“வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறையை ஏற்பதற்கு இலங்கை அரசு ஜெனிவாவில் மூன்றாவது முறையும் இணக்கம் வெளியிட்டுள்ளது. எனவே, கலப்பு விசாரணைப் பொறிமுறையை இலங்கை அரசு அமைக்கத் தவறினால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும்.”
– இவ்வாறு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் விவசாய அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் தவறான பிரகாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கை அரசு இழுத்தடிப்பு செய்வதால்தான் மேலும் கால அவகாசம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. ஆனால், உண்மை அதுவல்ல. இலங்கை மீதான சர்வதேசக் கண்காணிப்பை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கும் வகையிலேயே புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்துக்கு இலங்கை அரசும் இணை அனுசரணை வழங்கியுள்ளது. குறிப்பிட்டதொரு கால அட்டவணையின்கீழ் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடங்கலான கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை ஏற்கின்றோம் என்று மூன்றாவது முறையும் எழுத்துமூல உத்தரவாதத்தை வழங்கியுள்ளது இலங்கை அரசு.
எனவே, வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பதற்கு இலங்கையின் அரசமைப்பில் இடமில்லை என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஜெனிவாவில் விடுத்த அறிவிப்பு தவறானது; முறையற்றது.
மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்காக வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதை இலங்கையின் அரசமைப்பு தடை செய்யவில்லை.
நாட்டின் நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு, 2015இல் நீதி அமைச்சராக இருந்த விஜயதாஸ ராஜபக்ச இணங்கியிருந்தார். அவரது இணக்கத்தின் அடிப்படையில்தான், 30/1 தீர்மானத்தில் கையெடுத்திடப்பட்டது.
2013ஆம் ஆண்டு முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்ற விசாரணைப் பிரேரணை கொண்டு வரப்பட்டபோது, அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த விஜயதாஸ ராஜபக்ச, வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளில் இணைத்துக்கொள்ளக் கோரும் தனிநபர் பிரேரரணையை சமர்ப்பித்திருந்தார்.
தமிழ் மக்கள் முற்றிலும் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிப் பொறிமுறையைத்தான் கேட்கின்றார்கள்.
எனவே, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்கொண்டு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும்” – என்றார்.
-tamilcnn.lk