புலம்பெயர் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்!

சிறிலங்கா இராணுவத்தினர் கொலை செய்தார்கள் என்பதை புலம்பெயர் தமிழர்கள் ஆதாரத்தோடு தருவார்களா என்று பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ சவால் விடுத்துள்ளார்.

மேலும் அவ்வாறான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும் நிலையில் அவை தொடர்பில் விசாரித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு தாம் தயாராக இருபதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“இராணுவ வீரர் ஒருவர் கொலை செய்யமுடியாது. அவ்வாறு கொலை செய்தால் அவர் இராணுவ வீரர் இல்லை. அவர் ஒரு கொலைகாரர். அவர் அப்படி நடக்கமுடியாது. கொலை செய்திருந்தால் அவருக்கு எதிராக நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவான நடவடிக்கை எடுப்பதற்கு நாம் தயார். மிலேச்சத்தனமான மனிதப் படுகொலை ஒன்றுடன் சம்மந்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள 11 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக அடுத்த இரு வாரத்துக்குள் வழக்குத் தொடரவுள்ளோம். இந்த நிலையில் நான் புலம்பெயர் தமிழர்களிடம் ஒரு சவால் விடுக்கின்றேன், முடிந்தால் இராணுவத்தினர் செய்த கொலைகளுக்கான ஆதாரத்தோடு வாருங்கள். உரிய நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.” என்றார்.

-athirvu.in

TAGS: