பொய்யான விடயங்களை அருட்தந்தை பதவிகளில் இருப்போர் பரப்பிவருவது சாதாரணமான விடயம்தான்; டி.அருண்காந்த் கடும் கண்டனம்!

எப்போது முரண்பாடுகள் வந்தாலும் தமிழ் தேசியத்தின் பெயரால் விட்டுக்கொடுங்கள் என்று ஏன் எல்லோரும் இந்துக்களுக்கு மட்டும் உபதேசம் செய்கின்றீர்கள்? என இந்து சம்மேளன தலைவர் டி.அருண்காந்த் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருக்கேதீஸ்வர வன்முறை சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.,

சிவராத்திரி தினத்திற்கு முந்தையநாள் மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய வீதியில் நுழைவாய் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு மத தீவிரவாதிகளால் துவம்சம் செய்யப்பட்ட பின் தோன்றியுள்ள நிலைமைகள் தொடர்பாக இலங்கை இந்து சம்மேளனம் கூர்ந்து கவனித்து வருகின்றது.

இவ்வன்முறை தொடர்பாக சமூக அமைப்புக்களின் தலைவர்கள் , அரசியல் தலைவர்கள், மத நிறுவனங்களின் தலைவர்கள் தமது கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாக பதிவு செய்திருந்தனர்.

பெருவாரியான இந்து மற்றும் கிருஸ்தவ தலைவர்களும் தமது அறிக்கையிடலில் ஒரேயொரு விடயத்தில் ஒரே விதமான கருத்தை ஆழமாக பதிவுசெய்ய முயன்றிருக்கின்றனர். அதாவது தமிழ் தேசியத்தை சிதைக்கும் விதமான இச்செயற்பாடுகளை சில தீய சக்திகள் மேற்கொண்டுள்ளன. இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் “சில தீய சக்திகளின் நோக்கத்தை நிறைவு செய்ய இடமளிக்கக் கூடாது “என்பதே இவர்களின் தொனிப்பொருளாகவிருந்தது.

சம்பவம் நடைபெற்ற அன்று அங்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் அத்தனைப்பேரும் அவ்வவ் பிரதேசங்களைச்சேர்ந்த உள்ளூர்வாசிகள் என்பது மிகத்தெளிவாகத் தெரிகின்ற நிலையில் இவர்கள் யாரை மூன்றாவது வெளி தீயசக்தியாக காட்டி முழு பூசணிக்காயையும் சோற்றிற்குள் மறைக்கப்பார்க்கின்றார்கள் என்பது மிகத்தெளிவாகப் புரிகின்றது.

ஒருவேளை இவ்வன்முறை தொடர்பான கானொளி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டிருக்காவிட்டால் ஒட்டுமொத்த அமைப்பு ரீதியிலான பலத்தை பயன்படுத்தி இந்துக்களை குற்றவாளிக்கூண்டில் ஏற்றி அழகு பார்த்திருப்பார்கள் என்பது மிகத் தெளிவாகத்தெரிகின்றது.

இவைகளுக்கு அப்பால் மிகவும் அப்பட்டமான பொய்யான விடயங்களை பொறுப்புவாய்ந்த அருட்தந்தை பதவிகளில் இருப்போர் பரப்பிவருவது இந்து சம்மேளனத்தை பொருத்தவரை ஒரு சாதாரணமான விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

ஏன் என்றால் திருக்கேதீஸ்வரம் காணி ஆக்கிரமிக்கப்பட்ட விடயத்தில் இதேபோன்ற முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகளையும் போலியான காணி ஆவனங்கள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளைப்பயன்படுத்தி மிகப்பெரிய மோசடிகளை அரங்கேற்றி அதில் வெற்றியும் பெற்றதை நேரில் பார்த்தவர்கள் நாங்கள்.அன்று முழு உலகுமே அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

அன்று எவ்வாறு போலியான விடயங்களை பரப்பினார்களோ அதேபோல் இன்றும் பொய்யான விடயத்தை ஊடகங்கள் வாயிலாக கூறிவருகின்றார்கள். அதாவது “மாந்தை காணி தொடர்பான வழக்கு நீதிமன்றில் உள்ள போது எப்படி அலங்கார வளைவு அமைக்கலாம்” என்பதே அந்த பொய்யான விடயத்தை பறைசாற்றும் அவர்களது கேள்வி.

உண்மையிலேயே காணி வழக்கிற்கும் இந்த வளைவு அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வளைவு அமைக்கப்பட்டுள்ள பாதை திருக்கேதீஸ்வரம் கோயில் வீதியென்றே பல்லாண்டு காலமாக அழைக்கப்பட்டு வருகின்றது. இவைகளுக்கப்பால் எப்போது முரண்பாடுகள் வந்தாலும் தமிழ் தேசியத்தின் பெயரால் விட்டுக்கொடுங்கள் என்று ஏன் எல்லோரும் இந்துக்களுக்கு மட்டும் உபதேசம் செய்கின்றீர்கள்? இவ் உபதேசம் இருதரப்பிற்கும் அழுத்தமாக சொல்லப்படவேண்டியதல்லவா?

ஆகவே உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் மனம் நொந்துபோய் கவலையுடன் உள்ள இந்த நேரத்தில் நாம் பின்வரும் விடயங்களை தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் வலியுருத்த விரும்புகின்றோம்.அதில் முதலாவதாக…

  1. இவ்வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அவர்களது தரவுகளை ஆவணப்படுத்தவேண்டும்.

02.உலகப்புகழ்பெற்ற திருக்கேதீஸ்வரம் கோவிலுக்குச்செல்லும் வீதியில் நிரந்தரமான வளைவு அமைக்கவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவும் அனைத்து தரப்பினரும் ஆவணசெய்யவேண்டும்.

03.இத்தாக்குதல் ஏன், யாரால் எந்த சந்தர்ப்பத்தில் நடத்தப்பட்டுள்ளது, இதன் பின்னனியில் இருப்பவர்கள் யார் யார் என்பன போன்ற விடயங்கள் முழுமையாக சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிபெயர்கப்பட்டு அனைத்து சிங்கள ஆங்கில ஊடகங்களிற்கு வழங்கப்படவுள்ளதுடன் இலங்கையிலுள்ள பல்வேறு நாட்டு தூதுவர்களுக்கு மன்னார் வன்முறையாளர்களின் முகத்திரை கிழியும் வண்ணம் ஆவணங்களும் கானொளி இருவட்டுக்களும் கையளிக்கப்பட்டு விளக்கமளிக்கப்படவுள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவதோடு அடுத்துவரும் நாட்கள் இந்துக்களுக்கு சவால்மிக்க காலகட்டமாக இருக்கப்போவது தெளிவாகத் தெரிகின்றமையால் இந்துக்கள் அனைவரும் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் ஒற்றுமையுடனும் இருக்குமாறு இந்து சம்மேளனத்தின் சார்பில் வேண்டிக்கொள்கின்றோம் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-athirvu.in

TAGS: