ஈழ இனப்படுகொலையை மறக்கவும் மாட்டோம்! மன்னிக்கவும் மாட்டோம்!!

கடந்த மாதம் கிளிநொச்சிக்கு வந்த ஸ்ரீலங்காப் பிரதமர், ரணில் விக்கிரமசிங்க, மறப்போம் மன்னிப்போம் என்றொரு வாசகத்தை கூறிச்சென்றிருந்தார். ஈழத் தமிழ் மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கிய வாசகம் அது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தப் பேச்சை கண்டித்து கருத்துக்களை வெளியிட்டு இருந்தார்கள். சிங்கள தேசத்தின் மறப்போம் மன்னிப்போம் என்ற வாசகத்திற்கு தமிழ் தேசத்தின் பதில் என்ன?

மறப்போம் மன்னிப் போம் என்று எதற்காக ரணில் கூறினார் தெரியுமா? நிய ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார். பின்னர், தனது இலட்சியத்தை நெல்சன் மண்டேலா வென்றெடுத்தார். தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட நிற ஒடுக்குமுறை குறித்த விடயத்தை அந்நாட்டு அரசு மறப்போம் மன்னிப்போம் என்று நெல்சன் மண்டேலாவைப் பார்த்துக் கூறியது. அப்போது நெல்சன் பின்வருமாறு கூறினார்.

“மன்னிக்கலாம்! ஆனால் மறக்க முடியாது.. ” என்று கூறினார் அவர்.

ஸ்ரீலங்காப் பிரதமரின் கருத்து தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையாளர், தென்னாபிரிக்காவை சேர்ந்த நவநீதம்பிள்ளை அம்மையார் கருத்து தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த போரை தென்னாபிரிக்காவுடன் ஒப்பிட முடியாது என்றும் ஸ்ரீலங்காப் பிரதமரின் முட்டாள்தனமான ஒப்பீடு இது என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் நடந்தது போன்று பாரதூரமான சம்பவங்கள் ஏதும் தென்னாபிரிக்கப் பிரச்சினையில் இடம்பெறவில்லை என்றும் நவநீதம்பிள்ளை அம்மையார் கூறியிருக்கிறார்.

ஆக. ரணிலின் கூற்றை ஈழத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் மாத்திரம் எதிர்க்கவில்லை. பன்னாட்டுச் சமூகமும் எதிர்க்கின்றது மனித உரிமைகள் பேரவையில் உயர்ஸ்தானிகராக இருந்த நவநீதம்பிள்ளை அம்மையாரும் எதிர்க்கின்றார். இதற்கான காரணம், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை. ஒன்றரை இலட்சம் மக்கள் இன அழிப்பு செய்யப்பட்டார்கள். தென்னாபிரிக்காவின் நிற ஒடுக்முறையை இதனுடன் ஒப்பிட முடியாது. இலங்கையில் அதையெல்லாம் தாண்டி இன அழிப்பு வன்முறை யுத்தம் நடந்திருக்கிறது.

ஈழத்தில்தான் சிங்களப் படைகளால், இசைப்பிரியா போன்ற பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொல்லப்பட்டார்கள். ஈழத்தில்தான் சிங்களப் படைகளால், பாலச்சந்திரன் போன்ற சிறுவர்கள், பிஞ்சுடம்பில், இரும்பு துப்பாக்கிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். தென்னாபிரிக்காவில் இப்படியெல்லாம் நடக்கவில்லை. அப்படியிருந்தும் அவர்கள், மன்னிக்கிறோம், ஆனால் மறக்க மாட்டோம் என்றுதான் கூறினார்கள். ஆனால் ஈழத்தில் நடந்ததை மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது.

ஈழத்தில் இன்றைய தினம் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என்ற தொனிப் பொருளில் பன்னாட்டு சமூகத்தின் தலையீட்டை வலியுறுத்தி ஒரு மாபெரும் போராட்டம் நடைபெற்றுள்ளது. இனப்படுகொலை மறக்கக்கூடிய காயமல்ல. அதனை ஒருபோதும் மன்னிக்க முடியாது. ஈழத்தில் மாபெரும் இனப்படுகொலையை புரிந்த சிங்கள அரசு, குற்றவாளிக் கூண்டிலில் ஏற்றப்படவேண்டும். இதனை வலியுறுத்தியே யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் போராட்டத்தை நடாத்தியுள்ளனர்.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று மக்களும் மாணவர்களும் விண்ணதிர வலியுறுத்தியுள்ளனர். தற்போது, ஜெனீவாவில் மனித உரிமைப் பேரவையின் அமர்வு நடக்கின்றது. இதில் இலங்கைக்கு மீண்டும் கால அவகாசம் கொடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. மீண்டும் மீண்டும் இலங்கை கால அவகாசத்தை கோரி, காலத்தை கடத்தும் முயற்சி நடக்கின்றது. இன்றைய போராட்டத்தின்போது, ஸ்ரீலங்கா அரசுக்கு இனியும் கால அவகாசம் வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி மாணவர்களும் மக்களும் குரல் எழுப்பியுள்ளனர்.

யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ள இந்தப் போராட்டத்தில், பெருமளவு பொதுமக்களும்கலந்துகொண்டுள்ளனர். ஈழத் தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்திடம் முன்வைத்துள்ள இந்தக் கோரிக்கையை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இலங்கைமீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் இந்தப் பிரச்சினையை கொண்டு சென்று, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்பட்டு, ஈழத் தமிழ் இனத்திற்கு நீதியும் விடுதலையும் வழங்கப்படவேண்டும்.

-eelamnews.co.uk

TAGS: