ஐ.நா. பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிடின் மோசமான விளைவை இலங்கை அரசு சந்திக்கும்!! – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எச்சரிக்கை

“ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை காலவரையறைக்குள் இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இதை அரசு செய்யாமல் இருந்தால் அதன் விளைவுகள் வேறு விதமாக அதாவது மிகவும் பாரதூரமாக இருக்கும்.”

– இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் 40/1 என்ற புதிய தீர்மானம் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் வாக்கெடுப்பின்றி கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மூன்றாவது தடவையாக இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறல், நீதி நியாயம், காணாமல்போனோர் விடயம், மீள் நிகழாமை, நல்லிணக்கம் மற்றும் அதிகாரம் சம்பந்தமாக – எல்லாக் கருமங்களும் முதல் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைவாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தப் புதிய தீர்மானத்தையும் நாம் வரவேற்கின்றோம். இதனை முன்னின்று நிறைவேற்றிய பிரிட்டன் தலைமையிலான உலக நாடுகளுக்கும் நாம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும். அதில் உள்ள பரிந்துரைகளை காலவரையறைக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதை அரசு செய்யாமல் இருந்தால் அதன் விளைவுகள் வேறு விதமாக அதாவது மிகவும் பாரதூரமாக இருக்கும்.
ஐ.நாவின் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத் தேவை இலங்கை அரசுக்கு இருக்கின்றது” – என்றார்.
-tamilcnn.lk

 

TAGS: