கேப்பாப்புலவு இராணுவ முகாம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி நடத்தப்படும் போராட்டம் இன்று 727வது நாளாக தொடர்கிறது.
கேப்பாப்புலவு இராணுவ முகாமின் நுழைவாயிலிற்கு அருகில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இன்று புது வடிவம் பெற்றதாக கேப்பாப்புலவில் இருந்து வாகனப் பேரணியாக கொழும்பை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் போராட்ட களத்திலிருந்து வாகன பேரணியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி சென்றனர். “காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்” எனும் பெயரில் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அங்கு கவனயீர்ப்பு போராட்டம், கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது. மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் மனு கையளிக்கப்பட்டது.
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த பேரணி கொழும்பை நோக்கி பயணிக்கிறது.
குறித்த பேரணி கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்து அங்கு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும்.
பின்னர் மன்னாருக்கு பேரணி செல்லும். பின்பு வவுனியா, நீர்கொழும்பு ஊடாக எதிர்வரும் 2ஆம் திகதி கொழும்பை சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.
-eelamnews.co.uk