வடக்கு, கிழக்கில் ஆறு மாதங்களுக்குள் 4750 வீடுகள்

வடக்கு கிழக்கில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் 4750 வீடுகளைக் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்விருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலர், சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

“வடக்கில் 10 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் கீழ், அடுத்த ஆறு மாதங்களுக்குள், 4750 வீடுகளைக் கட்டி முடிக்கப்படும்.

இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய முறையில், கொங்றீட் கற்களினால் இந்த வீடுகள் அமைக்கப்படும்.

போரினால் இடம்பெயர்ந்தவர்கள், நலன்புரி முகாம்களில் உள்ளவர்கள், சொந்த இடங்களுக்குத் திரும்பிய அகதிகளுக்கு இந்த வீட்டுத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

குறிப்பாக, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், குறைந்த வருமானம் பெறுவோர், குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் குடிசைகளில் வாழும் குடும்பங்களுக்கு இந்த திட்டத்தில்  சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.

முதற்கட்டமாக, 4750 வீடுகளைக் கட்டுவதற்கு. நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, யாழ். மாவட்டத்தில் 1500 வீடுகளும், கிளிநொச்சியில் 670 வீடுகளும், முல்லைத்தீவில் 630 வீடுகளும், வவுனியாவில் 450 வீடுகளும், மன்னாரில் 350 வீடுகளும், மட்டக்களப்பில் 625 வீடுகளும், திருகோணமலையில் 400 வீடுகளும், அம்பாறையில் 125 வீடுகளும் அமைக்கப்படவுள்ளன.

-puthinappalakai.net

TAGS: