இறுதிக்கட்ட யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, 10 ஆண்டுகள் நிறைவு என்ற கட்டத்தை நெருங்கிக் கொண்டுவரும் நேரத்தில், இக்காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கான தலைமைத்துவத்தை வழங்கிய பெருமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனையே சேரும். அவர் மீதான விமர்சனங்கள் பலவாறாக இருந்தாலும், தமிழ் மக்களை வழிநடத்தி, ஓரணியில் வைத்திருந்தார் என்று உறுதியாகக் கூறமுடியும்.
சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம், நேற்று முன்தினம் (05) ஆகும். அவருடைய உடல்நிலை தொடர்பான கேள்விகள், அவ்வப்போது எழுந்துவருவதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. ஆனால், தன்னாலியன்றளவு, தன்னுடைய மூப்பையும் பட்டறிவையும் பயன்படுத்தி, தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் அவரிடம் இருக்கிறது. அவருக்குப் பின்னரான காலப்பகுதியில், தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்தும் தன்மை வேறு யாரிடமும் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இதனால் தான், சம்பந்தனை எதிர்ப்போர் கூட, “சம்பந்தனுக்குப் பிறகு யார்?” என்ற அச்சமிகு கேள்வியை எழுப்புவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
சம்பந்தனின் உடல்நிலை சீராக இருந்து, இன்னும் பல ஆண்டுகள் உறுதியோடு, தமிழ் மக்களை அவர் வழிநடத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பு நிறைவேறட்டும்.
ஆனால், அவருடைய உடல்நிலை சீராக இருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும் கூட, இலங்கை அரசியலின் குழப்பங்களைத் தாண்டி, தொடர்ந்து பணியாற்றுவதற்கான விருப்பத்தை அவர் எப்போது இழக்கக்கூடுமென்ற கேள்வியையும் முன்வைக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இரண்டு பக்கங்களிலும் அடிக்கப்படும் மேள வாத்தியம் போன்று அவர் மாறியிருக்கிறார் என்பதைத் தான் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
சம்பந்தன் மீது மரியாதை இருப்பதாக, மஹிந்த ராஜபக்ஷ தரப்பின் பலரும் வெளியே காட்டிக்கொள்ளத் தவறுவதில்லை. மஹிந்தவின் மகனான நாமல் ராஜபக்ஷ, தனது டுவிட்டர் பக்கத்தில், சம்பந்தனுக்கான பிறந்தநாள் வாழ்த்தை, நேற்று முன்தினம் பகிர்ந்திருந்தார். அவர் நீண்டநாள்கள் வாழ வேண்டுமென்பது, அவருடைய கோரிக்கையாக அமைந்தது. அவரின் தந்தையும், சம்பந்தனுக்கான மரியாதையை வௌிப்படுத்தத் தவறுவதில்லை. ஆனால், அதையும் தாண்டி, சம்பந்தனின் அரசியலை அவர்கள் முற்றாக வெறுக்கிறார்கள் என்பதுவும் உண்மையானது.
இலங்கையின் தேசிய நாள் அல்லது சுதந்திர நாள் கொண்டாட்டங்கள், கடந்த திங்கட்கிழமை (04) இடம்பெற்றிருந்தன. இந்நிகழ்வில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக மாறியிருக்கின்ற சம்பந்தனும் கலந்துகொண்டிருந்தார். இதன்போது அவர், தேசிய கீதம் ஒலித்துக்கொண்டிருக்கும் போது அமர்ந்திருந்தாரெனத் தெரிவித்து, ஆங்கிலப் பத்திரிகையொன்று, முதற்பக்கத்தில் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தது. இதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்கள் பலவற்றில், அப்புகைப்படமே பேசுபொருளாக மாறியிருந்தது. தேசப்பற்றாளர்களாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் (இவர்களில் மிகப்பெரும்பான்மையானோர், ராஜபக்ஷக்களின் ஆதரவாளர்கள்) பலர், கடுமையான விமர்சனங்களை எழுப்பியிருந்தனர்; இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், சம்பந்தனின் மூப்பையும் கருத்திற்கொள்ளாது, கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைத்தனர்.
சம்பந்தனுக்குக் காணப்படும் உடல்மூப்புக் காரணமாக, அவரால் அதிக நேரம் எழுந்து நிற்க முடியாத நிலை காணப்படுகிறது என்பதை, கிட்டத்தட்ட அனைவரும் அறிவர். அவர் எழுந்து நிற்பதற்குத் துணையொன்று தேவைப்படும். எண்பத்தாறு (86) வயதான ஒருவரின் உடலில், குறிப்பிட்டளவு தாங்குதிறன் தான் காணப்படுமென்பதைப் புரிந்துகொள்வதற்கு நேரமெடுக்காது. எனவே, தேசிய கீதம் ஒலிக்கவிடப்படும் போது, அவரால் எழுந்துநிற்க முடியாத நிலையில், அவர் அமர்ந்திருந்தார். இது தான் நடந்தது. நாட்டின் மூத்த அரசியல்வாதிக்கு, இந்த வாய்ப்பைக் கூட, இந்த “தேசப்பற்றாளர்கள்” வழங்கமாட்டார்களா?
இத்தனைக்கும், 2016ஆம் ஆண்டில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது, சம்பந்தனால் இலகுவாக எழ முடியாத நிலையில் அவர் தடுமாறிக் கொண்டிருக்க. காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மனைவி ஹேமா பிரேமதாஸவால் அவருக்கு உதவி வழங்கப்பட்டதை, ஊடகவியலாளரொருவர் ஞாபகப்படுத்தியிருந்தார். இவ்வாறான நிலையில், சம்பந்தன் மீதான விமர்சனங்கள், அடிப்படையில் நியாயமற்றவை என்பது தெளிவு.
ஆனால், சம்பந்தன் மீதான விமர்சனங்கள், வெறுமனே தனிப்பட்ட அரசியல் விமர்சனங்கள் கிடையாது. அவற்றுக்குப் பின்னாலிருக்கும் அரசியல் மோசமானது; இனவாதம் அல்லது இனவெறுப்பை அடையாளமாகக் கொண்டது; நச்சுத்தன்மையானது. “தமிழ் மக்கள், இந்த நாட்டுக்குள் வாழ விரும்பவில்லை. இலங்கையின் தேசிய கீதத்துக்கு மதிப்புக் கொடுக்கவே அவர்கள் விரும்பவில்லை. ஆகவே, நாட்டைப் பிரிப்பதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்” என்பது தான், தேசிய கீதத்துக்கு, வயது மூப்பான ஒருவர் எழவில்லை என முன்வைக்கப்படும் விமர்சனங்களில் உட்பொருள். அதில் மாற்றுக் கருத்தேதுமில்லை.
ஏனென்றால், “தேசிய கீதத்துக்கு மதிப்புக் கொடுக்காவிட்டால், நாட்டை அவமதிக்கிறீர்கள்” என்று சொல்கின்ற “தேசப்பற்றாளர்கள்” எவரும், தேசிய கீதம் உட்பட எந்த முக்கியமான விடயத்துக்கும் எழுந்துநிற்காத, பௌத்த பிக்குகளைப் பற்றி ஒரு சொல்லும் கதைப்பதில்லை. தேசிய கீதத்துக்காகச் சம்பந்தன் எழுந்துநிற்கவில்லை என்று “நாட்டுப் பற்றை” வெளிப்படுத்திய எவருமே, அதே தேசிய நாளில், தேசிய கீதத்துக்கான இன்னொரு நிகழ்வில், ஏனைய மதத் தலைவர்கள் அனைவரும் எழுந்துநிற்க, பிக்கு ஒருவர் மாத்திரம் எழுந்துநிற்காத புகைப்படத்தைப் பார்த்துக் கோபப்பட்டிருக்கவில்லை. எனவே, தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காமை பிரச்சினையில்லை; யார் எழுந்து நிற்கவில்லை என்பது தான் பிரச்சினை.
“மதத் தலைவர்களுக்கு விதிவிலக்கு வழங்கப்பட வேண்டும்” என்று சொல்வார்களாயின், ஏனைய மதத் தலைவர்களும் அவ்வாறு அமர்வதை விரும்புவார்களா என்பது முதல் கேள்வி. அடுத்ததாக, உடல்நலத்துடன் இருக்கும் மதத் தலைவர்களுக்கு விதிவிலக்கு வழங்கப்பட முடியுமாயின், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் அரசியல் தலைவருக்கு ஏன் விதிவிலக்கு வழங்கப்பட முடியாது என்பது, அடுத்த கேள்வி.
இதனால் தான், சிறுபான்மை இனத்தவரை இலக்குவைப்பதற்காக, சம்பந்தன் பயன்படுத்தப்படுகிறார் என்ற குற்றச்சாட்டை, மிக இலகுவாக முன்வைக்க முடிகிறது.
ஒரு தரப்பு இவ்வாறிருந்தால், சம்பந்தன் பிரதிநிதித்துவப்படும் தமிழர்களில் ஒரு பகுதியினர், அதே தேசிய நாளில் பங்குபற்றியமைக்காக, அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். வடக்கிலும் கிழக்கிலும், தேசிய நாளை, கரி நாளாக அறிவித்து, அதைப் பின்பற்றியிருந்த நிலையில், சம்பந்தன் மாத்திரம் தேசிய நாள் நிகழ்வில் கலந்துகொள்வது தொடர்பிலேயே, இவ்விமர்சனங்கள் அமைந்திருந்தன. ஏற்கெனவே, அரசாங்கத்தோடு இணைந்து அல்லது இணங்கிச் செயற்படுவதன் காரணமாக, கடுமையான அழுத்தங்களை எதிர்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, மேலதிக விமர்சனமாக இது அமைந்திருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், திரிசங்கு நிலையில் தான், இந்தத் தேசிய நாள் அமைந்திருந்தது. இதில் கலந்துகொள்ளாவிட்டால், தெற்கிலிருக்கின்ற தரப்புகள், இனவாதப் பிரசாரங்களை ஆரம்பித்துவிடும். தமிழ் மக்கள், இலங்கையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்ற பிரசாரங்கள் கட்டவிழ்த்துவிடும். மறுபக்கமாக, அதில் கலந்துகொண்டால், தமிழரைக் காட்டிக்கொடுத்ததாகக் கூறப்படும். தமிழர் உணர்வுகளை நோகடித்ததாகப் பிரசாரங்கள் தொடரும். இப்படியான சூழ்நிலையில், அதில் கலந்துகொள்வது என்ற முடிவை, சம்பந்தன் எடுத்திருந்தார் என்று கருத முடியும்.
அப்படியிருக்கும் போது, அதன் பின்னரும் இரண்டு பகுதிகளிலிருந்தும் இவ்வாறான விமர்சனங்கள் தொடரும் நிலையில், “பொறுத்ததெல்லாம் போதும். எனக்கும் வயதாகிவிட்டது; அரசமைப்பு வருவதற்கான சூழலும் இல்லை. போராடியது போதும்; இத்துடன் ஓய்வுபெறுகிறேன்” என்று, தனது அரசியல் போராட்டத்தைச் சம்பந்தன் ஒரு வேளை கைவிட்டுவிட்டால், தமிழ்த் தரப்பு என்ன செய்யும்?
-tamilmirror.lk