இலங்கை ராணுவம் போர்க்குற்றமிழைத்ததை ரணில் ஏற்றுக்கொண்டது வரவேற்கதக்கது – சுமந்திரன்

இலங்கை ராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டதை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

போரில் ராணுவத்தினர் குற்றமிழைத்தனர் என்ற உண்மையை நாட்டின் பிரதமர் முதன்முறையாக பகிரங்கமாகவும் உத்தியோகபூர்வமாகவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதனை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள 10 ஆண்டுகள் எடுத்துள்ளது. இது வரவேற்கப்படவேண்டிய விஷயம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு என்ன உணர்வு ஏற்பட்டதோ?

“ராணுவ வீரர்கள் எந்தக் குற்றங்களையும் இழைக்கவில்லை அவர்கள் மனிதாபிமானப் போரையே நடத்தினர் என்று இதுவரை இலங்கை அரசு கூறிவந்தது.

எனினும் முதன்முறையாக நாட்டின் பிரதமர் ராணுவத்தினரும் போர்க்குற்றங்களையிழைத்தனர் என்ற உண்மையை பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இதனை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள 10 ஆண்டுகள் எடுத்துள்ளது.” என்று தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

“தற்போது இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு என்ன உணர்வு ஏற்பட்டதோ தெரியவில்லை. அவருக்கு குற்ற உணர்வு ஏற்பட்டதோ? சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளதால் உண்மையை ஒத்துக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதோ தெரியவில்லை.”

இலங்கை
இலங்கை

“போர்க்குற்றங்கள் இழைக்காமல் உலகத்தில் எந்த போரும் நடப்பதில்லை. சுத்தமான போர் என்று எங்கும் எப்போதும் சரித்திரத்தில் நடைபெறவில்லை. அது மட்டுமல்ல போரின் போது ஒரு தரப்பினர் மட்டும்தான் குற்றம் இழைத்தார்கள் என்றும் எங்கும் நடக்கவில்லை.”

தென்னாபிரிக்காவைபோல உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவை நிறுவி உண்மையை சொல்லலாம் என்ற யோசனையை பிரதமர் கூறியிருப்பதாக சுமந்திரன் தெரிவித்தார்.

“குற்றமிழைத்தவர்களே முன்வந்து இதை நாங்கள் செய்தோம் என அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும். தென்னாபிரிக்காவில் நடந்தது அதுதான்.”

ராஜபக்ச

“படையினரும் குற்றமிழைத்திருக்கலாம் என மஹிந்த ராஜபக்ச சொன்னதையோ கிளிநொச்சியில் பிரதமர் மறப்போம் மன்னிப்போம் என்று சொன்னதையோ ஆதரிக்க முடியாது.”

“இதை பிரதமருக்கு தெளிவாக சொல்லிவிட விரும்புகிறோம். உண்மை கண்டறியப்பட வேண்டும். பிரதமருக்கு இதை அழுத்தம் திருத்தமாக சொல்லும் அதேவேளை எங்கள் தரப்பிற்கும் இதை சொல்லிக் கொள்ள வேண்டும்.

எங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம்.” எம்.ஏ.சுமந்திரன் என்றார் . -BBC_Tamil

TAGS: