வன்பலம் குன்றியபோது மென் பலத்தினால் எமது அபிலாஷைகளை நாம் அடைவோம்!

வன் பலம், மென் பலம் ஆகிய இருவேறு தடத்தில் எமது இனம் பயணித்தது. வன்பலம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், மென்பலத்தினூடாகப் பயணித்த எமது கட்சி, தமது அணுகுமுறைகளில் சிற்சில மாற்றங்களை ஏற்படுத்தி, சர்வதேசத்தின் ஆதரவுப் பலத்தைத் திரட்டி எமது மக்களின் நியாயமான அபிலாஷைகளை நாம் அடையவேண்’டும். அதற்கான முனைப்புகளுடன் தற்போது செயற்படுகின்றோம்.

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ‘காலைக்கதிர்’ நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

போருக்குப் பின்னரான சூழ்நிலையில் கூட்டமைப்பு மிகவும் கடினமானதொரு பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அதுவரை தமிழர் தரப்பு சார்பாக அரசியல் முன்னெடுப்புக்கள் இரண்டு வழிகளில் சமாந்தரமாக இருந்தன. அதாவது ஒரு பக்கத்தில் ஆயுதப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அதற்குச் சமாந்தரமாக அரசியல் பொது வெளியிலும் ஜனநாயக அரசியலாக மக்களை பிரதிநிதித் துவப்படுத்துபவர்களாகக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்திலும் வேறு இடங்களிலும் மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலித்துக் கொண்டு இருந்தது.
இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று பலம் சேர்ப்பவைபோல நடந்து வந்தன. ஆனால், போரிலே தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் கூட்டமைப்பு தனது அணுகுமுறைகளை வெகுவாக மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது.
ஏனென்றால், பேச்சு மூலமாக மட்டும் தான் இனிமேல் ஒரு தீர்வுக்கு வழிவகுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்ட பிறகு,  அந்தப் பேச்சு மேசையில் ஆயுதப் பலம் இல்லாத ஒரு சூழலில் என்னவிதமாக எங்கள் மக் களின் நலன்களை முன்னெடுக்க முடியு மென்பது குறித்து நாங்கள் சிந்தித்துச் செயலாற்றவேண்டியிருந்தது.
அதில் இந்த வன்பலம் அல்லது ஆயுதப் பலம் இல்லாதபோது மென்வலுவை நாங்கள் உபயோகிக்க வேண்டியவர்களாக  இருந்தோம். அதாவது, எங்கள் பக்க நியாயங்களை நாங்கள் எடுத்துச் சொல்லி,  அந்த நியாயங்கள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியனவாக இருக்கின்றபோது மட்டும் அதற்குச் சர்வதேசத் தளத்தில் ஆதரவுத் தளமொன்று ஏற்படும். அப்படியான ஒரு செயற்பாட்டில் நாங்கள் இறங்கவேண்டியவர்களாக இருந்தோம்.
ஏனென்றால்,  எங்களுக்குப் பக்க பலமாகச் சர்வதேசத்தைத் தவிர வேறு எந்தப் பலமும் இல்லை. போர் முடியும் காலம் வரை அந்த சர்வதேச ஆதரவு தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலலாஷைகளுக்குச் சாதகமாக இருந்தபோதிலும்கூட தமிழீழ விடுதலைப் புலிகள் சம்பந்தமாக ஓர் எதிரான நிலைப்பாட்டைத்தான் முழு சர்வதேசமும் கொண்டிருந்தது.
30 நாடுகளுக்கு மேல் விடுதலைப் புலி களைப் பயங்கரவாத இயக்கமென்று தடை செய்திருந்தார்கள். ஆகவே போருக்குப் பின் கூட்டமைப்பு எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் சர்வதேசத்தின் ஆதரவைத் தொடர்ச்சியாகத் தக்க வைத்துக்கொள்ளும் ஒரு முன் னெடுப்பாக அதில் நாங்கள் கவனமாகச் செயற்படவேண்டியவர்களாக இருந்தோம்.
எங்கள் நீண்ட கால அபிலாஷைகள் நியாயமானவை. அதில் எந்தவிதமான தவறும் இருக்கவில்லை. ஆனால், எங்கள் அணுகு முறைகளும் நியாயமான ஜனநாயக ரீதியான அணுகுமுறைகள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டியவர்களாக  இருந்தார்கள். அதற்குச் சில காலம் எடுத்தது.
ஆனால், ஒரு சில வருடங்களுக்குள்ளே அந்த ஆதரவுத் தளத்தை நாங்கள் பெறக் கூடியதாக இருந்தது. அதில் 2012 ஆம் ஆண்டு அளவிலே முழுமையான சர்வதேச ஆதரவை நாங்கள் பெற்றுக்கொண்டோம். அதை எங்கள் மக்களுக்குச் சாதகமாக உப யோகித்து வருகிறோம்.
ஆனால்,  இந்தக் கால கட்டத்தில் எங்களுக்கு உள்ள சவால், இலங்கை அரசை நோக்கியதாக மட்டும் அல்ல. சர்வதேச சமூகத்
தின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வது மட்டுமல்ல. எங்கள் மக்களின் ஆதரவையும் நாங்கள் தொடர்ந்து பேணவேண்டிய ஒரு தேவை இருந்தது.
அதில் எங்கள் மாற்று அணுகுமுறையைச் சரியாக மக்களுக்கு  விளங்கப்படுத்தும் முயற்சியிலே நாங்கள் முழுமையாக வெற்றி கொண்டிருக்கவில்லை. எங்கள் செயற்பாட்டில், என்னுடைய கருத்தின் படி நாங்கள் சரியான விதத்திலேதான் நடந்தோம். அதில் வெகுவாக முன்னேறினோம். விசேடமாக சர்வதேசத்தின் ஆதரவைத் தொடர்ந்தும் தக்க வைத்துக்கொண்டிருந்தோம்.
ஆனால், இந்த அணுகுமுறை மாற்றம் இன்னமும் சரியாக மக்கள் மத்தியில் வேரூன்றவில்லை. மக்களுக்கு அதனைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கையை நாங்கள் சரியாக மேற்கொள்ளவில்லை. – என்றார்.
-tamilcnn.lk
TAGS: