நீதி, பொறுப்புக்கூறல் இல்லாமல் சிறிலங்காவில் நிலையான அமைதி ஏற்படாது – பிரித்தானியா

நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் சிறிலங்காவில் நிலையான அமைதி ஏற்படாது என்று பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில், கரேத் தோமஸ் என்ற உறுப்பினர், பாரிய மனித உரிமை மீறல் குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்த தவறும் சிறிலங்கா மீது எடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்து உரையாற்றிய பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் ஜெர்மி ஹன்ட்,

“ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்துக்கான அமைச்சர், சிறிலங்கா  அரசாங்கத்துடன் தனது தொடர்புகளின் ஊடாக, ஒரு மகத்தான வேலைகளை செய்துள்ளார்.

இந்த விவகாரத்தை எழுப்புவது முற்றிலும் சரியாது. குறைந்தபட்சம், இதுபற்றி இந்த நாட்டில் வாழும் சிறிலங்கா சமூகத்தினர் பலர் அக்கறை கொண்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, சிறிலங்காவில் பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட இப்போது நல்ல நிலைமை காணப்படுகிறது.

எவ்வாறாயினும், நடந்த தவறுகள் தொடர்பான நீதியும், பொறுப்புக்கூறலும் இல்லாமல் அங்கு நிலையான அமைதி சாத்தியப்படாது” என்று தெரிவித்தார்.

சிறிலங்கா இன்னும் அதிகம் செய்ய வேண்டும் – நோர்வே அமைச்சர்

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஏற்றுக் கொள்ளுகின்ற அதேவேளை, இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது என்று நோர்வேயின், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியன் ஹகென் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்ட அவர், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“சிறிலங்காவின் நல்லிணக்க செயல்முறைகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக, நோர்வே மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. நாங்கள் அதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்.

காணாமல் போனோருக்கான பணியகத்துக்கு நான் சென்றிருந்தேன். அது முக்கியமான பணியை மேற்கொள்கிறது.

மோதல்கள் நிகழ்ந்த உலகின் ஏனைய நாடுகளைப் பார்த்தால், தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்ற பதிலை குடும்பத்தினருக்கு வழங்குவது, காயங்களைக் குணப்படுத்துவதற்கு முக்கியமானதாக இருந்துள்ளது.

எனவே காணாமல் போனோருக்கான பணியகம்  முன்னோக்கிய ஒரு படி ஆகும். அது முக்கியமான பணியைச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. அதன் முன்னேற்றத்தை மிகவும் நெருக்கமாக அவதானித்து வருவோம்.

வடக்கு, கிழக்கில் கணிசமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

முன்னேற்றங்கள் ஏற்றுக் கொள்ளுகின்ற அதேவேளை, இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும்.” என்றும் அவர் அவர் தெரிவித்துள்ளார்.

-puthinappalakai.net

TAGS: