‘தமிழர்களுக்கு ஐ.நா தீர்மானம் ஏமாற்றத்தை அளித்துள்ளது’ – சி.வி. விக்னேஸ்வரன்

இலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாது என்ற அரசாங்கத்தின் கூற்று பொருத்தமற்றது. நீதியரசர் பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன குழுவை உதாரணமாக கொண்டு கலப்பு நீதிமன்றம் அமைக்க முடியும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

ஜெனீவா மனித உரிமை அமர்வு தொடர்பில் அவர் கருத்தை வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய நாடுகள் சபையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு ஆண்டு காலம் வழங்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் கடந்த மார்ச் 21 அன்று உறுப்பு நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் 40/1 என்ற தீர்மானத்தினை நிறைவேற்றி இருப்பது தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கின்றது.

போர்க்குற்றம் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்புவதற்கும் எமது மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து இழைக்கப்படுவதற்குமே இந்தப் பிரேரணை வழிவகுக்கப்போகின்றது.

இனப்படுகொலை புரிந்து எமது பெண்களை நூற்றுக்கணக்கில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ராணுவத்தை தண்டனையில் இருந்து காப்பாற்றும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த பிரேரணைக்கு சார்பாக செயற்பட்டமையும் வேதனையை அளிக்கின்றது.

30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேல் கடந்துள்ள நிலையில் அதனை நிறைவேற்றுவதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவோ அல்லது அவற்றை நிறைவேற்றவோ விருப்பம் எதனையும் வெளியிடாத இலங்கை அரசாங்கம், மாறாக இந்த தீர்மானத்தின் முக்கிய பல விடயங்களை மீண்டும் மீண்டும் நிராகரித்தே வந்துள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்படவேண்டும் என்ற 30/1 தீர்மானத்தினை நிறைவேற்ற வலியுறுத்தும் 40/1 தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கிக்கொண்டே கலப்பு நீதிமன்ற யோசனையை இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் சபையில் கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக நிராகரித்திருக்கின்றது.

இலங்கை

இது எந்த அளவுக்கு இலங்கை அரசாங்கம் 30/1 தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு அக்கறை கொண்டிருக்கிறது என்பதனையும் அதன் நேர்மைத் தன்மையையும் அதன் ஏமாற்று தந்திரத்தையும் வெளிச்சம்போட்டு காட்டுகின்றது.

ஐ. நாவுக்கு எழுத்துமூலம் கொடுத்த வாக்குறுதிகளையே அடுத்த நிமிடம் காற்றில் பறக்கவிடும் இலங்கை அரசாங்கம் கடந்த பல தசாப்த கால இனப்பிரச்சினையில் எத்தனை ஒப்பந்தங்களை உதாசீனம் செய்திருக்கும் என்பதனையும் இது எந்தளவுக்கு தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையும் விரக்தியையும் கொடுத்திருக்கும் என்பதையும் சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கையில் ஒரு இனப்படுகொலை நடைபெற்றபோது அதனைத் தடுப்பதற்கு தவறி இருந்த ஐ. நா மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவை யுத்தத்தின் பின்னர் பொறுப்புக்கூறல் மற்றும் நீதிச் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான பெரும் கடப்பாட்டை கொண்டிருந்தன.

ஆனால், ஐ. நா மனித உரிமைகள் சபையினூடான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் செயன்முறையை அலட்சியமாகவும் விளையாட்டு போலவும் இலங்கை அரசாங்கம் கையாளுவதற்கு சர்வதேச சமூகம் இடமளித்திருப்பது இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறுவதற்கும் உலகில் ஒரு பிழையான முன்னுதாரணம் ஏற்படுவதற்குமே வழிவகுக்கப்போகின்றது.

இறுதி யுத்தத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்களானவை சர்வதேச சட்டங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு அமைவாக விசாரிக்கப்பட்டு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால் உலகின் பலநாடுகளிலும் இன்று போர்க்குற்றங்கள் இடம்பெறாமல் சர்வதேச சமூகம் தவிர்த்திருந்திருக்கக்கூடும்.

ஆகவே, 40/1 பிரேரணையை நிறைவேற்றுவதற்கு அனுசரணை வழங்கிய அனைத்து நாடுகளும் 30/1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றுவதற்கு காத்திரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்.

அத்துடன், ஐ. நா மனித உரிமைகள் சபையின் ஆணையாளரின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கும் இந்த நாடுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பொதுமக்களின் காணிகளில் இருந்து ராணுவம் விலகவேண்டும் என்று மூன்று வருடங்களுக்கு முற்பட்ட 30/1 தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்களின் காணிகளில் இன்னமும் ராணுவம் நிலைகொண்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை. நீக்குவதானால் அதனிலும் கொடிய ஒரு சட்டத்தை ஏற்ற பின்னரே முன்னையதை நீக்கலாம் என்று அரசாங்கம் கூறி வருகின்றது.

முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திரிகோணமலை மாவட்டங்களில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி
காணாமல் போன தமது உறவுகளைத் தேடி அவர்களது உறவினர்கள் ராணுவ முகாம்களுக்கும் போலிஸ் நிலையங்களுக்கும் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றார்கள். வீதிகளில் நின்று போராடுகின்றார்கள். ஆனால் பலன் ஏதும் கிடைப்பதாக இல்லை. அதனால்தான் ஐ. நா மனித உரிமைகள் சபை இலங்கைக்கான விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் தனது நிரந்தர அலுவலகம் ஒன்றை வடக்கு கிழக்கில் நிறுவவேண்டும் என்றும் நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

இதன் மூலம், வடக்கு கிழக்கில் தொடரும் மனித உரிமை மீறல்களை நிறுத்த முடிவதுடன் 30/1 தீர்மான விடயங்கள் நிறைவேற்றப்படுவதை கண்காணிப்புச்செய்யவும் முடியும். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் உறுப்புநாடுகள் தீவிர கவனம் செலுத்தவேண்டும்.

அதேவேளை, போர்க்குற்றங்களை விசாரணை செய்ய வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை நிறுவுவதற்கு உடனடியாக உறுப்புநாடுகள் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

இலங்கை

இலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைக்கமுடியாது என்ற அரசாங்கத்தின் கூற்று பொருத்தமற்றது. 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் பி. என். பகவதி தலைமையில் 16 மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரணை செய்யும் உடலகம ஆணைக்குழுவின் விசாரணைகளைக் கண்காணிப்பதற்கு அமைத்த முன்னணி நபர்களைக் கொண்ட சர்வதேச சுயாதீன குழுவை உதாரணமாக கொண்டு கலப்பு நீதிமன்றத்தை உருவாக்கலாம்.

வெளிநாட்டு நீதிபதிகளின் உள்ளடக்கம் எவ்வாறு மனித உரிமைகள் மீறல் பொறிமுறைகளில் சர்வதேச தராதரத்தையும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையையும் ஏற்படுத்தும் என்பதற்கு நீதியரசர் பகவதி குழு ஒரு சிறந்த உதாரணமாகும்.

அதேபோல, இலங்கை அரசாங்கத்தின் உடலகம ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் சர்வதேச தராதரம் மற்றும் கோட்பாடுகளுக்கு அமையாமலும் வெளிப்படைத்தன்மை இன்றியும் நடைபெற்றது என்று கூறி ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் ஒரு வருடத்துக்கு பின்னர் “சர்வதேச சுயாதீன குழுவை” நீதியரசர் பகவதி கலைத்தமையானது ஏன் உள்நாட்டு பொறிமுறை இலங்கைக்கு பொருத்தமற்றது என்பதற்கான ஒரு சிறந்த உதாரணமாகும்.

அப்போது காலஞ்சென்ற நீதியரசர் மார்க் பர்ணாண்டோவுடனும் என்னுடனும் குறித்த சர்வதேச சுயாதீனக் குழுவானது கலந்து பேசி அறிவுரைகளை பெற்றிருந்தது என்பதை இத்தருணத்தில் கூறி வைக்கின்றேன் என தெரிவித்தார். -BBC_Tamil

TAGS: