தாய்லாந்தில் நாளை 2ம் திகதி முதல் நடைபெறவிருக்கும் சர்வதேச அறிவியல் புலமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழினுட்பக் கண்காட்சியில் பங்கேற்கவென இலங்கையின் இளம் தமிழ் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் இன்று வெள்ளிக்கிழமை தாய்லாந்து பயணமாகின்றார்.
இலங்கை வரலாற்றில் தனியொருவரின் 3 கண்டுபிடிப்புகள் சர்வதேச கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவிருப்பது இதுவே முதல் தடவையாகும். இலங்கையின் இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை கோரக்கர்கிராமத்தைச் சேர்ந்தவராவார்.
வரலாற்றில் முதல் தடவையாக தனி ஒருவரின் மூன்று கண்டுபிடிப்புக்கள் சர்வதேச அறிவியல் புலமை, கண்டுபிடிப்பு மற்றும் தொழினுட்ப கண்காட்சிப் போட்டியில் பங்குபற்ற தகுதி பெற்றுள்ளன. இது இவரது இரண்டாவது பயணமாகும். கடந்த வருடமும் இவர் தாய்லாந்து சென்று பதக்கம் வென்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
நாளை இரண்டாம் திகதி தொடக்கம் ஆறாம் திகதி வரை தாய்லாந்தில் உள்ள பாங்கொக் சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மாநாட்டு மண்டபத்தில் பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்பாளர்கள் கலந்து கொள்வர்.
யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழினுட்பபீடத்தில் பொறியியல் தொழில்நுட்பத்தைப் பயின்று வரும் சோமசுந்தரம் வினோஜ்குமார் சென்ற வருடம் விஞ்ஞான, ஆராய்ச்சி மற்றும் தொழினுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு நடாத்திய தேசியமட்ட புத்தாக்கப் போட்டியில் ஏழு தேசிய பதக்கங்களை இவர் பெற்றிருந்தார்.
அதில் வாகனங்களின் சக்கரங்கள் காற்றுப் போனதும் தற்காலிகமாக வாகனத்தை செலுத்துவதற்கான ‘TWO WHEELS HELPER ‘ எனும் கண்டுபிடிப்பும், கட்டட நிர்மான வேலைகளில் கம்பிகளை இலகுவாகவும் விரைவாகவும் இணைக்கும் WIRE BUILDING TOOL எனும் கண்டுபிடிப்பும் மற்றும் பாதணிகளில் தூசுபடியாத குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட SHOES HELPER கண்டுபிடிப்பும், தேசிய ரீதியில் தங்கப்பதக்கத்தையும் ஒவ்வொன்றும் தலா ஒரு இலட்சம் வீதம் பணப்பரிசையும் பெற்ற
இம்மூன்று கண்டுபிடிப்புக்களும் நாளை இரண்டாம் திகதி தொடக்கம் ஆறாம் திகதி வரை தாய்லாந்தில் உள்ள பேங்கொக் சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மாநாட்டு மண்டபத்தில் பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்பாளர்கள் கலந்து கொள்ளும் சர்வதேச அறிவியல் புலமை , கண்டுபிடிப்பு மற்றும் தொழினுட்ப கண்காட்சிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளன.
இவரின் TWO WHEELS HELPER எனும் கண்டுபிடிப்பு LK/P/ 19336 இலக்கத்தின் கீழும், WIRE BUILDING TOOL எனும் கண்டுபிடிப்பு LK/P/20295 இலக்கத்தின் கீழும், SHOES’ HELPER எனும் கண்டுபிடிப்பு LK/P/20297 இலக்கத்தின் கீழும் ஆக்கவுரிமைக் காப்பீட்டுப் பத்திரத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
இலங்கையிலிருந்து இவருடன் யாழ்.பல்கலைக்கழகத்தின் மொகமட் காசிம் மொகமட் அனீஸ் என்பவரின் ‘Mechanical Tyre Helper’ எனும் கண்டுபிடிப்பும், ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புத்திக பிரசன்ன டீ சில்வா என்பவரின் Note Review App எனும் கண்டுபிடிப்பும், ருகுனு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மெத் டர்சுன் சந்தமல் என்பவரின் Safety, Easy and Advanced Handle System for Two and Three Wheels எனும் கண்டுபிடிப்பும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கான அனைத்து வசதிகளையும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு இலவசமாக தயார் செய்துள்ளது. அதுமட்டுமன்றி இவர்கள் அனைவரும் தாய்லாந்தின் தேசிய கண்டுபிடிப்பாளர் தினக் கொண்டாட்டங்களிகளிலும் பங்குபற்றவுள்ளமை விசேட அம்சமாகும்.
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் மற்றும் ஸ்ரீகோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவனான சோமசுந்தரம் வினோஜ்குமார் இதுவரை செய்துள்ள 86 கண்டுபிடிப்புக்களுக்கு 38 தேசிய விருதுகளையும் மூன்று சர்வதேச விருதுகளையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.இவ்வருடமும், எமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி செல்லும் நான்கு இளம் கண்டுபிடிப்பாளர்களும் சர்வதேசவிருதுகளையும் வெற்றி பெறுவார்களென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
-athirvu.in