சுமந்திரன் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் புரிந்து செயற்பட வேண்டும்: க.அருந்தவபாலன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் புரிந்து செயற்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளரான கந்தையா அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.

“நிறைவடைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது அமர்வில், எமது மக்களை இனப்படுகொலை செய்த இராணுவத்தைக் காப்பாற்றும் வகையில், எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்டுள்ளார். ஆனால் இப்போது சர்வதேச விசாரணைப் பொறிமுறை வேண்டும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குச் செல்வோம் என்று அவர் கூறுகின்றமை முதலைக் கண்ணீர் வடிக்கும் செயலுக்கு ஒப்பானது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுக்கான அரசியல் பயிலரங்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, கந்தையா அருந்தவபாலன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எமது கட்சியின் செயலாளர் நாயகம் நீதியரசர் விக்னேஸ்வரன் கலப்பு நீதிமன்றம் தொடர்பில் வெளியிட்ட கருத்தைத் திரிபுபடுத்தி, சுமந்திரன் சில ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்திருப்பது வேடிக்கையான விடயம். இது முதலைக் கண்ணீர் வடிக்கும் செயற்பாட்டுக்கு ஒப்பானது.

இலங்கையில், வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதிமன்றம் ஒன்றை, சட்ட ரீதியாக அமைக்க முடியாதென்ற இலங்கை அரசாங்கத்தின் வாதம் தவறானது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே, நீதியரசர் பகவதி தலைமையில் அமைக்கப்பட்ட சர்வதேச சுயாதீனக் குழுவை ஓர் உதாரணமாக விக்னேஸ்வரன், சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அறிக்கையில், எந்தவோர் இடத்திலும் பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீனக் குழுவை போன்றதொரு குழுவை அமைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிடவில்லை.

இலங்கையில், உள்நாட்டில் அமைக்கப்பட்ட உள்ளக ஆணைக்குழுவான உதலாகம விசாரணை ஆணைக்குழுவை மேற்பார்வை செய்வதற்காக அமைக்கப்பட்டதே பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன குழுவாகும்.

சர்வதேச தராதரங்கள் மற்றும் விதி முறைகளுக்கு அமைவாக இந்த உள்ளக ஆணைக்குழு செயற்படவில்லையென பகவதி தலைமையிலான குழு அதனைக் கலைத்தமை, இலங்கையில் ஏன் சர்வதேச விசாரணை அவசியம் என்பதையும் காட்டுகிறதென்பதை விக்னேஸ்வரன் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். இதில் சுமந்திரனுக்கு என்ன மயக்கம் இருக்கின்றது என்று விளங்கவில்லை.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டுமென நீதியரசர் விக்னேஸ்வரன், திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளார். ஐ.நா மற்றும் சர்வதேச சமூகத்துக்கு இது தொடர்பாக வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பில் வடக்கு மாகாண சபையில் ஒரு தீர்மானத்தைக் கூட நிறைவேற்றி இருக்கிறார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பில் சதா உலாவரும் சுமந்திரன், இராணுவத்துக்கும் அரசாங்கத்துக்கும் நன்றிக்கடன் செலுத்தும் வகையில் ஐ.நா. சபையில் கால நீட்சியை இலங்கை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொடுத்து, முற்று முழுதாக இலங்கை அரசாங்கம் அடுத்த 2 வருட காலங்களில் தப்பிச்செல்லும் வகையில் செயற்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திவரும்போது அவற்றை உதாசீனம் செய்து இலங்கை அரசாங்கத்தால் கலப்பு நீதிமன்ற பொறிமுறை பிரேரணையில் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு கால நீட்சியை பெற்றுக்கொடுத்துள்ளார். இவ்வாறு, மனித உரிமைகள் சபையில் இலங்கையைக் காப்பாற்றிவிட்டு வந்து, சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் குற்றவியல் நீதிமன்றத்துக்குச் செல்லநேரிடுமெனக் கூறுவது வேடிக்கையான விடயமாகும்.

சுமந்திரன், கதை விட்டுவருவதன் பின்னணியை எமது மக்கள் உணர்வார்கள். சர்வதேச விசாரணை எப்போதோ முடிந்துவிட்டது என்று மீண்டும், மீண்டும் விதண்டாவாதம் செய்துவந்த சுமந்திரன் இன்றைய பத்திரிகை ஒன்றில் ‘சர்வதேச விசாரணை’ பற்றி வலியுறுத்தியமை வேடிக்கையான விடயமாகும்.

தேர்தலை கருத்தில் கொண்டே சர்வதேச விசாரணைப் பொறிமுறையை சுமந்திரன் தூக்கிப்பிடித்துள்ளார் என்பது சாதாரண மக்களுக்கும் இன்று விளங்கும். அரசாங்கத்துக்குத் தொடர்ந்து முண்டுகொடுத்து ஆதரவாகச் செயற்பட்டுவரும் சுமந்திரன், இவ்வாறு வேடிக்கையான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது விடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை அறிந்து இனிமேலாவது செயற்படவேண்டும்.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: