மன்னார் மனிதப் புதைகுழியும் கார்பன் அறிக்கையும்

மன்னார், சதொச கட்டட வளாகத்தில், கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள், கி.பி 1477 – 1642 காலப்பகுதிக்குரியவை என்று, கார்பன் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை முன்வைத்து, வாதப்பிரதி வாதங்கள் கடந்த சில நாள்களாக, அனைத்து மட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றன. அதுவும், திருக்கேதீஸ்வர கோவில் நுழைவு வளைவு முரண்பாடுகள் ஏற்படுத்திவிட்ட, மத அடிப்படைவாத விவாதங்களில் நின்றும், மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தைக் கையாளச் சில தரப்புகள் முயல்கின்றன.

மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து, இதுவரை 342க்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில், 26 சிறுவர்களுடையது என்று மன்னார் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்திருக்கின்றார்.

பாரிய மனிதப் பேரவலம் அரங்கேறி, பத்து ஆண்டுகள் கூடக் கடந்துவிடாத நிலையில், மனிதப் புதைகுழி ஒன்றிலிருந்து இவ்வளவு மனித எலும்புக்கூடுகள் மீட்கப்படுகின்ற போது, அது எழுப்பும் சந்தேகமும் அச்சமும் பாதிக்கப்பட்ட தரப்பிடம் அதிகமாகவே இருக்கும்.

அதுவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரை இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்ற சமூகத்திடம் மனிதப் புதைகுழியொன்று ஏற்படுத்தும் அதிர்வு, சொல்லிக் கொள்ள முடியாதது. அப்படிப்பட்ட நிலையில், மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் முன்முடிவுகளும் எதிர்வுகூறல்களும் எழுவது இயல்பானது; அதைத் தவிர்க்கவும் முடியாது.

ஆனால், முன்முடிவுகளோடும் எதிர்வுகூறல்களோடும் விடயமொன்றைக் கடக்கும் போது, அது சமூகத்தில் ஏற்படுத்தும் நம்பிக்கையீனங்கள், சமூக ஒழுங்கை அதிகமாகப் பாதிக்கும்.

அப்படிப்பட்ட நிலையில், உண்மையைக் கண்டறியவேண்டிய தேவை என்பது, எந்தவொரு தரப்பாலும் தவிர்க்க முடியாதது. அப்படிப்பட்ட கட்டமொன்றில் நின்று, மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தை முழுமையாக, சந்தேகத்துக்கு இடமின்றி விசாரணை நடத்தி, தீர்வைக் காண வேண்டியது அவசியமாகும்.

மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகளில், மனித எச்சங்களை, கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டதும், அவை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்துக்கு (Beta Analytic Radiocarbon Dating Laboratory) கடந்த ஜனவரி மாதம் எடுத்துச் செல்லப்பட்டது.

மனித எச்சங்களை எடுத்துச் சென்றோர் குழுவில், மன்னார் சட்ட வைத்திய அதிகாரி, காணாமற்போனோர் தொடர்பிலான பணியகத்தின் உறுப்பினர் ஒருவர், காணாமற்போனோர் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் (மனிதப் புதைகுழி வழக்கிலும்) ஆஜராகும் சட்டத்தரணிகள் இருவர் அடங்கியிருந்தனர்.

இரு வாரங்களில் பரிசோதனை அறிக்கை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அறிக்கையின் மூலப்பிரதி, தபாலில் வந்து சேர்வதற்குக் கால தாமதம் ஆகியதால், கடந்த வாரம், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கின்றது. அதில்தான், மனித எச்சங்கள், சுமார் 350 ஆண்டுகளுக்கும் முன்னையவை என்று கூறப்பட்டிருக்கின்‌றது. முன்முடிவுகளோடு காத்திருந்த சில தரப்புகளை, குறித்த அறிக்கை, ஏமாற்றத்துக்குள்ளும் இன்னும் சில தரப்புகளைத் திருப்திப்படுத்தியும் இருக்கின்றது.

மன்னார் மனிதப் புதைகுழியோடு இராணுவத்தினருக்கும், இராணுவத் துணைக் குழுக்களுக்கும் தொடர்பிருப்பதாகக் கடந்த காலத்தில் பேசப்பட்டது. அதுபோல, இன்னொரு தரப்பால், சங்கிலியன் காலத்துக்குரியவை என்றும் பேசப்பட்டது.

அறிக்கையை ஏற்றுக்கொள்ளாத தரப்புகள், குறிப்பாக காணாமற்போனோர் தொடர்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் தரப்பு, கார்பன் அறிக்கையோடு நின்றுவிடாமல், மண் பரிசோதனை உள்ளிட்ட இன்னும் பல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றது. அத்தோடு, மனித எச்சங்களோடு பத்திரப்படுத்தப்பட்ட ‘பிஸ்கட்’ பொதியொன்று தொடர்பிலும் கேள்வி எழுப்பப்படுகின்றது.

ஆனால், பரிசோதனை அறிக்கையைக் குறிப்பிட்டளவுக்கு ஏற்றுக்கொண்ட தரப்புகள், இன்றைக்கு அந்த அறிக்கையை முன்வைத்து, மதவாதச் சண்டையை ஆரம்பித்திருக்கின்றன.  சமூகம், ஒரு விடயம் தொடர்பிலான தெளிந்த உரையாடலை நடத்துவது அவசியமானது. ஆனால், அந்த உரையாடல்களில், மத அடிப்படைவாதம் மேலெழும்போது, அங்கு ஆக்கபூர்வமான சிந்தனைக்கான வெளி அடைக்கப்பட்டு, புழுகுக்கும் புரட்டுக்குமான வெளி திறக்கின்றது.

மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்திலும் அது நிகழ்ந்து வருகின்றது. அதனை, திருக்கேதீஸ்வர கோவில் நுழைவு வளைவு முரண்பாடுகள், அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியும் இருக்கின்றன. இவ்வாறான நிலை, சமூக முரண்பாடுகளை அதிகப்படுத்தி விடுகின்றன.

மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பிலான, கார்பன் பரிசோதனை அறிக்கையை நிராகரிக்கும் தரப்புகள், தமது வாதங்கள் தொடர்பில் தெளிவான உரையாடலொன்றை முன்னெடுக்க வேண்டும். மாறாக, தமது முன்முடிவுகளுக்கு (அல்லது எதிர்பார்ப்புகளுக்கு) எதிரான பதிலொன்று, பரிசோதனை அறிக்கையில் கிடைத்துவிட்டது என்பதற்காக மாத்திரம், அந்த அறிக்கையை நிராகரிக்கக் கூடாது. ஏனெனில், அவ்வாறான நிலையொன்றைப் பேணும் பட்சத்தில், சமூகத்திடையே தேவையற்ற குழப்பங்களை அது ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.

நீதிமன்ற நடைமுறையூடாக, நடைபெற்ற பரிசோதனை அறிக்கை தொடர்பில் நம்பிக்கையில்லை என்றால், அந்த அறிக்கை தொடர்பில் துறைசார் நிபுணர்களைக் கொண்டு ஆராய வேண்டும்; பிழைகள் இருப்பின் அதைப் பொதுவெளியில் எடுத்துச் செல்ல வேண்டும்; நீதிமன்றத்தில் அதற்கான ஆதாரங்களை, துறைசார் கேள்விகளை எழுப்ப வேண்டும். அதைவிடுத்து, பரிசோதனை அறிக்கையில் சந்தேகம் இருப்பதாக மாத்திரம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுவிட்டு, கடந்துவிட முடியாது.

கடந்த காலத்தில், இராணுவத் தடுப்பிலிருந்த முன்னாள் போராளிகளுக்கு, விஷ ஊசி ஏற்றப்பட்டதான உரையாடலொன்று, தமிழ் மக்களைப் பெருமளவுக்கு உலுக்கியது. சுமார் 12,000 பேரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியது; அவர்கள் சார்ந்த குடும்பங்களைத் தவிக்க வைத்தது.

எதிரிகளை எதிர்கொள்வதற்கான கருவிகளாக, முன்னாள் போராளிகளின் உயிருள்ள உடலை முன்வைத்தும், உத்தியாக அதைச் சில தரப்புகள் முன்னெடுக்க முனைந்தன. ஆனால், அந்தத் தரப்புகளிடம் அடிப்படை அறமும், மனிதமும் கேள்விக்குரியதாக மாறியிருந்தன. 12,000 பேரின் வாழ்க்கையை அச்சுறுத்தலுக்குள் தள்ளுவதற்கு முன்னால், வெளிநாடுகளில் இருக்கின்ற முன்னாள் போராளிகளை வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, விஷ ஊசி ஏற்றப்பட்டிருக்கின்றதா என்கிற விடயத்தைத் தெளிவுபடுத்துங்கள் என்கிற கோரிக்கை பலமாக முன்வைக்கப்பட்டது.

ஆனால், அப்போதும், அதைத் தவிர்த்துவிட்டு, மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்டவர்களையே போர்க் கருவிகளாக மாற்றும் சிந்தனையை, தமிழ்த் தேசியத்தின் பெயரால் சில புல்லுருவிகள் செய்ய நினைத்தார்கள். தற்போதும் அவ்வாறான தோரணையைச் சில தரப்புகள் செய்ய எத்தனிக்கின்றன. அவை, உண்மையிலேயே தவிர்க்கப்பட வேண்டும்.

மன்னார் மனிதப் புதைகுழிகள் விவகாரத்தில், முதலாம் சங்கிலியனைச் சம்பந்தப்படுத்தி முன்னெடுக்கப்படும் உரையாடல்கள், மதவாத, சாதியவாத, பிரதேசவாத சிந்தனைகளில் இடம்பெறுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றன.

வரலாறுகள் என்பது, எப்போதுமே நாம் விரும்பியமாதிரி இருக்க வேண்டியதில்லை. எமது முன்னவர்கள் புனிதர்களாகவோ, வெற்றி வீரர்களாகவோ மாத்திரம் இருக்க வேண்டியதில்லை என்கிற விடயத்தை மனிதர்கள் என்றைக்கும் உணர்வதில்லை. அல்லது, அந்தப் புள்ளியில் நின்று உரையாடவும் விரும்புவதில்லை.

மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பிலான கார்பன் அறிக்கையை நம்பும் தரப்புகள், அந்த அறிக்கையின் வழி, வரலாற்றை ஆராய விளைந்தால், அதை முறையாகவும் பக்கச்சார்பின்றியும் முன்னெடுக்க முன்வர வேண்டும். மாறாக, மகாவம்சம் மாதிரியான ஒன்றை, நாமும் எழுதுவதற்காக, வரலாற்றைப் புனையக்கூடாது.

மன்னார் மனிதப் புதைகுழி, 350 ஆண்டுகளுக்கு முன்னையவை என்று நம்பும் தரப்புகள், அதன் அடிப்படையில் பல்வேறு கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கின்றது.

மீட்கப்பட்ட மனித எச்சங்கள், ஐரோப்பிய படையெழுப்பின் போது, கொல்லப்பட்ட தமிழ் மக்களின் உடையதா? அல்லது,

ஐரோப்பிய படைகளுக்கும் அப்போதைய மன்னார் படைக்கும் இடையிலான சண்டைகளில் பலியானவர்களா? அல்லது,

தமிழ் மக்களிடையே காணப்பட்ட சாதிய ஒடுக்குமுறைகளால் கொல்லப்பட்டவர்களா? அல்லது,

மத மாற்றங்களை முன்வைத்துக் கொல்லப்பட்டவர்களா? இப்படிப் பல கேள்விகள் தொக்கி நின்கின்றன.
இந்தக் கேள்விகளின் எண்ணிக்கை இன்னும் இன்னும் அதிகரிக்கவே செய்யும். மாறாக, நாம் எதிர்பார்க்கும் கேள்விகளை மாத்திரம் எழுப்பி, அதற்குரிய பதிலைத் தேடத் தொடங்கும் போதுதான், சிக்கல்கள் எழுகின்றன; முரண்பாடுகள் அதிகரிக்கின்றன.

தமிழர் தாயகமெங்கும் மனிதப் பேரவலம் நிகழ்ந்திருக்கின்றது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர்தான் முள்ளிவாய்க்காலைக் கடந்து வந்திருக்கின்றோம். அங்கு கொல்லப்பட்டவர்களின் எச்சங்களின் மீதுதான், இன்றைக்குக் கட்டடங்கள் எழுந்து நிற்கின்றன. அவற்றுக்கான நீதியைத் தேடுவதுதான், தமிழ்த் தரப்பின் அடிப்படையாக இருக்க வேண்டும்.

அந்த அடிப்படைகளின் போக்கில், மன்னார் மனிதப் புதைகுழியையும் அணுகுவது தப்பில்லை. ஆனால், அதனை, அக முரண்பாடுகளின் கருவியாக மாற்றுவது சரியான ஒன்றல்ல. அது, தமிழ் மக்களை இன்னும் இன்னும் படுகுழியை நோக்கியே தள்ளும்.

-tamilmirror.lk

TAGS: