறீர்கள்?

நடுகல், எமதினத்தின் போராட்டப் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு உணர்த்தும். போருக்குள்ளும் போராட்ட எழுச்சிக்குள்ளும் இருந்த ஈழ நிழரசிற்கு இந்த நாவல் அழைத்துச் செல்லும். இந்த நாவல் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் சிங்கள பத்திரிகை நண்பர் ஒருவர் கூறினார். இந்த நாவலில் ஆயுதப் போராட்டத்தை தேடிச் செல்லும் சிறுவனையும், அந்த அண்ணணை தேடும் தம்பியின் தவிப்பையும் சிங்கள மக்கள் உணர்ந்து கொள்வார்கள். இந்தச் சிறுவர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட பகைமைக்கு சிங்கள மக்கள் நிச்சயம் வருந்துவார்கள்.

இந்தப் புத்தகம் வெளிவருவதில் ஏதாவது இடர்கள் ஏற்படும் என்று கருதியிருக்கிறீர்களா?

நாவலை. ஈழத்தில் வெளியிட வேண்டும் என்று விருப்பம். இதுவரையில் எந்த புத்தகங்களுக்கும் வெளியீட்டு விழாக்கள் செய்ததில்லை. தமிழர் பூமி நூலை கடைகளில் விற்பதையே இலங்கை இராணுவம் மிரட்டியது. எந்த நகரத்தில் இந்தக் கதை நிகழ்ந்ததாக எழுதப்பட்டதோ, அந்த நகரத்தில் வாசிக்கப்படவும் எழுதப்படவும் வேண்டும் என நாவல் என்னுரையில் வலியுறுத்தியதையே மீண்டும் நினைவுபடுத்துவேன். நடுகல் எங்கள் நிலத்தின் தலைமுறைகளுக்கு சென்று சேர வேண்டும். இளைய தலைமுறையினர் பலரும் நடுகல் நாவலை வாசிக்க ஆர்வமாயுள்ளனர். வெளியீடு செய்ய வலியுறுத்துகிறார்கள். எனக்குள்ள ஆறுதலும் நம்பிக்கையும் அவர்கள். அதனால் எந்த இடர்களையும் தாண்டி, விரைவில் கிளிநொச்சியில் வெளியீடு நடைபெறும்.

போருக்குப் முன்னர் இருந்த ஈழத்து இலக்கிய எழுத்துத்துறை போருக்குப் பின்னர் எப்படி இருக்கிறது?

போர்க்காலத்தில், அதாவது குண்டு மழை பொழிந்த நாட்களிலும் ஈழத்தில், வன்னியில் இலக்கிய படைப்பகளின் விழாக்கள் நடந்தேறின. வெளிச்சமும் வெள்ளிநாதமும் படைப்புக்களை வெளிக்கொணர்ந்தன. போராளிகளுக்கும் மக்களுக்கும் பல இலக்கிய களங்கள் இருந்தன. வன்னியில், கிளிநொச்சியில் அடிக்கடி புத்தக வெளியீடுகள் நடக்கும். கதியும் நேரத்தியும் மிக்க பல படைப்புக்கள் எழுந்தன. இன்றைக்கு தொடர்பாடல் துறை எவ்வளவோ வளர்ச்சி கண்டும் கிளிநொச்சியின் வன்னியின் அந்த இலக்கிய எழுச்சிப் போக்கு இல்லை. ஒருசிலர் பல அழுத்தங்களை தாண்டியும் மறைந்தும்தான் இலக்கியம் படைக்கின்றனர். இப்போது ஈழத்திற்கு வெளியில் தமிழகத்திலிருந்து சில முக்கிய ஈழப் படைபுக்கள் பலவும் வெளியாகின்றது.

ஈழத்துக் கவிஞனாக தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக கால் பதித்த அனுபவம்?

ஒரு கவிதைக்கான உழைப்பைக்கு சற்றும் குறைந்ததல்ல பாடல் ஒன்றிற்கான உழைப்பு. சினங்கொள் என்ற ஈழம் குறித்த படத்தில் வசனமும் பாடல்களும் எழுதியுள்ளேன். தமிழக, இந்திய, சிங்கள கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய படம். ஈழம் பற்றிய சிறந்த திரைப்படாக அமையும். அந்தப் படத்தில், பாடல்களை எழுதும்போது இயக்குனர் ரஞ்சித் வாங்கிய உழைப்பு கடுமையானது.

பல்வேறு பணிகளின் மத்தியிலும் கால அவகாசம் தந்து நானே பாடல்களை எழுத வேண்டும் என்று உறுதியாக இருந்தனர் இயக்குனர் ரஞ்சித்தும், இசையமைப்பாளர் ரகுநந்தனும். யாவரும் வல்லவர் என்ற இன்னொரு திரைப்படத்திலும் பாடல் ஒன்றை எழுதியுள்ளேன். சமுத்திரக்கனி, யோகிபாபு போன்றவர்கள் நடித்துள்ள படம் அது. இராசேந்திரமூர்த்தி இயக்கியுள்ள படத்தின் அப் பாடல் காட்சியில் விஜய் சேதுபதி முக்கிய குறியீடு.

ஈழ வலிகளையும், அதன் தாக்கங்களையும் சினிமாப் பாடல்களில் வெளிப்படுத்துவதற்கான இடைவெளிகள் அமைகின்றதா?
இப்போது எழுதியுள்ள பாடல்கள் அனைத்தும் ஈழ வலிகளை அடிப்படையாகக் கொண்டதுதான். சினங்கொள் திரைப்படத்தில் ஒரு பாடல், முன்னாள் போராளி ஒருவன் தன் குடும்பத்தையும் தேசத்தையும் தேடியலையும் பாடல். ஒரு காதல் பாட்டு. இதைத் தவிரவும் ஒரு பாடல் உண்டு. யாவரும் வல்லவர் படத்தில் போரில் இறந்த இராணுவ வீரன் ஒருவன் வீரமரணம் அடைந்து ஊர் திரும்புகையில் கேட்கும் பாடல். கடந்த ஏப்ரலில் சென்னை சென்றபோது சினங்கொள் படப் பாடல்களை இயக்குனர் சசி, நடிகர் சத்தியராஜ் போன்றவர்கள் பார்த்தார்கள். இந்தப் பாடல்களின் கரு, உவமைகள் என அனைத்தும் தமிழ் சினிமாவுக்கு புதியவை என்று பாராட்டினார்கள்.

ஈழத்தில் இலக்கியங்களுக்கான வரவேற்பு இன்று எந்தளவிற்கு இருக்கிறது?

இந்த நூற்றாண்டின் தமிழ் இலக்கியம் ஈழத் தமிழர்களின் கையிற்தான். இலக்கியத்தின் எழுச்சி என்பது எண்ணிக்கையளவில் இல்லை. தமிழகத்தில் பெரும் எண்ணிக்கையில் இலக்கியங்கள் எழுதப்பட்டாலும் உள்ளடகத்தில் உலகத் தரமான இலக்கியங்கள் ஈழத்து இலக்கியங்கள்தான். தமிழ்நாட்டில் கூட ஈழ இலக்கியங்கள்தான் முதன்மையானவை.

புலம்பெயர் எழுத்தாளர்களும் படைப்புக்களைச் செய்கிறார்கள்? அவர்களின் படைப்புக்கள் இன்று ஈழத்தில் தாக்கத்தை செலுத்துகிறதா?

ஈழத்தில் இருந்து கொண்டு, நேர்மையாக. உண்மையாக எழுதுவது தற்கொலைக்கு சமமானது. ஈழத்தில் இருந்தும் அதனை சிலர் செய்து கொண்டுள்ளனர். நாட்டில் இருந்திருந்தால், குணா கவியழகனால் தன்னுடைய நாவல்களை எழுதியிருக்கவே முடியாது. அரசு நெருக்கடி தராவிட்டாலும், அரசின் அணுகுமுறைகள் அவரை எழுத தடுத்திருக்கும். இங்கு பலர் இன்னமும் எழுதாக் கதைகளுடன் மௌனமாக உள்ளனர்.

தமிழ்நதியின் பார்த்தீனியம் ஈழத்தில் கவனிப்பையும் உரையாடல்களையும் தோற்றுவித்த நாவல். சயந்தனின் ஆறாவடு, ஆதிரை எல்லாம் புலம்பெயர் நாட்டிலிருந்து நிலம் நோக்கி எழுந்த நாவல்கள். பல புலம்பெயர் படைப்பாளிகள் தாயகத்தில்தான் தங்களது புத்தகங்களை பதிப்பிக்கிறார்கள். படைப்புக்களை வெளியிடுகிறார்கள். தமிழகத்தில் இருந்து அகரமுதல்வன், வாசுமுருகவேல் போன்றவர்கள் இயக்குகின்றனர். வாசு முருகவேள் இப்போதும் கலாதீபம் லொட்ஜ் என்ற நாவலை வெளியிட்டுள்ளார்.

புலிகள் இலக்கியங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறையினருக்கு எவ்வாறு இன்றைய படைப்பாளிகள் கடத்த இருக்கிறார்கள்?

அது அருகிப்போய்விட்டது என்றே நினைக்கிறேன். விடுதலைப் புலிகள் காலத்தில் ஒருவர் ஒரு கவிதையை எழுதினால், கதையை எழுதினால் பலரால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். போராளிப் படைப்பாளிகள் பலர் அது பற்றி விவாதிப்பார்கள். பல மூத்த படைப்பாளிகளும் இருந்து ஊக்குவிப்பார்கள். இன்றைக்குள்ள சில மூத்த படைப்பாளிகள் அரசியல் நோக்கங்களுக்காக உருவாகும் இளந்தலைமுறைப் படைப்பாளிகளை தமது குழுவுக்குள் கட்டுப்படுத்தி தமது மீன் தொட்டியில் வளர்க்கப் பார்க்கிறார்கள். எவருடைய கவிதையையும் நான் எழுத முடியாது.

ஏன் அநேகமான படைப்புக்கள் தமிழகப் பதிப்பகங்களை ஈழத்து மற்றும் புலம்பெயர் படைப்பாளர்கள் நாடுகின்றார்கள்? ஈழத்தில் பதிப்பகங்களை நாடுவதில் என்ன சிக்கல் இருக்கிறது?

இதை ஒரு குற்றச்சாட்டாகவே பலர் முன் வைப்பதுண்டு. என்னைப் பொறுத்தவரையில் ஈழத்தில் நூல்களை பதிப்பிப்பதும் வெளியிடுவதும் வெளியில் கொண்டு சேர்ப்பதும் அரசியல் நெருக்கடிகளை தரக்கூடியது என்பதால் தமிழக பதிப்பகங்களை நாடுகின்றேன். முதல் தொகுப்பான பதுங்குழியில் பிறந்த குழந்தை கவிதை தொகுப்பு, 2008இல் கடுமையாக போர் நடந்துகொண்டிருந்தபோது வெளியானது. அப்போது தமிழர் பூமி சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டது. பின்னர் இராணுவத்தால் கடைகளில் வைக்க மிரட்டப்பட்டது. இதுதான் நிலமை. தமிழகத்திலும் சரி, வெளிநாடுகளுக்கும் சரி கொண்டு சேர்க்க இலகுவானது என்பதனாலும் அநேகரும் இவ்வாறு தமிழக பதிப்பகங்களை நாடியிருக்கலாம். அத்துடன் ஈழத்தில் புத்தகங்களை வெளியிட்டு கொண்டு சேர்க்கும் ஆளுமையுள்ள பதிப்பகங்களும் இல்லை. இங்கு பலரின் புத்தகங்கள் ஒன்றில் வீட்டில் கிடக்கின்றன. அல்லது உறவினர்கள் நண்பர்கள் வாசிக்கின்றனர்.

சிறுவர் போராளிகளை குறித்து நடுகல் பேசுகிறது என்கிறார்கள்? உண்மையில் சிறுவர் போராளிகள் குறித்துதான் பேசுகிறீர்களா?

அப்படி இல்லை. ஆனால் விடுதலைப் புலிகள் சிறுவர்களைப் போராட்டத்தில் இணைத்தார்களா என்பதற்கு நடுகல் விடையளிக்கும்.

நடுகல் அறுநூறு பிரதிகளைத் தாண்டி விற்பனையில் சாதனை படைத்திருப்பதாக பதிப்பாளர் வேடியப்பன் சொல்லியிருக்கிறார். புலிகளின் ஆயுத மெளனிப்பிற்குப் பின்னர், புலி எதிர்ப்பு வாதிகளுக்கும், புலி நீக்க அரசியல் செய்யும் நபர்களுக்கும் இந்நூலின் விற்பனை பெரும் தாக்கத்தை செலுத்தி இருப்பதாக உணர்கிறீர்களா?

நடுகல் அச்சாகியபோது சின்னதாக ஒரு பதற்றம் வந்ததுதான். ஆனால் நிறைந்த வரவேற்பு அளிக்கப்பட்டிருப்பது உழைப்பிற்கான மரியாதை. அதற்காக வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது ஏற்பட்டுள்ள இந்த விற்பனையே நாவலுக்கு இன்னமும் வரவேற்பை அதிகரிக்கும் என்றும் ஆயிரம் பிரதிகளை அச்சிட சொல்லியிருப்பதாகவும் நடுகல்லை வெளியிட்டுள்ள டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பாளர் வேடியப்பன் கூறினார்.

புலி எதிர்பாளர்களில் பலர் முள்ளிவாய்க்காலுடன் கடமையை முடித்துக் கொண்டு விடைபெற்றுள்ளனர். புலிகளை ஒழிப்பதும் மக்களை அழிப்பதும்தான் அவர்களின் இலக்கு. 2009, 2010களில் புலி எதிர்பாளர்களாக மாற்றப்பட்ட ஈழ இலக்கியவாதிகள் இப்போது கலாவதியாகிவிட்டனர். இன்னமும் மழைக்கால தவளைகளாய் அரற்றும் சிலர உள்ளனர்தான். விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை வலியுறுத்தும் படைப்புக்களின் எழுச்சி கண்டு அவர்கள் நிச்சயம் அஞ்சுவார்கள். போராளிகளின் குழந்தைகள், முன்னாள் போராளிகள், இளந்தலைமுறையினர் எனப் பலரும் எழுதத் துவங்கியுள்ளனர். நாங்கள எழுத்தால் போராட வேண்டிய காலம் இது. போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைப்பதிலும் ஏற்றுக்கொள்வதில் மாத்திரமே எங்களுடைய இருப்பு தங்கியுள்ளது.

அடுத்த படைப்பு பற்றி?

நான் ஸ்ரீலங்கன் இல்லை, கவிதை தொகுப்பும் வெளிவர இருக்கிறது. அடுத்த நாவலுக்கான வேலைகளையும் ஆரம்பித்துவிட்டேன். நடுகல் 5 ஆண்டு உழைப்பு. புதிய நாவல் முற்றிலும் மாறுபட்ட களத்தில் நிகழும் கதை.

ஈழத் தமிழர்களின் வலிகள் சொல்லும் இது போன்ற படைப்புக்களைக் கொண்டுவருவதற்கு தங்களுக்கான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

நேர்காணல்- எஸ்.பி தாஸ். தமிழ்வின்

TAGS: