போர் முடிந்து 10 ஆண்டுகள் ஆகியும் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இவ்வாறு செல்லும் பலர் இலங்கையில் கைது செய்யப்படுவது மட்டுமன்றி, இலங்கை கடல் எல்லையை தாண்டி வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக சென்றடைந்த பலரும் நாடு கடத்தப்பட்டும் வருகின்றனர்.
இந்த நிலையில், சட்ட விரோதமான முறையில் அகதிகளாக வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்த 30 இலங்கையர்கள் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்பகுதி கடற்பரப்பில் இன்று அதிகாலை கடற்படையினரால் இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
தென்பகுதி கடற்பரப்பின் 80வது கடல் மைல் தொலைவில் பயணித்த படகொன்று சோதனைக்கு உட்படுத்திய வேளையில் இந்த சட்ட விரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரும் ஆண்கள் என கடற்படையின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேறிகள், காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, போலீஸாரிடம் ஒப்படைக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
கடற்படைக்கு சொந்தமான அதிவிரைவு படகுகளின் மூலம் தென் கடற்பரப்பில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போதே, இந்த கைதுகள் நடைபெற்றுள்ளன.
- இலங்கையில் இந்து-கத்தோலிக்கர் முரண்பாட்டை ஏற்படுத்தும் தீய சக்திகள்: விக்னேஸ்வரன்
- இலங்கையில் கொள்ளையிடப்பட்ட 500 கோடி ரூபாய் மாணிக்கக்கல் மீட்பு
சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது என கடற்படை இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வோர், ஆள் கடத்தலுடன் தொடர்புடையவர்களின் சிக்குண்டு, தமது வாழ்க்கையையும், பணத்தையும் இழப்பதாக கடற்படை கூறியுள்ளது.
- “யுத்தம் நிறைவடைந்த தருணத்திலேயே, நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டது” – மஹிந்த ராஜபக்ஷ
- மன்னார் சம்பவம்: மாவட்ட சர்வமத பேரவையிலிருந்து வெளியேறியது இந்து குருமார் சங்கம்
இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட அனைத்து தேடுதல் நடவடிக்கையின் ஊடாகவும், சட்டவிரோத குடியேறிகள் பலர் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் பிரான்ஸூக்கு சொந்தமான ரியூனியன் தீவை சென்றடைந்த 64 இலங்கையர்கள், அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு பிரான்ஸ் பாதுகாப்பு அதிகாரிகளால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
நாடு கடத்தப்பட்ட 64 பேரும் கொழும்பு – கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கடந்த 14ம் இலங்கை குடிவரவு – குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -BBC_Tamil