வெளிநாடொன்றின் உதவியுடன், இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதத்துக்கும் மதவாதத்துக்கும் திட்டமிடப்பட்டுள்ளதா எனக் கேள்வியெழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பில், உடனடியாக விசாரணைகளை நடத்தி, சபைக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்றையதினம் பாராளுமன்றில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், மாவனெல்ல புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், சகோதரர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர் என்பதனை சுட்டிக்காட்டியதோடு, அவ்விரு முஸ்லிம் இளைஞர்களது தந்தையின் வீட்டிலிருந்தும், ஆயுதங்கள், ஆவணங்கள் மற்றும் தொலைத்தொடர்புக் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளனவென, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புத்தளம் பிரதேசத்திலும் பாரிய தொகையில் ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்படியான நிலைமையில், வெளிநாடொன்றின் உதவியுடன் முஸ்லிம் பயங்கரவாதம் உருவாக்கப்படுகின்றதா எனக் கேள்வியெழுப்பிய அவர், அவ்வாறானதொரு நிலைமையொன்று ஏற்படுத்தப்படுமாயின், ஏனைய இனங்களுடன் சகோதரத்துவத்துடன் வாழும் முஸ்லிம்களுக்கு பெரும் ஆபத்தானது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களைக் கைதுசெய்து தடுத்துவைத்திருந்த போது, மேல் மாகாணத்தைச் சேர்ந்த அரசியல்வாதியொருவர், அவர்களை விடுவித்துக்கொள்வதற்கு அழுத்தம் கொடுத்தாரென அறியமுடிவதாகவும் அதனால்தான், விசாரணையின் விவரங்களை சபைக்கு அறியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை புத்தளத்திலும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளமை தொடர்பான விசாரணைகளை, பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுக்கின்றனர் எனவும் ஆகையால், ஏனைய விவகாரங்களில் அரசியல் இலாபம் பெற்றுக்கொள்ள முயல்வது போல, இந்த விவாரத்திலும் அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்ள வேண்டாமென மேற்படி விவகாரம் தொடர்பில் கருத்துரைத்த ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஹப்புஹாமி, கேட்டுக்கொண்டுள்ளார்.
-eelamnews.co.uk