ஐ.நா மனித உரிமை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு மேலும் கால நீட்டிப்பை வழங்க வேண்டாம் என வலியுறுத்தி காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களினால் இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
ஐ.நாவே கையில் கொடுத்தவர்களை தேட ஒ.ஏம்.பி அலுவலகம் தேவையா?, ஐ.நாவே ரகசிய சித்தரவதை முகாம்களை கண்டு பிடித்து எங்கள் பிள்ளைகளை மீட்டு தா?, சர்வதேச விசாரணை தேவை, ஐ.நாவே இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்காதே? உள்ளிட்ட வசனங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகிய போராட்டம் கடைவீதி வழியாக பேரணியாக சென்று வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து மீண்டும் பழையபேருந்து நிலையத்தினை அடைந்திருந்தது.
எமது கோரிக்கைகளை பலமுறை முன்வைத்த போதும் இதுவரை ஐ.நா மனித உரிமை ஆணையகத்தால் அது நிறைவேற்றப்படாத நிலையில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரிலாவது எங்களது கேரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசிற்கு காலநீட்டிப்பை வழங்காமல் அழுத்தத்தை கொடுப்பதன் மூலமாக எங்களது உறவுகளிற்கு நீதியானதும்,நியாயமானதுமான தீர்வுகிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என போராட்டத்தில் கலந்துகொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்படவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர்தொடர்பான விடயத்தை அதற்கு யார் காரணியாக இருந்தார்களோ அவர்களால் நியமிக்கப்படும் ஆணைக்குழுக்கள் மூலம் எமக்கு நீதியானதும் நியாயமானதுமான தீர்வுகள் கிடைக்கபோவதில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராயா,முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ் பல்கலைகழக மாணவர்கள்,கிழக்கு பல்கலை மாணவர்கள்,மதகுருமார்கள்,வர்த்தக சங்கத்தினர் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர்,சிவில் சமூக பிரதிநிதிகள்,உள்ளிட்ட ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். -BBC_Tamil