விருப்பத்திற்கு மாறாக தமிழ் மக்கள் ஆளப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இலங்கை தொடர்பான பிரச்சினையை தொடர்ந்தும் சர்வதேச மட்டத்தில் எடுத்துச்செல்ல வேண்டும் என ஐ.நா.வுக்கான முன்னாள் அரசியல் பிரிவின் செயலாளர் நாயகத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா.வுக்கான முன்னாள் அரசியல் பிரிவின் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது அக்டோபர் 26, 2018 அன்று இடம்பெற்ற சம்பவங்களின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைவரும் செயற்பட்ட விதம் குறித்து தனது பாராட்டுக்களை ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், அரசியல் யாப்பிற்கு முரணான சம்பவங்களை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்பதில்லை என கூறினார்.
மேலும், காணாமல் போனோருக்கான அலுவலகம், நஷ்டஈடு அலுவலகம் மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் போன்றவை மக்கள் மத்தியில் செயற்படுவது அவசியம் என தெரிவித்தார்.
அத்தகைய அலுவலகங்கள் உண்மையை நிலைநாட்டும் முகமாக தொடர்ச்சியாக மக்களோடு இடைப்பட வேண்டும் எனவும் முன்னாள் ஐ.நா. அரசியல் பிரிவின் செயலாளர் நாயகத்திடம் எடுத்து கூறினார்.
இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக இலங்கை தொடர்பான பிரச்சினையை சர்வதேச மட்டத்தில் எடுத்துச்செல்ல வேண்டும் எனவும் சம்பந்தன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைப்பது மாத்திரமல்லாது அரசாங்கமும் ஏனைய தரப்பினரும் தங்களை குறித்து கரிசனையாக உள்ளார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளும் முகமாக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அரசாங்கமும் சில அரசியல்வாதிகளும் இதனை தமிழ் சிங்கள பிரச்சினையாக உருவாக்க முயற்சிப்பதாக குறிப்பிட்ட அவர், இது அடிப்படை மனித உரிமையுடன் சம்பந்தப்பட்ட பிரச்சனை எனவும் சுட்டிக்காட்டினார்.
தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளை தீர்ப்பது தலைவர்களின் கடமை என தெரிவித்த சம்பந்தன் அரசியல் விருப்பம் இல்லாமை நாடு முன்னேற்றகரமான பாதையில் செல்வதற்கு தடையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பிரிக்க முடியாத, பிரிபடாத ஒருமித்த நாட்டிற்குள் நியாயமான ஒரு அரசியல் தீர்வினையே தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.
அத்துடன், விருப்பத்திற்கு மாறாக தமிழ் மக்கள் ஆளப்படுவதாகவும் ஐநாவுக்கான முன்னாள் அரசியல் பிரிவின் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மனிடம் சம்பந்தன் எடுத்துரைத்தார்.
-tamilcnn.lk