ஸ்ரீலங்கா இராணுவத்தினர் போர்க்குற்றம் புரிந்தார்கள்; ஒத்துக்கொண்ட ரணில், சந்திரிக்கா, சரத்பொன்சேகா; தென்னிலங்கையில் சலசலப்பு!

இராணுவத்தினர் எந்தச் சந்தர்ப்பத்திலும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்று கூறிவிட முடியாது என சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்துடன், இராணுவத்தினர் சிலர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதையும் அவர் ஒத்துகொண்டு கருத்துத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் மேற்கண்ட விடயத்தினைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் குறிப்பிட அவர்,

”வடக்கில் நடந்த போரை விரைவாகவே முடிவுக்குக் கொண்டுவர கோட்டாபய ராஜபக்‌ஷ ஒரு நிகழ்ச்சி நிரலை வைத்திருந்தார். அந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷ அனுமதி வழங்கினார். அத்துடன் அந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப ஜெகத் ஜயசூரிய முழுமையான பங்களிப்பை வழங்கினார். ஆகவே இராணுவத்தினர்மீது சுமத்தப்பட்டுள்ள போர்குற்றச் சாட்டுக்களுக்கு கோட்டாபய ராஜபக்‌ஷ, மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் எனக்கு பின்னர் இராணுவத் தளபதியாக இருந்த ஜெகத் ஜயசூரிய ஆகியோரே முழுமையான பங்காளிகள்” என்றார்.

இதேவேளை, போர்க்குற்றம் புரிந்த இராணுவத்தினரை பாதுகாக்க மஹிந்த அணியினர் அன்று முயற்சித்ததைப் போலவே இன்றும் முயற்சிப்பதாகவும் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.

அண்மையில் வடக்கு மாகாணத்திற்கான விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இராணுவம் போர்க்குற்றம் இழைத்ததை சூசகமாக கூறியிருந்த நிலையில் அவரைத் தொடர்ந்து முன்னாள் சனாதிபதி சந்திரிகாவும் அதே கருத்தினைத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான சூழ்நிலையில் அன்று இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவும் இதுகுறித்த கருத்தைக் கூறியிருப்பது தென்னிலங்கையில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

-athirvu.in

TAGS: