இலங்கைத்தீவு தமிழரின் பூர்வீக தேசம்; இனவாதிகளுக்கு சவால்விட்ட சிங்கள அறிஞர் பற்றி உங்களுக்கு தெரியுமா?!!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்கள-பௌத்த ஆக்கிரமிப்புக்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அதனைத் தடுப்பதற்கு வழியற்ற நிலையில் தமிழ் மக்களின் கையறு நிலை அண்மைக் காலங்களில் மேலோங்கி வருகிறது.

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து புர்வீக தமிழ் குடிகளின் நிலங்கள் கைப்பற்றப்பட்டு இன்று வடக்கில் பரவலாக வலைவிரித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கைத்தீவு தமிழரின் பூர்வீக நிலம் இல்லை என்ற கருத்து அண்மைக்காலங்களில் சில கடும்போக்குவாதிகளால் பரப்புரை செய்யப்பட்டுவருகின்றது.

மேலும் வடக்கில் உள்ள முக்கியமான மையங்களில் தென்னிலங்கையிலிருந்து வரும் பௌத்த தேரர்கள் புத்தர் சிலைகளை நிறுவிவிட்டு அது பாரம்பரிய சிங்கள பௌத்த மண் எனும் கதைகளை நிலை நாட்டிவருகின்றனர்.

இதற்கு உறுதுணையாக தொல்பொருள் திணைக்களமும் இவர்களுடன் இணைந்து செயற்படுமாப்போல் தமிழரின் மறைக்கப்பட்ட-மறக்கப்பட்ட பூர்வீக வழிபாட்டிடங்களை தமக்குடமையாக மாற்றிக்கொண்டிருக்கிறது.

இலங்கையில் தமிழர்கள் வந்தேறு குடிகள் என கடந்த காலங்களில் ஒரு பௌத்த தேரர் பகிரங்கமாகவே முழங்கிவந்தார். சிங்கள-பௌத்த கடும்போக்குவாதியான எல்லாவல மேத்தானந்த தேரோ எனும் குறித்த தேரர் ஜாதிக கெல உறுமய எனும் இனவாதக் கட்சியின் தலைவராக நாடாளுமன்றுக்கு தெரிவாகி மேற்படி கருத்துக்களை மிகவும் ஆவேசமாக தெரிவித்துவந்தார்.

இன்று எல்லாவல மேத்தானந்த தேரோ பற்றிய கதைகள் சிங்கள மக்கள் மத்தியில் எழுகின்றமையைக் காணக்கிடைப்பதில்லை.

வந்தேறிகளான தமிழர்கள் வடக்குக்கு எப்படி உரிமை கோருவது என எல்லாவல மேத்தானந்த தேரோ கடந்த 2012ஆம் ஆண்டு கடும் இனவாதத்தோடு கேள்வி எழுப்பியிருந்தார். அன்று மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் தீவிர விசுவாசக் கட்சியாக இருந்த ஜாதிக கெல உறுமயவின் பிரதிநிதியான இவரது கருத்து கணிசமானளவு தாக்கத்தினைச் செலுத்தியிருந்தது. யுத்த வெற்றி மமதையிலிருந்த கடும்போக்குவாதிகள் பலருக்கு எல்லாவல மேத்தானந்த தேரோவின் கேள்வி காதில் தேனைப் பாய்ச்சியது.

ஆனாலும் சிங்கள மக்களில் சிலரிடையே இந்த தேரரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பும் வெளியிடப்பட்டது. குறிப்பாக இடதுசாரியும் மனிதநேயப் பங்காளரும் கல்விமானுமாகிய கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன போன்றோர் தேரரின் கருத்தினை பகிரங்கமாக எதிர்த்தார்கள்.

இதில் விக்கிரமபாகு கருணாரத்ன வெளிப்படையாகவே தேரருக்கு சவால் விடுத்தார். அதாவது ”இலங்கைத் தீவு தமிழர்களுக்குரிய தேசம் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன். முதுகெலும்பிருந்தால் தேரர் விவாதத்துக்கு வரத் தயாரா?” என்றார் பகிரங்கமாக.

மேலும் வரலாற்றின் அடிப்படையில் சிங்களவர்கள்தான் வந்தேறிகள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் குறிப்பிட்டிருந்த அவர்,

இலங்கை தமிழரின் தேசம். விஜயன் வந்தபின்பே இங்கு சிங்களமும் பௌத்தமும் உருவாகின. அதற்கு முன்பு இராவணன், குவேணி போன்ற தமிழ் மன்னர்கள் ஆட்சி நிலவியது. இந்த பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். தேரர் ஒரு கல்விமானாக இருந்துகொண்டும் வரலாற்றைத் தெரிந்துகொண்டும் வேண்டுமென்றெ சிங்கள மக்களிடையில் இனவாதத்தை விதைக்கிறார். போலிக் கதைகளால் வரலாற்ரை சிதைக்கிறார். சிங்களவர்கள் வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள். பாகு என்பது பங்களாதேஷ் நாட்டுப் பெயர். பராக்கிரமபாகு, விக்கிரமபாகு போன்ற சிங்களப் பெயர்கள் இருக்கின்றன. விஜயன் தமிழர்களின் தொன்ம இடங்களில் குடியேற்றினான். பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது. எனவே, வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகமே தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது. மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர் என்பதை அரசு புரிந்து கொள்ளவேண்டும்.” என்றார் காரசாரமாக.

இந்த நிலையில் இன்று மீண்டும் தமிழர் மண் பறிக்கப்படுவதும் தமிழரின் தொன்ம இடங்கள் தமது என்று அபகரிக்கப்படுவதும் இந்த சத்தமில்லா யுத்த காலத்தில் தலைதூக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

-athirvu.in

TAGS: