யாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை ஆரம்பம் ! அசௌகரியத்தில் மக்கள்

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களையடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

கொக்குவில்,இணுவில், தாவடி போன்ற பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் வீதிச் சோதனை நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோன்று காங்கேசன்துறை, பலாலி, மானிப்பாய், பிறவுண் மற்றும் பருத்தித்துறை வீதிகளிலும் ஆங்காங்கே பொலிஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழில் வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசங்களை அடக்குவதற்கு பொலிஸார் விசேட நடவடிக்கைகளை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வந்தனர்.

இதற்காக வீதிச் சோதனை மற்றும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும், யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் பொலிஸாருக்கு விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நடவடிக்கையில் வாள்வெட்டு, குழு மோதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு 200 இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டனர்.

அந்தவகையில் தீவிர நடவடிக்கையால் தலைமறைவாக இருந்த வாள்வெட்டுக் குழு சந்தேகநபர்கள் சிலர் நீதிமன்றங்களில் சென்று சரணடைந்திருந்தனர்.

இதனால்,கடந்த சில வாரங்களாக பொலிஸாருடைய வீதி சோதனை நடவடிக்கைகள் மற்றும் விசேட ரோந்து நடவடிக்கைகள் குறைக்கப்பட்டன.

எனினும், இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திய வாள்வெட்டு குழுவினர் மீண்டும் தமது அட்டகாசங்களை ஆரம்பித்துள்ளமையால் பொலிஸார் மீண்டும் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

-eelamnews.co.uk

TAGS: