அழுக்குகள், பாலித்தீன்கள், ஆபத்தான பொருள்கள் நிறைந்த குப்பையை யானைகள் உண்ணும் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்ட அவலம்.
ஆனால், இலங்கையின், அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அஷ்ரப் நகர் பகுதியில் இந்த அவலம் கண்ணெதிரே நாளாந்தம் நடக்கிறது.
அஷ்ரப் நகரில் குப்பைகளை கொட்டும் இடம் ஒன்று பல ஆண்டுகளாக உள்ளது. இதனை அட்டாளைச்சேனை பிரதேச சபை பராமரிக்கிறது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை, கல்முனை, காரைத்தீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் நாளாந்தம் அந்தந்த உள்ளூராட்சி சபையினர் சேகரிக்கும் குப்பைகள், அஷ்ரப் நகரிலுள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன.
அந்த வகையில் குறித்த இடத்தில் தினமும், 125 முதல் 150 டன் வரையிலான குப்பைகள் இங்கு கொட்டப்படுவதாக, அட்டாளைச்சேனை பிரதேச சபை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்தக் குப்பைகளை மீள்சுழற்சியின் மூலம் உரமாக மாற்றுவதற்கான திட்டமொன்று உள்ளபோதும், இதுவரை அந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை.
இந்த நிலையில், இந்த இடத்துக்கு தினமும் வரும் சுமார் 40 யானைகள், இங்குள்ள குப்பைகளை உணவாக உட்கொள்வது காணக்கூடியதாக உள்ளது.
இங்கு கொட்டப்படும் குப்பையில் பிளாஸ்டிக் மற்றும் உடைந்த கண்ணாடிப் பாட்டில்கள் உள்ளிட்ட ஆபத்தான பொருட்களும் உள்ளன.
அஷ்ரப் நகரிலுள்ள குப்பை மேட்டை அண்டியுள்ள காட்டுப் பகுதியிலுள்ள யானைகளே இங்கு வருகின்றன.
முன்னர், இந்தக் குப்பை மேட்டினைச் சுற்றி – யானைப் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றினை யானைகள் முற்றிலுமாகச் சேதப்படுத்தி விட்டதால், இப்போது இந்தக் குப்பை மேட்டுப் பகுதி, திறந்த இடமாகக் காணப்படுகின்றது.
இதேவேளை, குப்பை மேட்டுக்கு வரும் யானைகள் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும்,பயிர் விளையும் நிலங்களுக்கும் அடிக்கடி செல்வதால், இந்தக் கிராமத்தில் யானை – மனித மோதல் அச்சுறுத்தலும் நிலவி வருகிறது.
இலங்கையில் சுமார் 6,000 யானைகள் வரை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் யானைகள் பெருமளவில் இங்கு அழிவதும் கவலையளிப்பதாக உள்ளது.
2018ஆம் ஆண்டின் – முதல் 10 மாதம் வரையிலான காலப்பகுதியில் 311 யானைகள் இறந்துள்ளன என்று வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, யானைகள் தாக்கியதில் 95 மனித உயிர்கள் இந்தக் காலப்பகுதியில் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
- இலங்கையில் ஆண்டுக்கு சராசரியாக 250 யானைகள் உயிரிழப்பு
- யானைகள் பாலத்தை கடக்க பாதியில் நிற்கும் ரயில்கள்
2013ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரையில், 1,445 யானைகள் இலங்கையில் இறந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் குறைந்தளவு யானைகள் உள்ள நிலையில், அவை மிகவும் அதிகளவில் அழிவடைந்து வருகின்றமை கவலைக்குரியதாகும். பல்வேறு காரணங்களால் யானைகள் அழிகின்றன. அண்மைக் காலமாக ரயில் மோதி இறக்கும் யானைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2018-ம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் 16 யானைகள் ரயில் மோதி இறந்துள்ளன.
எனவே அதிக சிரத்தையெடுத்து யானைகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. யானையொன்று சராசரியாக நாளொன்றுக்கு 125 முதல் 150 கிலோ உணவையும், 160 லிட்டர் வரையில் நீரையும் உள்கொள்வதாக, யானைகள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும் இணையத்தளங்கள் கூறுகின்றன.
இலங்கையில் இடம்பெறும் காடழிப்பு நடவடிக்கை காரணமாக, யானைகள் தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படுவதோடு, உணவுக்காகவும் அவை அலைய வேண்டிய பரிதாப நிலை உருவாகிறது.
இதன் காரணமாகவே, சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலானதும் ஆபத்தானதுமான மேற்கூறப்பட்ட குப்பைகளை யானைகள் உண்ணும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
மிக நீண்ட காலமாக இந்தக் குப்பை மேட்டில் யானைகள் தினமும் உணவினை உட்கொண்டு வருகின்ற போதும், இந்த யானைகள் ஆரோக்கியமான உணவினைப் பெற்றுக் கொள்வதற்கான மாற்று வழிகளை, வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.
ஒருபுறம் யானைகள் அதிகளவில் அழியும் நிலையில், மீதமுள்ள யானைகளையும் உரிய முறையில் பராமரிக்காமல் போனால், இலங்கையின் வருங்காலக் குழந்தைகள், கதைப் புத்தகங்களில் மட்டுமே யானைகளைக் காணும் நிலை உருவாகும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.
இது குறித்து இந்தப் பிரதேசத்துக்குப் பொறுப்பான வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அம்பாறை அலுவலக பொறுப்பதிகாரி என்.டி.பி. சஞ்ஜீவ என்பவரிடம் பிபிசி பேசியது. மேற்குறிப்பிட்டவை போன்ற ஆபத்தான குப்பைகளை யானைகள் உண்பதைத் தடுக்கும் பொருட்டு வனஜீவராசிகள் திணைக்களம் என்ன வகையான நடவடிக்கைகளையெல்லாம் மேற்கொண்டுள்ளது என்று அவரிடம் பிபிசி கேட்டது.
“இதுபோன்ற பகுதிகளுக்குள் யானைகள் நுழையாதவாறு மின்சார வேலிகளை அமைப்பதுதான் பிரதான நடவடிக்கையாகும். ஆனால், அந்த வேலிகளையும் யானைகள் உடைத்து விடுகின்றன. எனவே, அதிக மின்வலு கொண்ட மின்சார வேலிகளை அமைப்பதுதான் அடுத்த தெரிவாகும். அதிக மின்வலு கொண்ட மின்சார வேலிகளை தற்போது அம்பாறை நகரசபையினர் அமைத்துப் பராமரித்து வருகின்றனர்”.
“குப்பைகளை கொட்டுவதற்கு முன்னர், அவற்றினை தரம் பிரிக்க வேண்டும். மக்கும் பொருட்களை வேறாகவும் பாலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிப் பொருட்களை வேறாகவும் தரம் பிரித்து வெவ்வேறாக கொட்ட வேண்டும்” என்று சஞ்ஜீவ கூறினார்.
மேலும், யானைகளுக்கான சிறப்பான சூழல் மற்றும் நீர் வசதிகள் போன்றவை உருவாக்கப்பட்டுள்ள காடு, அம்பாறை மாவட்டம் புத்தங்கல பிரதேசத்தில் உள்ளது என்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அம்பாறை அலுவலகப் பொறுப்பாளர் தெரிவித்தார்.
“ஆயினும், அந்தக் காட்டுப் பகுதியில் ஆட்கள் சட்டவிரோதமாகக் குடியேறுகின்றனர். அதன் காரணமாக, அந்தப் பகுயிலுள்ள யானைகளுக்கு இடை யூறு ஏறபடுகிறது. எனவே வேறு பகுதிகளுக்கு அவை இடம்பெயர்கின்றன” என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, குப்பைகளை யானைகள் உட்கொள்வதால், அவற்றினுள் காணப்படும் முள், ஆணி மற்றும் கண்ணாடிப் பொருட்கள் யானைகளின் இரைப்பை சுவர்களில் காயங்களை ஏற்படுத்துவதாக, கால்நடை உற்பத்தி, சுகாதாரத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்டத்துக்கான பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.ஏ. நதீர், பிபிசி க்கு தெரிவித்தார்.
“யானைகளின் இரைப்பையில் காயம் ஏற்படும் போது, அங்கு கிருமித் தொற்று ஏற்படும். அது உடல் முழுவதும் பரவும்போது யானை – நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலையும் உருவாகும். இரைப்பையில் ஏற்பட்ட புண் காரணமாக யானைகள் இறந்துள்ளமையை, அவற்றின் பிரேத பரிசோதனைகளில் கண்டுள்ளோம்” என்று தெரிவித்த டாக்டர் நதீர், அழுகிய உணவுகளை யானைகள் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விளக்கமளித்தார்.
“யானைகளின் குடலில் சாதாரணமாக கிருமிகள் இருக்கும். அவை குறைந்த அளவானவை. ஆனால், மிகவும் அழுகிய உணவை யானைகள் உண்ணும் போது, அவற்றின் குடலிலுள்ள கிருமிகளின் தொகை அதிகரிக்கும். இதனால், யானைகளுக்கு நோய் ஏற்படும்” என்றார்.
இலங்கையில் யானைகள் அழியும் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. 2017ஆம் ஆண்டு 256 யானைகள் உயிரிழந்த நிலையில், 2018ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் 311 யானைகள் இறந்துள்ளன. -BBC_Tamil