ஸ்ரீலங்கா இராணுவத்தால் தற்போதும் ஈழத்தமிழர்களுக்கு சித்திரவைகள்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சர்வதேச அமைப்பின் அறிக்கை!

சித்திரவதைத் தொடர்பில் ‘சகிப்புத்தன்மை முற்றிலுமின்மை’ எனும் கொள்கை குறித்து ஸ்ரீலங்காவின் புதிய அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதிலும் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமை வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.

குறிப்பாக ஸ்ரீலங்காவின் பாதுகாப்புப் படையினரால் தொடர்ச்சியாக தமிழர்கள் சித்திரவைதக்கு உள்ளாவதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சித்திரவதையில் இருந்து விடுவித்துக்கொள்ளும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்காவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னரான, கடந்த 2017 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளில் தடுத்துவைகக்ப்பட்ட மற்றும் சித்திரவதைக்குள்ளான ஸ்ரீலங்கா பிரஜைகள் தொடர்பில் குறித்த அமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட 16 வைத்திய அறிக்கைகள் இந்த விடயத்தை தெளிவுபடுத்துவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறித்த வைத்திய அறிக்கைகளைக் கொண்டு திரட்டப்பட்ட தகவல்களுக்கு அமைய, தடுத்துவைக்கப்பட்ட மற்றும் சித்திரவதை செய்யப்பட்ட அனைவரும் தமிழர்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலக்குவைக்கப்பட்ட மற்றும் தடுத்துவைகக்ப்பட்ட இவர்களில் அதிகமானோர் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கை பின்னணியையும் தற்போது வெளிக்காட்டாதிருந்த போதிலும் யுத்தத்திற்குப் பின்னர் ஸ்ரீலங்கா பாதுகாப்புப் படையினர் வசம் சரணடையாமை காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என அரச அதிகாரிகளினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகச் சந்தேகப்பட்டவர்களும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதோடு இவர்ளுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் அல்லது வேறு சட்டங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் எதவும் பதிவு செய்யப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்திரவதைக்கு உள்ளான நால்வர் தலைநகர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஏனையோர் வட மாகாண மாவட்டங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரச அதிகாரிகள் குறித்த நபர்களிடம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரச விரோத நடவடிக்கைகள் தொடர்பில் சித்திரவதை ஊடாகவே ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல்வேறு உபகரணங்களைக்கொண்டு தாக்குதல் எரியூட்டுதல் உடலின் குறிப்பான இடங்களில் சித்திரவதை செய்தல் மற்றும் மூச்சுத்திணறலை ஏற்படுத்துதல் அத்துடன் அச்சுறுத்தல் மற்றும் அவமானப்படுத்தல் போன்றன உள்ளிட்ட உடல் ரீதியான மற்றும் உள ரீதியான சித்திரவதையினை அவர்கள் அனுபவித்துள்ளனர்.

இதில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாகியிருப்பதோடு மேலும் அனேகமானோர் பாலியல் சித்திரவதைக்கும் ஆளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சிமாற்றம் ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனவின் புதிய அரசாங்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான உறுதிமொழியினை வழங்கியதோடு இது நல்லிணக்கத்திற்கான இன்றியமையாத அம்சமாகவும் திகழ்ந்தது.

எனினும் ஸ்ரீலங்காவில் நல்லிணககம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் போன்றவற்றை மேம்படுத்தும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடந்த 2015 செப்டம்பரில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா அரசானது உறுதியளித்த வாக்குறுதிகளை தொடர்ந்தும் உதாசீனப்படுத்துகிறது என்பதற்கு குறித்த சித்திரவதைகள் தொடர்பிலான ஆதாரங்கள் ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நல்லிணக்க செயற்பாடுகளுக்கான கடப்பாட்டினைக் கொண்ட கூட்டணி அரசாங்கத்தின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டியதோடு எந்தவொரு முன்னேற்றமும் துரித கதியில் தலைகீழாகத் திரும்பக்கூடியது என்பதனையும் நிரூபித்துள்ளது.

ஸ்ரீலங்கா அரசாங்கமானது வாய்மொழி உத்தரவாதங்களுக்கும் அப்பால் செல்லவேண்டியுள்ளதோடு, தனது பொறுப்புக்கூறல் தொடர்பில் நாட்டு மகக்ளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் அது வழங்கிய உறுதிமொழிகளை அமுல் படுத்தும் நோக்கில் ஒரு கால வரையறையினுள் தமது கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு உடன்படவேண்டியுள்ளது என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் பற்றிய நியமங்கள் மற்றும் உள் நாட்டு சட்டம் ஆகியவற்றின் கீழான அதன் கடப்பாடுகள் மூலம் ஒரு யதார்த்தபூர்வ சித்திரவதை தொடர்பில், சகிப்புத்தன்மை முற்றிலுமின்மை’ பற்றிய அதன் கொள்கையினை உருவாக்குதல் வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சித்திரவதைத் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கடமையிலிருந்து இடைநிறுத்தி வைப்பதோடு அத்தகைய நபர்கள் அரசாங்கத்தினுள் அல்லது இராணுவம், பொலிஸ் மற்றும் பாதுகாப்புச் சேவைகளினுள் எந்தளவு அதிகாரம் மிக்கவர்களாகவோ மிக்கவர்களாக காணப்பட்டாலும் அவர்களுக்கு எதிராக குற்றவியல் விசாரணையினை ஆரம்பித்து வழக்குத்தாக்கல் செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சகிப்புத்தன்மை முற்றிலுமின்மை பற்றிய கொள்கையினை எடுத்துக் கூறும் வகையில் சர்வதேச ரீதியில் பொதுமக்களுக்கான தகவல் பிரச்சாரம் ஒன்றினை ஆரம்பித்து வைப்பதோடு சித்திரவதையிலிருந்து உயிர் தப்பியவர்கள் புனர்வாழ்வு மற்றும் பொறுப்புக்கூல் போன்றன பற்றிய தகவல்களை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறித்தான தகவல்களையும் வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட எந்தவொரு நபரும் விருப்பத்திற்கு ஏற்ப சட்ட பிரதிநிதிகளை உடனடியாகப் பெற்றுக்கொள்ளல் மற்றும் சுயாதீன வைத்தியப் பரிசோதனைகளை உடனடியாகப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவானது அதன் பணிப்பாணையினை வினைத்திறனுடன், நாடு முழுவதும் முன்னெடுக்க முடிவதை உறுதிப்படுத்தும் நோக்கில் அதற்குப் போதுமான நிதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் குறித்த கடப்பாட்டினை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவானததொரு கால வரையறையினைக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட மனித உரிமைகள் சபைத் தீர்மானம் ஒன்றின் ஊடாக குறித்த கடப்பாட்டினை மீள வலியுறுத்த வேண்டும் எனவும் சித்திரவதையில் இருந்து விடுவித்துக்கொள்ளும் சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-eelamnews.co.uk

TAGS: