‘வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதீர்’

தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வரை அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். முன்னாள் போராளிகளையும் நிம்மதியாக இருக்கவிட மாட்டீர்கள் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கடுமையாகச் சாடியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, இனியும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாது மக்களை வாழ விடுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தாங்கள் இதுவரை செய்து வந்த அரசியலை மிகவும் அவதானமாகக் கவனித்து வந்தபடியால் சில ஆலோசனைகளை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு என்னை ஆளாக்கி விட்டீர்கள் என விளித்து எழுத்தியுள்ள பகிரங்கக் கடிதத்திலேயே, மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில், ஊடகமொன்றுக்கு அளித்திருந்த செவ்வியில் “வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள்தான் ஆயுதப் போராட்டத்தை ஆரப்பித்தார்கள் என்றும், இராணுவத்தினரைவிட அதிகளவு பொதுமக்களை விடுதலைப் புலிகள்தான் கொன்றார்கள்” என்றும் கூறியிருந்தீர்கள். அதனால் விடுதலைப் புலிகளும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற கோணத்தில் கூறியிருந்தீர்கள். இது அன்றைய அரசாங்கத்துகும் ஒரு வாய்ப்பாகப் போய்விட்டது.

ஆனால், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்றால் இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுமாறு, சர்வதேச சமூகத்தைக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்று இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்துவது போன்று வீராப்பு வசனம் பேசியிருக்கின்றீர்கள் எனக் கேட்டுள்ளார்.

இதனை “நான் அடிப்பதைப் போன்று அடிக்கின்றேன் நீ அழுவதைப் போன்று அழு” என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது வரப் போகின்ற தேர்தலில் தமிழ் மக்களுக்கு ஞாபகமறதி அதிகம் என்பதால் இப்படிப் பேசியாவது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ஆரம்பம் என்று எடுத்துக்கொள்ளலாமா? எனக் கேட்டுள்ளார்.

சரிந்து கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியின் செல்வாக்கை நிமிர்த்துவதற்கான தூக்கி நிறுத்தும் செயற்பாடாக எடுத்துக் கொள்ளலாமா? நீங்கள் மட்டுமல்ல இப்போது தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபையில் அரசுக்கு எதிராகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். தேர்தல் வரப்போகின்றது, இனி என்ன தமிழரசுக் கட்சி வீர வசனம் பேச வேண்டிய நேரம்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தங்களின் உயிருக்கு ஆபத்து எனக்கூறி புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளையும் சிறைக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றீர்கள். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வெளியில் வந்து சகவாழ்வுக்குத் திரும்பி தங்கள் குடும்பத்தினருடன் வாழும் முன்னாள் போராளிகளையும் சிறையில் தள்ளும் நோக்கோடு தங்கள் சகாக்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த நிலையில், எவ்வாறு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என, அக்கடிதத்தில் கேட்டுள்ளார்.

இரு நாடுகள் செய்துகொண்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் இணைந்திருந்த வடகிழக்குப் பிரிக்கப்பட்டுள்ளதே, இரு நாடுகள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ஒரு நாட்டின் நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது என்று ஏன் வரிந்து கட்டிக்கொண்டு நீதிமன்றம் செல்லவில்லை எனவும் அதில் கேட்டுள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணை வரும்போது நீங்கள் எந்தப்பக்கத்தில் நிற்பீர்கள் எனக் கேட்டுள்ள அவர், ஒரு சிலரின் பதவி ஆசையால் எமது மக்கள், முள்ளிவாய்க்கல் வரை சென்று பல துன்பங்களை அனுபவித்து வந்து விட்டார்கள். தயவுசெய்து இனியும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாது அவர்களை வாழ விடுங்கள் என்றும் அந்தக் கடிதத்தில் கேட்டுள்ளார்.

-tamilmirror.lk

TAGS: