இலங்கையில் அமெரிக்க முகாம் ஒன்றை அமைப்பது தொடர்பில் அரசாங்கம் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட ஆயத்தமாகி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த முகாம் அமைப்பதற்கான உடன்படிக்கை தொடர்பில் அமெரிக்க மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
அமெரிக்கப் படையினரையும், இராணுவ தளபாடங்கள் மற்றும் தொடர்பாடல் உபகரணங்கள் என்பனவற்றையும் கொண்டு வந்து இலங்கையுடன் இணைத்து செயற்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை வரும் அமெரிக்கப் படையினருக்கு அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் வழங்குவது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஈரான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க முகாம்களினால் பாரியளவில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்த முகாம்களினால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும், இந்த விடயம் குறித்து நாடாளுமன்றில் தெளிவுபடுத்த வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியினால் கையொப்பமிடப்பட்ட உடன்படிக்கைகள் நாட்டுக்கு ஆபத்தானவை என்பதனால் இந்த விடயங்கள் குறித்து மக்களும் ஏனைய பொறுப்புவாய்ந்தவர்களும் கவனம் செலுத்த வேண்டுமென தயாசிறி ஜயசேகர கோரியுள்ளார்.
-athirvu.in