இலங்கை அரசாங்கத்திடம் தமிழ் மக்களுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது. இலங்கையில் ஸ்ரீலங்கா, தமிழீழம் என இரு அரசுகள் அமைவதே இலங்கை தமிழ் மக்களின் துயரைத் துடைப்பதற்கான தீர்வாக அமையும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதம அமைச்சரான விசுவநாதன் ருத்ரகுமாரன் வலியுறுத்தியுள்ளார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

“இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வேண்டுகோளை அனைத்து அரசியல் கட்சியினருக்கும் முன் வைக்கிறோம். இலங்கை அரசின் திட்டமிட்ட முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நடந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் அந்த அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்கள் சொல்லமுடியாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர். வடக்கு பிராந்தியத்தில் வீட்டுக்குவீடு ராணுவம் நிற்கிறது. தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இலங்கை அரசாங்கத்திடம் தமிழ் மக்களுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது. இலங்கையில் ஸ்ரீலங்கா, தமிழீழம் என இரு அரசுகள் அமைவதே இலங்கை தமிழ் மக்களின் துயரைத் துடைப்பதற்கான தீர்வாக அமையும். இலங்கையில் இருஅரசுகள் என்ற தீர்வுக்கு இந்தியா ஆதரவளித்தால் உலக நாடுகளின் ஆதரவும் கிடைக்கும். ஈழத்தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டு தமிழக அரசியல் கட்சிகளும் இந்த கோரிக் கைக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். இதற்காக தமிழீழத்திலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தி அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும்.
இலங்கை அரசு செய்த இனப்படுகொலைக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி உரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டம் ஓரிரு நாட்களில் கூடவிருக்கும்வேளையில் அதில் அங்கம் வகிக்கும் இந்தியா, ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க குரல் கொடுக்க வேண் டும். இந்தியாவில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களுக்கு பிறப்புரிமை அடிப் படையில் இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை தமிழக அரசியல் கட்சிகளும் முன்னெடுக்க வேண்டும்.” என்று அமெரிக்காவில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக சென்னையில் அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.
-இந்து தமிழ்

























