வடக்கு- கிழக்கு இணைப்பை ஸ்ரீலங்கா அரசு ஏற்பு! வாசுதேவ

வடக்கு- கிழக்கை இணைப்பது தொடர்பிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வாசுதேவ நாணயக்கார இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடரந்து கூறுகையில்,

“வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அமைச்சு என்பதை அரசாங்கம் அறிமுகப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அந்தவகையில் வடக்கு அபிவிருத்திக்கென தனியான ஒரு அமைச்சு உள்ளது.

இந்நிலையில் வடக்குக்கு மட்டுமன்றி கிழக்கின் அபிவிருத்திக்காகவும் அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரியுள்ளார்.

மேலும் வடக்கு– கிழக்கு என்று தனித்தனியாக இல்லாமல் வடகிழக்கு மாகாண அபிவிருத்திக்கு அமைச்சுப் பதவியை உருவாக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த செயற்பாடு, வடக்கு– கிழக்கை இணைப்பதற்கான அத்திவாரமாகும். இது மாகாணங்களை இணைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதல் படியாகும். அரசாங்கமும் இதற்கு இணங்கியுள்ளதாகவே தெரிகிறது.

இவ்வாறான நிலையில் புதிய அரசியலமைப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாகவே அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

அந்தவகையில் சுமந்திரனின் கோரிக்கைளுக்கு உயிர் கொடுக்கவே அரசாங்கம் முயற்சித்து வருகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.

எவ்வாறாயினும், அரசாங்கத்துக்கான இருப்பு தற்போது குறைந்துக் கொண்டுவருவதையும் எம்மால் காணக்கூடியதாக இருக்கிறது.

இதனாலேயே தேர்தல் ஒன்றுக்குச் செல்ல வேண்டுமென நாம் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறோம்” என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

-eelamnews.co.uk

TAGS: