இராணுவ முகாம் முன் போராட்டத்தில் குதித்தனர் கேப்பாப்புலவு மக்கள்

முல்லைத்தீவு- கேப்பாப்புலவில் சிறிலங்கா இராணுவத்தினரின் பிடியில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள், இன்று சிறிலங்கா படைமுகாம் வாயிலில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

697 நாட்களாக, காணி மீட்புக்கான தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கேப்பாப்புலவு மக்கள், இன்று தமது போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை பெருமளவு சிறிலங்கா காவல்துறையினர் கேப்பாப்புலவு இராணுவ முகாம் வாயியில் குவிக்கப்பட்டனர். வீதித்தடைகளும் போடப்பட்டன.

இந்த நிலையில், இராணுவ முகாமுக்கு முன்பாக, பெண்களும் குழந்தைகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு சமையலில் ஈடுபட்ட போது காவல்துறையினர் அதனை தடுக்க முயன்றதால் குழப்பம் ஏற்பட்டது.

இந்தப் போராட்டம் இன்று இரவும் தொடர்ந்து நீடித்து வருகிறது..குழந்தைகளுடன் பெண்கள், இராணுவ முகாமில் இருந்து 75 மீற்றர் தூரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை காவல்துறையினர் அகற்ற முயன்றதால் அங்கு பதற்றமான நிலை காணப்படுகிறது.

-puthinappalakai.net

TAGS: