அரசியல் தீர்வின்றி எதனையும் பெற்றுக்கொள்ள மாட்டீர்கள்: சம்பந்தன்

பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அரசியல் தீர்வை வழங்காமல் அரசாங்கம் எதனையும் பெற்றுக்கொள்ளாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்று வருகின்றது. அதில் பங்கேற்று உரையாற்றியபோதே சம்பந்தன் மேற்குறித்தவாறு தெரிவித்தார். சம்பந்தன் தொடர்ந்தும் தெரிவிக்கையில்-

”நாட்டின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. நாட்டின் சிவில் யுத்தமானது, பொருளாதாரம் மற்றும் ஏனைய அபிவிருத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

யுத்தம் நிறைவடைந்து 10 வருங்கள் கடந்துள்ள போதும் பாதுகாப்பு செலவீனங்களுக்காக அதிக தொகை ஒதுக்கப்படுகிறது. அரசாங்கமும் எதிரணியினரும் ஒருவரையொருவர் சாடுகின்றனர். ஆனால், இரு தரப்பினர் மீதும் பிழையுண்டு.

இரு தரப்பினரும் அரசியல் தீர்வை அடைவதில் வெற்றிபெற்றிருந்தால் யுத்தத்தை தவிர்த்திருக்கலாம். பிரபாகரன் உருவாகியிருக்கமாட்டார்.

தமிழ் மக்கள் கோரிய அரசியல் தீர்வை தருவதாக கூறினீர்கள். அதனால், விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முழு உலகமும் உதவியது. ஆனால் நீங்கள் கூறியதை செய்யவில்லை. நியாயமான அரசியல் தீர்விற்காக தமிழ் மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள். இன்றைய நிலையில் அது தோல்வியை நோக்கி செல்வதை பார்க்கின்றோம். காரணம், வீண்விரயங்கள், ஊழல்கள் என்பன மலிந்துவிட்டன. எனினும், நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.

இருதரப்பினரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டிருந்தால் பொருளாதாரத்தை வெற்றிகொள்ள முடியாது. உள்நாட்டு முதலீடுகள் சிறந்த முறையில் இல்லை. எப்படியாவது சமாளித்துக்கொண்டு போக நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு செய்யமுடியாது.

யுத்தத்தின் காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளை எடுத்துக்கொண்டால் அந்நாடுகளின் நேர்மை, சமத்துவம் என்பன இன்று அந்நாடுகளை முன்னேற்றியுள்ளது. அதேபோன்று எமது நாட்டிலும் மக்கள் சமத்துவத்துடன் சமமாக நடத்தப்பட வேண்டும். இலங்கை எமது நாடு என்ற உணர்வு சகல மக்களுக்கும் ஏற்பட வேண்டும். அமைதி, ஐக்கியம் உள்ள நாடாக மாறவேண்டும்.

அதற்கு உள்நாடு மட்டுமன்றி வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நீங்கள் வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனால் மக்கள் உங்களை நம்பவில்லை.

இந்த நிலையை மாற்றியமையுங்கள். வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் சூழலை இலங்கையில் உருவாக்குங்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குங்கள். அரசியல் தீர்வு எட்டாமல் நீங்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

-tamilcnn.lk

TAGS: