ஓம், செம்மணிப் படுகொலையும் சங்கிலியன் செய்ததுதான்?

முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்த பின்னர், ஈழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மாபெரும் மனிதப் புதைகுழி மன்னார் புதைகுழியாகும். இந்தப் புதைகுழியிலிருந்து சுமார் 350 தமிழர்களின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அதில் சுமார் 50 வரையிலான எலும்புக்கூடுகள் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் என்றும் தெரிய வந்துள்ளது. மன்னார் புதைகுழி தொடர்பில் உண்மையான நிலவரத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழர்கள் தரப்பால் வலியுறுத்தப்படும் நிலை இன்றும் தொடர்கின்றது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம், இப்படுகொலையை மூடி மறைக்க பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டது. புதை குழி காணப்பட்ட இடம், மயானம் என்றும், மயானங்களை அகழந்தால், எலும்புக்கூடுகள் கிடைப்பது வழமை தானே என்றும் சொல்லி இப் புதைகுழியை மூட முற்பட்டது. ஆட்சி மாற்றத்தின் பின்னர், மைத்திரி – ரணில் அரசு இதற்கு நீதியைப் பெற்றுத் தருவதைப்போல பாவனை செய்து கொண்டு புதை குழியை மீண்டும் கிளறியது.

மகிந்த ராஜபக்சவை மிரட்டுவதற்காக தெற்கின் அரசியல் நிலவரங்களை கையாள்வதைப் போலவும், இனப்படுகொலை விடயத்தை காட்டி மிரட்டுவதைப் போலவும் மன்னார் புதைகுழியும் மகிந்தவை மிரட்ட மீண்டும் தோண்டப்பட்டது. ஆனால், இனம் இனத்துடன் சேரும் என்பதைப்போல சிங்களத்தை விட்டுக் கொடுக்காத அரசு, மகிந்தவை மீண்டும் இந்த விடயத்திலும் காப்பாற்ற முற்பட்டிருக்கிறது.

மன்னாரில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அமெரிக்காவில் உள்ள புளோரிடா ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பியது சிங்கள அரசு. அது எந்த காலத்தை சேர்ந்தது என்று கண்டு பிடிக்கும் காபன் அறிக்கைக்காக அனுப்பட்டது. ஆனால் இன்று அமெரிக்கா இலங்கையின் நண்பன் தானே. அதற்கேற்ப மன்னார் புதைகுழி பெறுபேறு வந்திருக்கிறது. இதுவே மகிந்த இருந்திருந்தால் முடிவுகள் மாறியிருக்கும். மன்னார் புதைகுழி அறுநூறு வருடங்களுக்கு முற்பட்டது என்று அமெரிக்கா நிறுவனம் கூறியுள்ளது.

அதாவது சங்கிலியன் காலத்தை சேர்ந்தது என்று கூறுவதன் மூலம், இது சங்கிலிய மன்னனால் கொலை செய்து புதைக்கப்பட்ட கிறீஸ்தவ மக்கள் என்ற கதை கட்டப்படுகின்றது. சங்கிலிய மன்னன் கொலை செய்தவர்கள், முறையாக அடக்கம் செய்யப்பட்டு அவர்களுக்கு கல்லறைகளும் உண்டு. அவர்கள் அந்த இடத்தில் இன்றும் நினைவு கூறப்படுகிறார்கள். அத்துடன் சங்கிலியன் கொலை செய்து இப்படி ஒரு இடத்தில் மக்களை புதைத்ததாக எந்த வரலாறும் இல்லை என்பது மிக வெளிச்சமானது.

சங்கிலியன் செய்த குறித்த கொலை நிகழ்வை ஆவணப்படுத்தியுள்ள கிறீஸ்தவ தேவாலயங்கள் இதுவரையில் இப்படி ஒரு வரலாறை கூறவில்லை. அப்படியிருக்க, அண்மையில் திருக்கேதீச்சர வளைவை அழித்து, தமிழ் மக்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சி செய்த நிலையில், இந்த முடிவும் அதேபோன்று தமிழ் மக்களிடையே பிரிவினைகள் முரண்பாடுகளை தோற்றுவிக்க கதை கட்டப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் பல ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஓமந்தையில் ஆயிரக்கணக்கானவர்கள், சிங்களப் படைகளிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள். இவர்களே இவ்வாறு புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிகக்கப்படுகின்றது. புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட ஆபரணங்கள், கைகளில் இடப்பட்ட விலங்குகள் யாவும் அண்மைய காலத்தை சேர்ந்தவை. இதனை சாதாரணமாக சின்னப் பிள்ளைகூட அறியும்.

இதுவெல்லாம் புரியாமல், சிங்கள அரசும் அமெரிக்காவும் இந்த விடயத்தை மூடி மறைக்க முற்பட்டிருப்பது வேடிக்கையானது. செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அனுப்பினால், அவையும் சங்கிலியன் காலத்தில் கொல்லப்பட்டவர்கள் எ்னறும் அமெரிக்க நிறுவனம் கூறலாம் எனவே இந்த விடயத்தில் நீதியை நிலை நாட்ட வேண்டும். உண்மையை கண்டுபிடிக்க வேண்டும். நடுநிலையான உண்மையான முடிவை சொல்லக்கூடிய நிறுவனம் ஒன்றின் ஊடாக நிலவரம் கண்டுபிடிக்கப்படவேண்டும்.

இந்த விடயத்தில் தமிழ் மக்கள் சோர்வடைய கூடாது. மன்னார் புதை குழி விவகாரத்தில் சிங்கள அரசு அநீதி இழைக்கிறது என்ற கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் எழத் துவங்கியுள்ளன. தமிழ் தலைமைகள் மௌனம் கலைத்து இந்த விடயத்தில செயற்படவேண்டும். சிங்கள அரசினதும் அதன் நண்பன் அமெரிக்காவினதும் உண்மை முகம் வெளியாக வேண்டும். ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

-eelamnews.co.uk

TAGS: