நாடு இரண்டாகிறது! சம்பந்தரும் சுமந்திரனும் முட்டாள்களில்லை!! மகிந்த சீற்றம்!!!

தற்போதைய சூழலில், புதிய அரசமைப்பொன்று தேவையில்லையெனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, அதனை நிறைவேற்ற, தாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் நாட்டுக்கு இப்போது அது அவசியமில்லை என்றும், அதில் காணப்படும் அதிகாரங்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் தான் இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

“புதிய அரசமைப்பில், வடக்கு – கிழக்கு இணைப்பு இல்லை, பௌத்தத்துக்கான முன்னுரிமை தொடர்ந்து பேணப்படும், ஒற்றையாட்சியைப் பாதுகாப்போம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்ற போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புதிய அரசமைப்பை ஆதரிக்கின்றது. இவை எவையும் இல்லாமலா, புதிய அரசமைப்பைக் கூட்டமைப்பு ஆதரிக்கின்றது? கூட்டமைப்பினர் என்ன முட்டாள்களா?” என்றும், மஹிந்த கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், “பிரதமர் மேற்கண்டவாறு சொன்ன னசொற்பதங்கள் வேண்டுமானால், புதிய அரசமைப்பில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதிகாரங்கள் நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் தான் இருக்கின்றன. அதனால் தான், முன்னெச்சரிக்கையாக புதிய அரசமைப்பு வேண்டாம் என்று நான் கோருகிறேன்” என்றும் கூறியுள்ளார்.

புதிய அரசமைப்பில் எதுவும் இல்லை என்றால், அதனை நிறைவேற்றுவதற்கு, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் சுமந்திரனும், ஏன் துள்ளிக் குதிக்கின்றார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ள அவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புத்தியை, அவரது தந்திரத்தைத் தாங்கள் அறிவதாகவும், அவர், வடக்கையும் கிழக்கையும் தாரைவார்த்து விடுவாரென்றும் கூறியுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களின் நிகழ்சி நிரலில் தான், சம்பந்தன், சுமந்திரன், ரணில் ஆகியோர் செயற்படுகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ள மஹிந்த, சர்வதேச சமூகத்தின் பலம் பொருந்திய நாடுகள், இதற்கு ஆதரவு வழங்குகின்றன என்றும், அந்த நாடுகள் எவை என்று தாங்கள் சொல்லத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமென்றும், அதன் பின்னர், புதிய அரசமைப்பை முன்வைக்க வேண்டுமென்றும், அப்போது தாங்கள், மூவின மக்களுக்கும் அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், இப்போதைய சூழலில், புதிய அரசமைப்பு நிறைவேற இடமளிக்க மாட்டோமெனவும் தெரிவித்துள்ளார்.

-eelamnews.co.uk

TAGS: