‘இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது?’

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை இலங்கை அரசாங்கம் கூற வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கறுப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சமூக வலைத்தளங்கள் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய ஒன்றுகூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தமது வாய்களை கறுப்பு துணிகளால் கட்டியவாறும், கைகளில் எதிர்ப்பு பதாகைகளை தாங்கியவாறும், தீபங்களை கொழுத்தியும் இவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனை வடக்கு கிழக்கு மாகாணங்களின் பிரச்சனை மட்டுமல்ல மாறாக இது ஓர் இனத்துக்கான பிரச்சனை எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கோரிக்கைகளுக்காக நீதியும் நியாயமுமான பதிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்குவதன் மூலம் இலங்கையில் தற்போதுள்ள இனமுரண்பாடுகளை சுமுகமாக தீர்க்கமுடியும் என போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

போராட்டத்தின் நிறைவில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றினையும் வழங்கி வைத்தனர்.

யுத்தக் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரை, கண்டறிவது தொடர்பிலான நடவடிக்கைகள் முறையான படிமுறையின்கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவிக்கின்றார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனை

இதன்படி, காணாமல் போனோரை கண்டறியும் நடவடிக்கைகளை இலகுப்படுத்தும் வகையில், மன்னார் மற்றும் மாத்தறை ஆகிய பகுதியில் தமது அலுவலகங்களை திறக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அலுவலகங்களை எதிர்வரும் மார்ச் மாதமளவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த அலுவலகங்கள் திறக்கப்பட்டதன் பின்னர், காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவிக்கின்றார்.

-BBC_Tamil

TAGS: